கட்டுரை 26 / 26
மயிலிறகு
Peacock Feather
அச்சுப் பக்கம் 135–135
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
சைவநெறி வென்றார் - சமணர் தோற்றார் எனப் பாண்டி மண்டலத்துக் கொலுமண்டபம் தீர்ப்பளிக்க, உடன் அமைச்சர் குலச்சிறை, கண்புடை பட்டு நீண்ட கழுத்தறி நிறையில் எண்ணிப்பெருங் குற்றத்து எண்ணாயிர்வர்களையும் ஏற்றிக் கழித்து நாயனார் ஆனார். இக்கொடுஞ்செயலுக்குப் பின்னர் பாண்டிய நாடு வாய் திறக்கப் பயந்து கிடந்தது. மிச்சமிருந்த சமணத் துறவிகள் வெளியிற் கிளம்ப அச்சங் கொண்டனர்.
சமணந் தழுவி, இல்லறமுந்தழுவி நிற்கும் பொதுமக்கள் மனந்திறக்க வழியில்லை. குலச்சிறையின் கொடுங்கோல், உரிமைக் குரலுக்குப் பெருந்தடை விதித்தது. அரசு எவ்வழியோ அவ்வழியே குடிகளும் ஆகிட வேண்டுமென ஆட்சி ஆணை பிறப்பித்தது.
இந்நிலையில் தமிழகம் இருக்கின்ற வேளையில் ஒரு நாள் !...
படை முகத்து வீரனவன்; படைக்கலனைப் பார்வையிலும் பால் நிலவை முகத்தினிலும் பெற்றிருக்கும் பாவை அவள்! ஆணொருவன் பெண்ணொருத்தி யென்றால் அங்கே காதலுக்குக் கதவு முடியா இருக்கும்! நலங்கிள்ளி-அந்த நல்ல தமிழ் இளைஞனுக்குப் பெற்றோர் இட்ட பெயர்! பேரழகியோ பீலிவளையென்னும் பெயர் பெற்றாள்! சந்தித்தார்... சிரித்து சிந்தித்தார்... முந்தித் தருவது யார் முத்தம் எனும் விதத்தில் வளர்ந்து விட்டார், “பந்திப் பார்ப்பனரின் வயிறு போல் பொற்கிழி வேண்டாம் - அந்திச் செவ்வானத்து எழில் காட்டும் கன்னம் தருவேன் அட்டியின்றி! ஆனாலும் அத்தான், குலக்கணிகையர் மரபினிலே வந்தாலும் மந்தி கைமாலையாய் மாற மாட்டேன் - இஃதுறுதி” யென்று சொல்லி ‘இச்’ சென்று பேச்சை முடித்திட்டாள் சித்திரச் செந்தமிழாள் பீலிவளை!
“தேன் துளியால் என் இதழை நனைக்கின்ற திருவே! வான்வெளியில் வட்டமிடுகின்ற நிலவே!
கணிகையர் மரபென்றாய்... கண்ணீரால் ஓவியம் கன்னத்தில் தீட்டுகின்றாய்... கலங்காதே! தனிமையில் கிடந்திட்ட எனக்கு இனிமையை வழங்குகின்ற தளிரே! தளிர் மேவும் பனியே! தமிழ் முச்சே!
யாயும் ஞாயும் யாராகியரோ! எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்! யானும் நீயும் எவ்வழி அறிதும்! செம்புலப் பெயல்நீர் போல அன்புடை நெஞ்சங் கொண்டவரே நாம்! அஞ்சாதே! சாவாலும் நமைப் பிரிக்க ஆகாது!” எனச் சொல்லி இதழ் அமுதம் தந்தான். திருமயப் பெருகின்ற சுயநல நோக்கோடு!
பூக்காடு தாண்டி, சமணரைச் சாக்காட்டில் தள்ளிவிட்ட கழுமரக் கும்பல் தாண்டி, வேக்காட்டு மனத்தினனாம் குலச்சிறை கோலோச்சும் தலை நகர வீதி வந்தார் கலையழகு காண்பதற்கும், காதல் சுகம் வளர்ப்பதற்கும்!
இடையிலாப் பெண்டிர் தங்கள் நடையிலோர் நாட்டியம் காட்டி, மடையெலாங் கடந்து வந்த வெள்ளம் போல் பாய்ந்து சென்றார், பச்சை விரிக்கின்ற பாண்டிய நாட்டு வீதியிலே!
குடை நிழற் பாண்டியனை வாழ்த்திக்கொண்டு ஒரு கும்பல், படைவீரர் புடைசூழப் பவனிவரும்!
சிவசக்தி சிலையுடனே தேரொன்று சீரோங்கிச் சித்திரவீதியிலே நகர்ந்தபடி யிருக்கும்!
விழா அனைத்தும் கண்டாள். அங்கு என்னை அணைத்த சுகம் இதில் எதிலுமேயில்லை யென்றாள். அவன் மகிழ்ந்து இதழ் குவித்தான்; பிறகு “மறந்து விட்டேன்; இது வீதி” யென்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டான். மயக்கம் தெளியக் காதல் வெறியினிலே தடுமாறி நடக்கின்ற அவர்கள் முன்னே; மயில் தோகை பிடித்தவாறு ஒரு கிழவர் சமணத் துறவி வருகின்ற காட்சி கண்டார்.
கால்பட்டு உயிரிழக்கும் எறும்பினங்கள் - அதனாலே மயிலிறகால் கூட்டிச் சென்று அதன் பிறகு நடப்பதுதான் அன்புவழி எனக்கொண்ட சமணப்பெரியார்! பாண்டியத்தில் யார்க்குமில்லா உரத்தோடு தம் கொள்கை பரப்பதற்கு வெளிவந்த வீரர்! பல் இல்லை - ஆனாலும் சொல்லில் தள்ளவில்லை. “உடலில் காணும் நடுக்கம் உள்ளத்தில் சிறிதுமில்லை! ‘வாழ்க சமணம்!’ என்ற வார்த்தையிலே என்ன அழுத்தம்! எண்ணாயிரத்தில் சிக்காத கிண்ணாரக் கிழவன்டா” என்று வியந்துரைத்தார் வெளியூரில் இருந்து விழாக் காண வந்த பல்லோர்!
ஒரு வீரன் உறுமி வந்தான்! “ஒதிய மரமே உனக்கு உரிமையில்லை இங்கு நடக்க!” என்று கிழவர் முன் நின்றான்.
“மயில்தோகை விரித்தாற்போல் மனம்படைத்த தமிழகத்தில், நான் நடமாட உரிமையில்லை! எங்கப்பா செல்வது ?” என்றார் பெருங்கிழவர்!
“எங்கோ செல்; எமக்கென்ன ?” எனச் சொன்னான். பதிலை விரும்பாமல் ‘படபட’ வென அவர்மீது தாக்குதலைத் தொடுத்து விட்டான். ‘சமணம் வாழ்க!’ எனச் சாகும்வரை சொல்வேனென்று உரத்த குரல் பெற்றார்! இரத்த வெள்ளமாயிற்று இராச பாட்டை! மயில் தோகை சிதறிற்று... பெரியவரின் மண்டையும் அவ்வாறே!
நலங்கிள்ளி - பீலிவளை நடுக்கமுடன் கிழவரின் அருகே வந்தார்.
“வாழ்க சமணம்!” என்ற உச்சரிப்பை உதடுகளில் பொருத்திக்கொண்டு உயிர்விட்டார் நலங்கிள்ளி மடிமீது அக்கிழவர்!
“உத்தமரே! உயிர் தமிழா! உயிர் மதியா ஒளி விளக்கே!” என வாழ்த்த நலங்கிள்ளி நாவசைத்தான்; நாலு முரட்டு வீரர்களை எதிரே கண்டு மூடிக் கொண்டான் தன் வாயை! சிதறியுள்ள மயிலிறகில் ஒன்றை எடுத்து, நடக்கலுற்றான்; நங்கை மடவன்னமும் அவன் பின் தொடர்ந்தாள்.
தொலைவினிலே “வீழ்க சமணம்” என்னும் பெருங் கூச்சல் கிளம்பக் கேட்டான். அவளுங் கேட்டாள். “எனத்தான் ஒரு மாதிரி இருக்கிறீர் ?” என்று! “ஒன்றுமில்லை” என்றுரைத்து, விடை கேட்டான். அவள் வலுவில் தந்த விருந்துக்குப் பின்! “சுவைத்து அருந்தவில்லை நீங்கள் விருந்தை” யென்று காயம்படா தன் கன்னத்தைக் காட்டி நின்றாள்.
“கலையாத திலகத்தைக் காண்பீர்” என்றாள். “ஒரு நிலையில் உள்ளமில்லை; நாளை காண்போம்” - என மொழிந்தெழுந்தான். முறுமிவால் மோகத்தால் அவனைப்பற்றி, இருங்கள் எனத் தாயத்தை விழியால் சொன்னாள்.
கள்ளிப் பழத்தின் சிவப்பை வெல்லும் அவள் கனியுதட்டில் ஊறுகின்ற காதல் ரசம் பருகாமல் நின்றிருந்தான். “கண்ணா!” என்றாள். அவன் கண்ணோ அவள் மீதில்லை. கரம் பற்றிச் சாய்ந்தாள் தோள் மீது! “நாளையாகட்டும்” எனக்கூறி, கையிலுள்ள மயிலிறகை அவள் கரத்தில் தந்துவிட்டு ஓடிவிட்டான்.
மயிலிறகைப் பார்த்தபடி மன மயக்கம் கொண்ட பெண்ணாள் வீற்றிருந்தாள், அசையாமல்!
ஆயிரமாயிரம் அழகு இழைகள்! இருந்தாலும் அந்த நீலக் கண்ணின் கோலமே கோலம்! வானவில்லினும் அழகு! வைரப் பிறையினும் அழகு! அந்த அழகு மயில் கண்ணிலே அவள் கண்டாள் நலங்கிள்ளியை! அவன் இதழ் அமர்ந்தும் முகமாகத் தன் முகத்தையும் அதிலே கண்டாள்! ஈருயிரும் ஒருடலும் எனும் இலக்கணத்தைக் கற்பனையால் ஓவியந்தீட்டிக் களித்தாள், அந்த மயில் இறகின் நெற்றியிலே!
அவனோ இராச வீதி நிகழ்ச்சியினால் நெஞ்சதிர்ச்சி கொண்டுவிட்டான். உரிமைக்கு வழியில்லை!
பாண்டியத்தில்! உள்ளம் சொல்லுகின்ற நினைப்புக்குச் சித்திரம் தீட்டுவது பெருங்குற்றம்! என்ன கொடுமை! கூன் பாண்டியன் குருடாகிவிட்டான்! குலச்சிறையோ இன்னும் இருவிழிகள் பெற்றுவிட்டான் பாண்டி நாட்டு மண் மீது நெருப்புமழை! முத்தமிழ்வர் - முத்தமிழர் - அவர் முதுகிலெலும்பு ஓடியமட்டும் - மூளையெல்லாம் சிதறுமட்டும் - அடிப்பதுதான் நீதியோ, அன்புக்கு மடைகோலும் அடியார் கூட்டம் இதுதானோ ? மிக்க கொடுமை! மிக்க கொடுமை!! இவர்கள் வளர்ந்தால் விடியாது நாடு! என்போன்ற இளைஞர்க்குக் காதல் அல்ல’ முதல் வேலை - பாண்டியத்தில் உரிமைப் போர் துவங்குவதே முதன்மைத் தொண்டு! சாலையிலே சமணர் நடத்தலுமாகாதாம்! அந்தத் தடையைச் சமண மக்கள் இன்றே குவிய வேண்டும்! அதற்குத் தலைமையாக ஒருவன் வேண்டும்! யார் அந்தத் துணிவுடையான் ? யார் அந்தத் தலைமைச் சிங்கம் ?
நலங்கிள்ளி கேள்வி கேட்டான் விண்ணோக்கி! பாண்டிநாட்டு மண்ணோக்கி!!
பீலிவளையோ பெருவிருந்து அருந்தலாம் இன்றென்று பேரழகை ஆடையிற் சரிபார்த்து, ஆவணி வீதி கடந்து, புரட்டு ஆசி கூறும் புரோகிதர் வாழ் பகுதி தாண்டி, தன் ஐயப்பசிக்கு உணவு தேடிக் காத்திருந்தாள் சோலையோரம்! அவன் மாலை நேரம் போனபின்னும் வரவில்லை. மலர்ப்பதியின் அருகிருக்கும் மண்டபத்தில் காத்திருந்த கட்டழகி
கண்ணயர்ந்தாள். காலை வந்தாள். காதல் உண்டார். பிறகே கேட்டாள், வெகுநேரம் ஆனது என்னென்று!
மனக் குழப்பம் கண்ணே - மனநித்துவிடுக! நீலமிழைத்துப் பச்சை பதித்த தங்கத் தட்டாம் மயிலிறகில் நீயும் நானும் இருப்பதுபார்!
“ஏன் அத்தான்; கொழுகொம்பில் படருவதால் கொடியென்றார் பெண்ணை யென்பீர்! தோகையென மங்கையரை அழைப்பதற்கு விளக்கமென்ன ?”
“மயில்களிலே பெண்ணுக்குத் தோகையில்லை! ஆண்மயிலுக்கு அழகூட்டும் அணிகலனே தோகை தான்! மயிலுக்கென்ன; மனிதருக்கும் தோகைதான் சிறப்பூட்டுதலால், பெண்மணியைத் தோகை என்றார்.”
“பெரும் புலமைக் கவிஞர்தான் நீங்கள்!”
“கவிதையடி கண்ணே நீ!”
“தமிழ்த்தான் நீங்கள்! என்னைத் தழுவத்தான் வேண்டும்!”
பேச்சிடையே விழித்துக்கொண்டாள்! வெறுங் கனவு. வீரன் வரவேயில்லை. விடிந்தது பொழுது! வேகமாய் நடந்தாள் அழுது.
செல்லும் வழியிலே சித்திர வீதி! ஆங்கோர் இளைஞன் - அழகு சிலையின்றி - அணிமணிகள்
எதுவுமின்றி நடக்கின்றான். அவன் கையில் மட்டும் மயில் தோகை!
“வாழ்க சமணம்” எனும் முழக்கம் நாவில்! யார் இவன் ? சமணர் வெளிக்கிளம்பலாகா தெனும் சட்டத்தை மீறுகின்ற வீரன் ? கிழவன் போனவழி போவதற்கு வருகிறானோ ? அம்மவோ! அரண்மனைக் காவலர் காணின் - அழிவுதான் இவன் முடிவு! நடுங்கினாள் பீலிவளை அவனைக் கண்டு! நெருங்கினான் அத்துறவி! விழியெல்லாம் இருள் மேவ சுருள் கத்திச் சுழல்வது போல் சுழன்று வீழ்ந்தாள்! பொத்தை வாய்ச் சமணன் பிடித்த போக்குக் கொடியைத் தொடர்ந்து ஏந்த, சக்கைகளின் செயல் அனைத்தும் எதிர்த்தொழிக்க - எழுச்சி பெற்ற பெருவீரன், நலங்கிள்ளி! அவன் கடந்துவிட்டான், தூய காதலினால் மயக்கமுற்ற காரிகையை! எறிந்துவிட்டான் இன்ப ஓவியம் தீட்டுகின்ற தூரிகையை!
ஓடி வழிமறைத்தாள், “உயிர் எடுத்துச் செல்லாதே” யென்று!
“உரிமை எடுத்துச் செல்வதற்கு ஊராளுங்கூட்டம் - இருக்கும்வரை போராட்டம் நடக்கும்! இதில் மாறாட்டம் இல்லையென்பேன் - மனமிருந்தால் காத்திருப்பாய் - உயிரிருந்தால் ஒன்றாவோம்!”
“நலங்கிள்ளி பேசிவிட்டு முழங்கிச் சென்றான் சமணம் வாழ்க” என்று!
நெருக்கடிச் செல்லுகின்ற தோகையிலே சிந்தியது ஓர் இறகு! எடுத்தாள் எழிலரசி பீலிவளை! ஒளிகாட்டும் கண்ணிரண்டும் குளங்காட்டி மங்கியதால் மயிலிறகில் அவள் உருவம் - அவன் வடிவம் இரண்டும் கண்டாள். அதுவும் ஒன்றாய்க் கண்டாள்! நலங்கிள்ளி தனியொருவன் கொடுங் கோலை எதிர்ப்பதற்கு நடைபோடும் துணிவு கண்டு கணநேரம் காதலையும் மறந்திருந்தாள்!
●
கலைஞர் மு. கருணாநிதி · மீசை முளைத்த வயதில். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்