கட்டுரை 6 / 26
வாழிய வைகறை
Hail the Dawn!
அச்சுப் பக்கம் 33–33
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
வைகறையே! வா! என் வாழ்த்துக்களை ஏற்றுக் கொண்டு போ! அடடா! வாழ்த்து என்றதும் இப்படி ஓடி வருகிறாயே - அட, புகழ்தேடி! முதலில் வசவு - பின்தான் வாழ்த்து! ஆமாம் - சேவலையும் எழுப்பிவிட்டாய் - செங்கதிரையும் எழுப்பி விட்டாய் - இரண்டுக்குமிடையிலே, உழைப்பாளி வீட்டின் கதவை ஏனப்பா அவ்வளவு அவசரமாகத் தட்டுகிறாய்? இரவெல்லாம் உடல் வலியால் மண் தரையில் உருண்டு, கடைசியில், அந்தக் களைப்பில் கண்மூடிக் கிடக்கிறானே தவிர; உறங்கிக் கொண்டிருக்கிறான் என்றா எண்ணுகிறாய்!
ஏழை என்ற ‘இளக்காரம்’ உனக்கும் ஏற்பட்டு விட்டதால் தானே - சோர்ந்து சுருண்டு கிடப்போரின் குடிசைக் கதவை அவ்வளவு பலமாகத் தட்டுகிறாய்? மாளிகைகளின் படியேற உன் கால் நடுங்குகிறதோ - அன்றிக் கைதான் கதவைத் தொட்டிட அஞ்சுகிறதோ?
‘ஏழையே! எடு கலப்பையை’ என்று எவ்வளவு அதிகாரமாய் அதட்டுகிறாய். என்றைக்காவது ஒரு நாள்; எழில் மாடத்தில் சாளரத்தின் வழியாகவாவது, ‘நேரமாகி விட்டது’ என்று வீணை அதிர்வது போலவாவது விளம்பியிருக்கிறாயா?
ஏழையை நீ எழுப்பாத நாள் - அவன் இறந்து போன நாள்தானே! பிணத்தை நீ எழுப்புவதில்லை! மாளிகையின் நடைப்பிணத்தையும் நீ எழுப்புவதில்லை.
புரிந்துகொண்டேன் உன் பொருள் பொதிந்த போக்கு!
வைகறையே நீ வாழி!
●
கலைஞர் மு. கருணாநிதி · மீசை முளைத்த வயதில். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்