பொருளடக்கம்

23. சேவல் சண்டை

கட்டுரை 23 / 26

சேவல் சண்டை

Cockfight

அச்சுப் பக்கம் 114–114

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

இயலூர் போய் வீடு வந்த இனியனிடம் “என்னத்தான் வாங்கி வந்தீர்?” எனக் கேட்டு பறந்து வந்தாள், ஏந்திழையாள். இல்லத்தின் புதுச்சுவையைத் தெவிட்டாமல் உண்ணுகின்ற இளங்காதற் பெட்டகங்கள், இனியன் - ஏந்திழை, இருவரும் தமிழ்க் குலத்தார் - எழிற் கோலத்தார்!

“வானவில்போல் அழகு காட்டி வளைந்திருக்கும் தோகை கொண்ட ஆண் கோழியொன்று வாங்கி வந்தேன்” எனச் சொல்லி, மடி மீது இருந்து கொண்டு மற்றதமிழன் சாயல் காட்டும் சேவல் தன்னைப் பார் என்றான். “பாகற் பழம் போன்ற கொண்டைதனைக் கண்டாயோ பெண்ணே! துடுப்பட்ட நாக்கு போல் தொங்குகின்ற தாடையின் அழகுபார் கண்ணே! சேரனின் நடை காட்டும்! படை கண்டு கலங்காத வீரனின் தோற்றம் காட்டும்!” எனப் புகழ்ந்தான்

“சரியத்தான் ஒப்புகிறேன்; பெட்டை யொன்று வாங்கி வந்தாலும் முட்டையிடும் . . . இதைக் கொண்டிருந்து பயன் என்ன ?” ஏந்திழையின் பேச்சுக்கு முதற் பதிலாய் நகை முழக்கிப் பின்னும் கூறலானான் “துப்புரச் சிவந்த’ வாய்ப் பேரழகே! பசு மாடு, பெண்ணாடு, பெட்டைக் கோழி - வளர்ப்பதிலே பால், முட்டையெனப் பயன் காணும் குறிக்கோள் ஒன்று மட்டும் உண்டு!... நான் சேவல் வாங்கி வந்த நோக்கத்தை உன் செவிதனிலே போட்டால் ஒப்பிடுவாய் என் செயலை!” எனச் சொன்ன அத்தானின் தோளில் சாய்ந்து, “புரிந்து கொண்டேன் உமது உள்ளம்- பெண்ணைப் புகழ்வதற்கு மயில் தன்னை அழைத்திடுவார்; - இனிமேல் ஆணைப் புகழ்வதற்கும் சேவல் தன்னைக் காட்டிடலாம் என்பதுதான் உமது எண்ணம்!” எனச் சிரித்தாள்.

“அதிலும் தவறுகின்றாய் என் அன்பே ஆணுக்குச் சேவல் தன்னை ஒப்பிடலாம்!... மறுப்பாரில்லை! ஆனால் ஒன்று; பெண் குலத்தைப் புகழ்வதற்கும்

ஆண் மயில் தான் தேவைப்படும் - அதையும் உணர்ந்திடுவாய்!” என்று கூறி அவள் முகக் கடுப்பதற்குள் முத்தத்தால் சிவப்பாக்கி முடித்துவிட்டான் கோபந்தன்னை!

“ஏந்திழையே! இன்று காலை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றை உன்னிடத்தில் சொல்லாமல் இருப்பதற்கு முடியவில்லை! என் மாமன் செங்கண்ணன் இருக்கிறாரே; அவருக்குத் தினந்தோறும் தேகத்தில் கொழுப்பேறி நாக்கு வழி சிந்துகின்ற காட்சிதனை நான் நேராக அனுபவித்தேன். சேவற் சண்டையிலே பெருவீரர் எனப் புகழ் மண்டிவிட்ட காரணத்தால் - என்னமோ தானேதான் உடல் வருத்திப் போரிட்டு வென்றது போல் அரிவாள் மீசை தன்னை முறுக்கி விட்டு, அன்றொரு நாள் இலங்கையினை ஆண்டிருந்த இராவணன் போல் எண்ணிக் கொண்டு நடக்கின்றார்; தொலையட்டும் கவலையில்லை! நான் சேவல்தன்னை வாங்கிக் கொண்டு வருகின்ற வழியினிலே மடக்கிக் கொண்டு, ‘என்னப்பா இளவெட்டு! சண்டைக்குப் பழக்குதற்குக் கோழி வாங்கிப் போகின்றாயோ ? எனக் கேட்டார். “இல்லை”யென்றேன்; ‘என்னதான் பழகினாலும் என்னை வெல்ல ஈரேழு லோகத்திலும் ஆள் இல்லை! வளர்த்துப் பார் உன் சேவலையும்! என் கோழி மூச்சுப்பட்டால் உன் கோழி ஒரு காதம் ஓடிவிடும்’ எனத் தற்பெருமை மலைமீது ஏறி நின்று சண்டைக் கோழி தரும் பெருமையாலே மண்டைக் கனம் கொண்டு விட்ட மாமன் கூவலானார். நானும் பேசலுற்றேன்;

சேவற் சண்டையிலே பெற்ற புகழ் பெருவீரம் என நினைத்து - சேரன் செங்குட்டுவன், கனகவிசயர் மீது வீசி நின்ற கனல் தெறிக்கும் வார்த்தைகளைப் பேசாதீர் மாமா! கோழி தன்னை ஆசையாய் வளர்ப்பதற்கு வாங்கி வந்தேன் - கோழ்மையையும் இனங்கொள்ளச் செய்கின்ற உமது பேச்சால் அந்த எண்ணம் மாற்றிக் கொண்டேன். சூளுரைப்பேன்; ஏற்றுக் கொள்ளும். துர் நீதான் எனச் சூட்டிக் கொண்ட பட்டத்தை, எண்ணி இரு திங்கள் முடிவதற்குள் இழக்கச் செய்வேன். இன்று முதல் எந்தன் கோழி சண்டைக்கோழி! இதையறிவீர் - வருகிறேன்” எனச் சொல்லி வந்துவிட்டேன் - ஊர் முழுவதும் பரவிவிட்டதடி இச்செய்தி!

“எனத்தான் புது வம்பு! கோழிச் சண்டையினைத் தொழிலாய்க் கொண்ட செங்கண்ணன் - அவரிடத்தில் வெல்வதென்றால் சுலபமா ? வேண்டாமே வீராப்பு! தோற்றுவிட்டால் வெளியிலே கிளம்புதற்கும், வீதியிலே நடப்பதற்கும் வெட்கம் - வெட்கம்! வேண்டாம் அன்பா பிடிவாதம் - விட்டு விடுக!” என்றாள்.

“தமிழன் சூளுரைத்துப் பின் வாங்கினான் எனில் தலை குனிய நேராதோ-தங்கமே! அஞ்சாதே! நம் கோழி வீரக்கோழி என்பதற்கு ஒரு சான்று! இதன் தாய்க் கோழி, ஒரு நாள் குஞ்சுக் கூட்டமுடன் இரை தேடப் போகும்போது, கொத்த வந்த பருந்து ஒன்றை எதிர்த்துத் துரத்தியதாம். மற்றொரு நாள் வஞ்சக நரியொன்றின் வயிற்றுக்கு விருந்தாகும் நெருக்கடியில் போராடித் தப்பியதாம்! அதன் பிள்ளை இந்தச் சேவல்!”

“சரியத்தான் - சேவல் பேச்சு முடியட்டும்... பெட்டைக் கோழியின் துயர் தீர்ப்பீர்; வாரும்!” என்றாள் பஞ்சணைக்கு! பருவ ராணி தந்திட்ட பழச்சுவை யமுதங்கூட அவனுக்குச் சுவைக்கவில்லை; மலர் மெத்தை இன்பத்தைத் தரவும் இல்லை; வீணையும் நாதமும் ஆகிவிட்ட நிலையில் கூட ஏந்திழையின் செங்கண்ணைப் பார்த்தவுடன் செங்கண்ணன் நினைவாலே குழப்பமுற்றான். எப்படியும் வெற்றி பெற்றிட வேண்டுமென்ற துடிப்பாலே செயல் புகுந்தான். சேவலுக்குப் போர்ப் பயிற்சி துவங்கிற்று.

தாயின் பேரைப் பிள்ளை எடுக்குமென்ற தளராத நம்பிக்கையொரு புறமும் - செங்கண்ணன் கோழிப் போர்மேதை என்ற புகழுரைகள் மறுபுறமும் நெஞ்சத்தைத் தாக்கிடவே, நாள் நெருங்க நெருங்க நடுங்கலானாள் ஏந்திழையாள்!

போர் நாளும் வந்தது - ஊர் மக்கள் கூடி விட்டார். இருநூறு பொன் பந்தயத் தொகையாக இரு சார்பும் கட்ட வேண்டுமென நிபந்தனையும் தந்தார்கள் ஊர்ப் பெரியோர்! நானூறு பொன் கொண்ட கிழியொன்று தொங்குகின்ற மண்டபத்தில் ஊரார் அனைவருமே நிறைந்திருந்தார்.

இனியன் தன் சேவற் கோழியுடன் களம் வந்தான், “இளங்கோழி! ஆனாலும் செங்கண்ணன் கோழிபோல் பலமுள்ள கோழியாய்த் தெரியவில்லை” எனச் சொன்னார் சில கிழவர்! அதைக் கேட்டாள் ஏந்திழை! மேனியெல்லாம் வியர்வையாலே நனைந்து விட்டாள்!

இனியனின் சேவல் நிற்கின்ற இடம் நோக்கி, ராஜநடை போட்டவாறு செங்கண்ணன் கோழி வந்தவுடன் ஊர்ச் சிறுவர் கை கொட்டி வரவேற்றார். ஏந்திழைக்குப் பொறுக்கவில்லை. செங்கண்ணன் கோழி, உயரத்தில் இனியன் கோழிதன்னை மிஞ்சுவதாய் நின்றிருந்த காட்சி அவள் உள்ளத்தை உலுக்கிற்று.

போர் ஆரம்பம். ஒன்றையொன்று கொத்துதற்கும் பிராண்டுதற்கும் காலாலே சீறுதற்கும் முயற்சித்து மோதின! சிறகுகள் காற்றில் பறந்தன! எகிற் கொண்டைகள் நிமிர்ந்தன! சுழற் காற்று போல் இரண்டு சேவலும் சுழன்று சுழன்று போர் புரிந்த வேகத்தை ஊரார் வியந்தனர்!

இனியன் கோழித் தலையினிலே ஒரு கொத்து! குருதி வெள்ளம்! ஆனாலும் அயரவில்லை. முதுகினிலே மற்றொரு கொத்து! வலி பொறுக்கவில்லை. சற்றுச் சோர்வு!

அந்தச் சோர்வு கண்ட நேரத்தில் செங்கண்ணன் கோழி ‘மளமள’ வென அதன் மீது பறந்து பறந்து கொத்தியது! சீறியது! இனியன் கோழி கத்தியது! ஏந்திழைக்கோ நிற்க இயலவில்லை. அதைவிட்டு ஓடிவிட்டாள்.

அவமானம் சூழப் போகிறதே என நினைத்து இனியனுமே கலங்கலுற்றான். ஏந்திழை ஓடியதைக் கண்டு மனம் நொந்தான். செங்கண்ணனின் சிரிப்பு வலுத்தது. ஊர் மக்கள் கை கொட்டி ஆர்ப்பரித்தார்.

இனியன் கோழி இப்போது வீழ்ந்துவிடும் - செத்துவிடும் எனச் சொல்லி ஒரு கிழவர் வாய் மூடுவதற்குள், செங்கண்ணன் கோழி மீது அக்கோழி ஒரு பாய்ச்சல் நடத்தியது. மறு பாய்ச்சல் - செங்கண்ணன் கோழிக்கு வயிற்றினிலே ஒரு காயம்! அடுத்து ஒரு மோதல் - பாய்ச்சல்! . . . . இனியனுக்குப் பெரு மகிழ்ச்சி!

திடுமெனச் செங்கண்ணன் கோழி விலகிச் சென்று, இனியன் கோழி மேல் பாய்வது போல் போக்குக் காட்டி களம் விட்டு ஓடிற்று! தோல்வியால் முகம் தொங்க விட்டான் செங்கண்ணன்.

அதே ஊர் மக்கள் இனியனுக்கு மாலையிட்டார். மாலைத்தன்னைக் கோழிக்கு அணிவித்து நானூறு பொன்னோடு வீடு வந்தான். குப்புற வீழ்ந்திருந்த ஏந்திழைக்கு வெற்றிச் சேதி கிடைத்திடவே - அத்தானை எதிர் கொண்டு தழுவிக் கொண்டாள். விடவே மறுத்தாள். முத்தமழை - காதல் பெருவெள்ளம் உடைப்பெடுத்து ஓடிற்று; இன்பப் பிரவாகம்.

கோழிக்குக் களைப்பாற வேண்டுவன செய்துவிட்டு, “நானூறு பொன்னுக்கும் கோழிக்கே ஒரு கூண்டு வாங்கிடுவீர்! . . . இருப்புக் கம்பியுள்ள கூண்டு இனி நம் கோழிக்குக் கூடாது; வெள்ளிக் கம்பியுள்ள கூண்டொன்றே தேவை” என்றாள். “சரி” என்று கிளம்பிவிட்டான் கூண்டு வாங்க!

மறுநாள் காலையிலே வெள்ளிக் கூண்டுடனே வேல் விழியாம் ஏந்திழையைக் கூப்பிட்டான், “பார்த்தாயா

கூண்டழகை” எனக் காட்ட! அவளும் வந்து இருவருமே இருப்புக் கூண்டினிடம் சென்று அன்புச் சேவல் தன்னை இடம் மாற்றிக் குடியேற்றக் கூண்டைத் திறந்தார். வெள்ளிக் கூண்டினிலே வாழ்வதற்கு சேவலுக்கு விருப்பமில்லை போலும் - அதனாலே அது மாண்டு கிடந்தது இருப்புக் கூண்டினிலே!

கலைஞர் மு. கருணாநிதி · மீசை முளைத்த வயதில். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்