கட்டுரை 25 / 26
ஆண்டு விழா
Annual Festival
அச்சுப் பக்கம் 128–128
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
அவள் : “கிளியென்னைத் தனிவிடுத்துப் புலி வேட்டையாடுதற்குப் போகின்ற அத்தானே! துளிக்கூட இரக்கமில்லை உந்தன் நெஞ்சில் ?”
அவன் : “உளிப்படா உயிர்ச் சிலையே! ஒளி விளக்கே! விடுபட்டிருக்கின்ற அம்புக்கெல்லாம் வேலை தரக் காடு செல்வேன்; விடை கொடு - விரைவில் வருவேன்.”
அவள் : “அம்பென்றாய் அன்றொரு நாள் எந்தன் கண்ணை - இக்கணையைத் தூங்கவிட்டு அக்கணைக்கு வேலை தர அடவிப் பயணம் - அடுக்குமா அத்தான் இது ?”
அவன் : “வக்கணைக்காரி! இக்கணமே இந்தா முத்தம்; எண்ணிக்கொள் - இந்தப் பேச்சுக்கு எந்தன் பரிசு!”
அவள் : “முத்தத்தால் முழு உடலும் கொதிப்பேறி இதயத்தின் எக்கமிகு சத்தத்தால் எந்தன் காதெல்லாம் செவிடுபடும் செயல் புரிந்து செல்லாதே வேண்டாம்; என்னைத் தீண்டிக் குளிரேற்றிப் பின்னர் நடுங்கும் உடலுக்குப் போர்வையாய் உதவாமல் போய் விடுவாய் - வேண்டாம்; வேண்டாம்!”
அவன் : “திங்களியே! தீண்டுவதால் குளிர் என்றாய்; முன்பு தீப்போல் கொதிக்குமென்றாய் உந்தன் மேனி - இதில் எதை நான் நம்புவது ?”
அவள் : “குளிர் பொழிகின்ற நிலவினுக்கும் வெப்பமுண்டாம் - அதுதான் குறள் முழக்கும் மூன்றாம் பாலினுக்கும் முழு பொருத்தம்!”
அவன் : “உன்னைக் கைப்பிடித்து ஒரு கிழமை ஊமையாய்க் கிடந்தாய் - ஆண்டு ஒன்று
முடிவதற்குள் அனைத்துலகும் வெற்றி கொள்ளும் கனிப் பேச்சு கொட்டுகின்றாய்!”
அவள் : “இன்னும் என்னை ஊமையாய்ச் செய்வதற்கு ஒரு வழி உண்டத்தான்...”
அவன் : “என்ன கண்ணே ?”
அவள் : “பேச்சற்ற உலகம் ஒன்று; ஆண்டவனால் அமைவதில்லை அவ்வுலகு; ஆண் பெண் இருவருமே படைக்கின்ற புது உலகு - போவோமா ?”
அவன் : “விழியம்பு காட்டி, வில் புருவம் வளைத்துக் காட்டி, இதழோரம் அமுது காட்டி, இன்பக் கரையோரம் நடப்பதற்கு அழைக்கும் பாவாய் - இரு புலியைக் கொன்று வந்தால் இறைவன் தரும் பரிசுப் பொருள் இந்த வீட்டெல்லாம் குவியும்! இரு, ஒரு நாள் தனியாக - நாளை வருவேன்!”
அவள் : “தனியாக இருப்பதில்லை; கனியாமல் காயாக வளர்ந்து வரும் அன்பின் சின்னம் அடி வயிற்றில் விளையாடும் - அதன் எழிலைக் காணாமல் நான் தவிப்பேன் - ஆயினும் எல்லையில்லா மகிழ்ச்சியோடு பிள்ளை தரும் தொல்லையிலே இன்பம் காண்பேன்!
நீ அருகிருந்தால் உந்தன் கிள்ளை என் வயிற்றுக்குள் ஆடுகின்ற ஆட்டந்தன்னை நாம் இருவருமே சுவைக்கலாமே!”
அவன் : “சுவைப்பதற்கு அட்டியில்லை சொன்னமே! புலி இரண்டு கொன்று விட்டால் புவியாளும் சோழனுக்குப் பெருங் களிப்பு! எனையாளும் உந்தன் முத்தத்துக்குப் புலி நகத்தால் பொற்றாலி! வரப்போகும் ‘புது வாழ்வு’ புலிப்பல் நகையால் பொலிவு பெறும்!”
அவள் : “போகட்டும் - பொழுது போவதற்கும் விடிவதற்கும் இடையிலே என்னோடு இருந்துவிட்டுச் சேவலோடு எழுந்திருந்து நடப்பதற்கும் மறுப்பு தானோ ?”
அவன் : “மறுப்பேது; பருப்பு நெய் பாகுந்தேனுங் கலந்து தரும் உண்டுதனை வெறுப்பதற்கு ஆளும் உண்டோ ? ஆயின் ஒன்று - இரவோடு சென்றால்தான் ஒளிந்திருந்து காட்டினிலே புலி பிடிக்க ஏதுவாகும்!”
அவள் : “சரியத்தான் சென்றுவா நீ - எரியெடுப்பாய் எந்தன் மனந்தனை ஆக்கிவிட்டு ‘எலி’ பிடித்து வரப் போகின்றாய்; போ - போ - உடன் போய்விடு!”
அவன் : “மின்னலுக்கு உவமையாகும் இடையழகி! இடைதனிலே இயற்கைக் குடமேந்தி
நடக்கின்ற பாங்கு கண்டு இதயம் தந்தேன். உன் தந்தை மணம்புரியப் பொருத்தம் பார்த்தார். என் மலைத்தோளில் உன் பழக்கன்னம் பதிவதற்குப் பொருத்தமுண்டா ? அதைப் பார்க்கவில்லை ஆரூடத்தில்! தோஷமொன்று தொங்குவதால் ‘பிள்ளைப் பேறு’ வாய்ப்பதற்கு இடமே இல்லை - இதைச் சொன்ன நிமித்திகனை இழுத்துரைத்துக் குடும்ப விளக்கை ஏற்றி வைத்தோம் - இந்த ஆண்டில், இறுதியிலே குலக் கொடியைப் போற்றி வளர்ப்போம்... இதற்கிடையே இன்னொரு நாள் விலகியிருப்பதற்கு விடை தருவாய்!”
அவள் : “ஒரு நாள் பிரிவதற்கு அழவில்லை; கொடும் புலியின் பிடியில் பட்டால் அரும் பொருளை இழந்து நிற்பேன்-ஆருயிரைப் பறிகொடுப்பேன் அதனால்தான் கெஞ்சுகிறேன் - ‘விஷப்பரீட்சை வேண்டாமென்று!’”
அவன் : “அரசனது ஆண்டு விழா - அன்று வேடிக்கை பார்ப்பதற்கு மட்டுமல்ல; வெகுமானம் பெறுவதற்கும் போகலாம் அன்பே!”
அவள் : “ஆண்டு விழா அரசனுக்கு இப்போது - இந்நாளில் புலி வதைத்துப் பரிசு பெறத்
துடிக்கின்றாய் - பொன்னான பரிசொன்று நான் தர இருக்கின்றேன்; நாலு திங்கள் பொறுத்துக் கொள்வாய்!”
அவன் : “சின்ன மலர் - வண்ண மயில்-தமிழ் மழலை - தங்கக் கட்டி -”
அவள் : “கன்னல் நிகர் செந்தமிழைக் கரத்தில் ஏந்தி, எண்ணமெல்லாம் இனிப்பேறும் உந்தன் முன்னே இதழ் முழுதும் சிரிப்பு விளக்கேற்றி நின்றிடுவேன் - அதைவிடப் புலி கொன்று பெறப் போகும் பெரும் பரிசு சிறப்பானதோ ? செப்பிடுவாய்!”
அவன் : “கண்ணமுது காட்டுகின்ற என் அருமைத் தங்கம்! கட்டழகும், நாம் பெற்ற மொட்டழகும் இன்பம் எனினும், காட்டினிலே ஒளிந்திருந்து நாட்டழகைக் கெடுக்கின்ற புலி கொல்லல் பேரின்பமன்றோ!”
அவள் : “பல் வரிசை முத்தாரம் எனப் புகழ்வாயே; அதைவிடப் படைவரிசை பெரிதாகி விட்டதோ உனக்கு ?”
அவன் : “முத்தாரம் வேண்டாமெனச் சொல்ல வில்லை; உன் முத்த ஆரத்தை வெறுக்கின்ற துறவியுமல்ல; உனை அடையாமல் இருந்தால் நான் எடுத்தது பிறவியுமல்ல - எதற்கும் நேரம் வேண்டும்; நிலையை உணர வேண்டும்
- முரசொலிக்கும் நேரம்; முதுகாட்டில் புலியொழிக்க அணிவகுப்புக் கிளம்புகின்ற வேளை - முத்தாரம் கண்டுவிட்டு, முரசொலிக்கு செவிமடுப்பேன் - நாடு காக்கும் நல்ல செயல் முடிப்பேன் - செயல் முடித்த பின்னர்; சிந்தைக்கு விருந்தாக முத்தாரம் கொடுப்பேன் உனக்கு!”
அவள் : “அறிவு தெளிந்தத்தான் எனக்கு - நாடு மக்களைக் கொன்றொழிக்கும் காட்டு விலங்கழிக்கப் போவதுதான் தமிழ் மகன் கடமை!... அதோ முரசு ஒலிக்கிறது - புறப்பட்டு விரைவில்!”
அவன் : “அதை; வாயின் முத்தாரம் காட்டிச் சொல்வாய்!”
●
(அவள் புன்னகை தவழ அவனை வழியனுப்பி வைக்கிறாள்)
கலைஞர் மு. கருணாநிதி · மீசை முளைத்த வயதில். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்