கட்டுரை 24 / 26
மடல்
Letter
அச்சுப் பக்கம் 122–122
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
அன்பு, ஒன்பதாம் மடல் தீட்டுகின்றேன். இன்பவெள்ளம் என்றென்றும் உண்டென்று கை பிடித்தீர். துன்ப மழை! சோகத் தொடர்கதை! இதற்குத்தான் பெண் பிறந்தாய் எனக் கூறிவிட்டால் எதற்குத்தான் எழுதப் போகிறேன்! இதய வலி தீர்ப்பதற்கு எப்போது வருகிறீர் - மருந்து முகத்தோடு - எனக் கேட்டால்; விருந்துண்ண அழைக்கும்போது வீண் மதிப்பு எனக்கதான் காட்ட வேண்டும்!
போர் முடிந்து களம் தோய்ந்த குருதியெல்லாம் காய்ந்து பல நாளாயிற்றென்றும் - காக்கை கழுகொன்றும் அங்கு வட்டமிடுவதில்லை என்றும் கால் ஒடிந்து திரும்பியிருக்கும் வீரன் சொன்னான். “களத்தினிலே உன் காதலன் பெற்ற புகழ் பெரும் புகழ் பெண்ணே!” என்று அவனே சொன்னான். அதையும் கேட்டேன்.
கண்ணேயென்று அழைப்பொன்றும், அது தொடர்ந்து கட்டழகுக் காலையொன்றும் வீட்டுக்குள் புகுந்து என்னை வேட்டையாடும் வேலை மீண்டும் வாராதோ என இருந்த எனக்கு அச்சேதி தித்திப்புத் தான்! ஆயின் என் ? “எதிரிகளை அழித்துவிட்டுத் தழும்புகளில் உந்தன் இதழ் மூலிகையால் ஒத்தடம் கொடுத்துக் கொள்வேன்!” எனக் கழன்று சென்றீர்!
“வேலெடுத்து வீசும்போது உந்தன் விழிதான் நினைவில் நிற்கும்! வாளெடுத்துச் சுழற்றும்போது உந்தன் ஒளி வீச்சு! கிளிப் பேச்சு!” - விடை பெற்றுப் போவதற்கு வாரி இறைத்தீர் பொய்மைகளை என்ற உண்மை இன்றன்றோ தெரிகிறது! இரவு நேரம் பாசறையில் எப்படித்தான் பொழுது போமோ என ஏங்கி நின்றீர்; வீங்கிய புயத்தினிலே நான் சாய்ந்து நின்றேன்! அவர் தானோ நீர் என்று ஐயம் கொள்ளுகிறது என்னை! வெள்ளைத் தாழையின் இதழ் பறித்துச் செண்பகப் பூவின் செழுமை நிறை அரும்பைச் செம்பஞ்சுக் குழம்பில் தோய்த்து மடல் எழுதிய மாதவிக்கு மனமொடியும் பதிலொன்றை வாய் மூலம் - வசந்தமாலை மூலம் அனுப்பினானே கோவலன்; அவனுக்கு அண்ணன் அத்தான் நீங்கள்!
“குமிழம்பூ முக்கும் குவளை மலர்க் கண்ணும் கொண்டும், கொவ்வைப் பழம் போன்ற வாய் மொழியால் எனை ஏமாற்றிய மாதவியின் கண்கூடுவரியை நானறிவேன்!” என்று பழித்துரைத்தான்! அதனினும் கொடுமையைத்தான் நீங்கள் காட்டும் மௌனம்! “வா” என்றால் வந்து, “போ” என்றால் போகும் நடிப்புமிகும் காண்வரிக் கோலத்தை அந்த கணிகையிடம் கண்டிருக்கிறேன் எனக் கற்புமணி மாதவியை இகழ்ந்துரைத்தான்! அவனினும் தீயவரே நீங்களென்று செப்புகின்றேன்; என் சிந்தையற்று இருக்கின்றீர், அதனாலே!
“மாலைப் பொழுதில் காதல் மயக்கத்தால் நான் வாடும்போது மயிற் சாயலும் அன்ன நடையும் காட்டாது மறைத்து, ஏவற் பெண்ணின் கோலத்தோடு என் எதிரே வரும் மாதவியின் உள்வரியாடலை உணர்வேன்” என்று உறுமி நின்ற கோவலனினும் ஒருபடி உயர்ந்தவர் ஏமாற்றுவதில் நீங்களென்றேன், நீண்ட நாள் மறந்து விட்டதால்!
“மேகலை ஆர்ப்ப - சிலம்பு கொஞ்ச - காதல் மிஞ்ச என் முன் வந்து சுருண்டு நின்று, என்னைத் தழுவாமலே போய்விடும் மாதவி கற்ற புறவரி எனக்குத் தெரியும்!” எனப் புகன்ற அந்த வணிகனினும் மேம்பட்ட வஞ்சகர் நீங்கள், வஞ்சியெனக்கு ஒரு வரியும் எழுதாத காரணத்தால்!
ஊடலுக்கு சொன்ன சொல்லை, உண்மைக் கோபச் சொல் எனக் கொண்டு - கிளர்வரிக் கோலம் புரியும் மாதவி என வருணித்தானே; அவள் மடல்
கண்டு . . . அவனை விட அறியாயக்காரர் அத்தான் தான் நீங்கள், என் அவதிக்கு மாற்றுதர விரும்பாத நிலையினால்! பிரிந்தபோது வருந்துகின்ற தேர்ச்சி வரியும், பிரிவிடம் காதல் பற்றி முறையிடும் காட்சி வரியும், ஆளன் வரவில்லையென்று உற்றாரிடம் ஆறுதல் பெற விழைந்து ஆற்றொணாத் துயர் காட்டும் எடுத்துக் கோள் வரியும் கற்றிருக்கும் மாதவியை அறிவேன் நன்கு - எனச் சொன்ன கோவலனுக்கும் உம்மை உவமை காட்ட முடியாது அத்தான்; ஏனெனில் அவன் மாதவியைக் கூடியவுடன் போய்விட வில்லை ... உலக இன்பம் ஒவ்வொன்றும் பயிலுகின்ற கலைக்கூடம் - அங்கு மாதவியும் கோவலனும் மாறிமாறி ஆசிரியத் தொழில் பூண்டார்! நாடக அமைப்பில் உள்ள எட்டுவகை வரிக்கூத்தும் கற்றவள் மாதவியென்று பழித்துக்கூறும் கோவலனும் அவளழகைப் பாராட்டத் தவறவில்லை. அத்தனை நாள் ஒன்றாய் இருந்திட்டார், உம்மைப்போல் ஒரு கிழமை முடிந்தவுடன் வரும் பகையை ஒட்டுதற்கு ஓடவில்லை.
கோவலனாய் ஆகி விட்டீரோ என நான் நினைப்பதற்குள் வந்துவிடுவீர் என்றே இந்த ஒன்பதாம் மடலை இறுதியாக அனுப்புகின்றேன். கயல் எழுதி, வில் எழுதிக், கார் எழுதிக், காமன் செயல் எழுதித் தீர்ந்த முகம் திங்களோ காணீர்! என்று சிலம்புத் தமிழிலே சிற்றின்பச் சோலையிலே வார்த்தைகளைச் சிந்துவீரே; ஒரு மடல் எழுத நேரமின்றிப் போனதோ அத்தான்! போங்களத்தான்; பொல்லாத அத்தான்!
சண்பகம், பச்சிலை, கருமுகை, வெண்பூ, மல்லிகை, செங்கழுநீர்ப் பூக்கள் கொண்டு மாலை கட்டி, அதனுள் மடல் வைத்துக் காதலனுக்கு அனுப்பிய மாதவிக்காவது ஆறுதலுக்கு மழலை மணிமேகலையிருந்தாள்! எனக்கு யார்தான் இருக்கிறார்கள் ? அதுவுந்தான் இல்லையே!
“மன்னுயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
இன்னிள வேனில் இளவர சாளன்;
அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றிய
திங்கட் செல்வனும் செவ்வியன் அல்லன்;
புணர்ந்த மாக்கள் பொழுது இடைப் படுப்பினும்
தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும்,
நறும்பூ வாளியின் நல்லுயிர் கோடல்
இறும்பூது அன்று இஃது அறிந் தீமின்;”
மாதவி கோவலனுக்கு எழுதிய மடலின் கருத்தே எனக்கும் பொருந்தும்!
கூடி மகிழ்ந்த காதலர் சிறுபொழுது கூடாமல் மறந்தாலும், பிரிந்த காதலர் தம் துணைவியை மறந்தாலும், இளவேனிலும் நிலவும் மென்மலர்
அம்புகளால் உயிரைக் கொல்லும் என்பது புதிய செய்தியல்ல என்பதைத்தான் மாதவி கோவலனுக்கு மடல் வாயிலாகத் தெரியப்படுத்தினாள். நானும் அதையே நினைவுபடுத்துகிறேன்.
- அன்புக் காதலி
●
கலைஞர் மு. கருணாநிதி · மீசை முளைத்த வயதில். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்