கட்டுரை 7 / 26
அகப்பை சித்தர்
The Ladle Siddhar
அச்சுப் பக்கம் 35–35
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
“கையினிலே தட்டேந்தி சோர்ந்து நிற்கும் என்னைப் பார்த்து கைதிக்காவலன் மொண்டு ஊற்றும் சோளக் கஞ்சி கலகலவென சிரிக்கிறது. ‘கட்டுண்ட திராவிடத்தைக் காத்திடப் போராடி, இன்று தட்டுடனே நிற்கும் தம்பிமாரே! கஞ்சியெனைக் கண்டு கலங்குவதேனோ’ என்று கேட்கிறது அகப்பைக்குள்ளிருந்து! இந்த அகப்பை சித்தரின் பேச்சிலும் அர்த்தமிருக்கிறது. புதிய தெம்புள்ள கருத்துமிருக்கிறது. இந்த சித்தரின் சூடான நாக்கு, எவ்வளவு குளிர்ச்சியான உண்மைகளைக் கொட்டுகிறது!
‘தம்பி! குளிர் தருவிலேயிருந்து நீ, கொஞ்சம் கோடையையும் அனுபவித்துப் பார்! வெடித்த வயல்களுக்கு நீர் பாய்ச்சுகிறவனின் சிரமமும், மாட்டு மந்தையை ஒழுங்காக மேய்த்துச் செல்ல ஓடியாடும் மாட்டுக்காரப் பையனின் கஷ்டமும், காலிலே சணல் சாக்கைச் சுற்றிக் கொண்டு அதை வாழை நாரினால் கட்டி, தலையிலே காய்கறிக் கூடையுடன் கிராமாந்திர சுடுமணலில் நடந்து செல்லும் ‘அன்றாடங்காய்ச்சி’ வியாபாரிகள் படும் அல்லலும், ‘ஈன ஜென்மமெடுத்தேன் என் அய்யனே’ என்று கரகரக்கும் தொனியில் பாடிக் கொண்டு, சுரைக்காயைக் குடைந்து மூங்கிலைச் செருகித் தயாரித்த சுத்த சுதேசித் தம்புராவை மீட்டியபடி ஊர் ஊராக உருண்டு புரண்டு பிச்சையெடுக்கும் மனிதப் பழுப்புகள் - தளிர்கள் - படும் வேதனையும், அப்போதுதான் உன் உள்ளத்தைத் தொடமுடியும். குளிர்நிழலிலிருந்து கோடைக்கு வா! குற்றாலத்திலிருந்து கொடைக்கானலுக்குப் போகாதே! கோடைக்கனலை கொஞ்சம் ருசித்துப் பார்!
அறுசுவையுணவையே ஆயுள் பூராவும் நீ அருந்தினால் போதுமா? உன்னைப் பற்றித் தெரிந்து கொண்டால் மட்டும் போதுமா? உன்னைச் சூழ்ந்துள்ள உலகம் மிகப் பெரியது! கஞ்சியே குடித்து வாழும் ஒரு பெருங்கூட்டம், அதுவுமின்றி வாடும் ஜனக்கூட்டம், அவைகளைப் பற்றி நீ யோசிப்பது எப்போது?
என்ன; சொன்னதைக் கேட்காமல் என்னையே பார்க்கிறாய்? தங்க நிறமாயிருக்கிறேனே என்றா? இல்லை - இல்லை - என்னோடு கலந்துள்ள உமிகளைப் பார்க்கிறாய். உமிகளும் என் இனந்தான். எனக்கு உறவினர்கள்தான். உன் இனமென்ன லட்சணமாயிருக்கிறது; மனிதச் சிறுவனே? உமிகள் உன் வாக்கத்திலும் உண்டு. அவர்களுக்கு உமிகள் என்று பெயரில்லை. முதலாளிகள் என்று பெயர் - ஆண்டைகள் என்று பெயர் - அவதார புருஷர் என்று பெயர்! அரசியல் மேதாவிகள் என்று பெயர்!
“உமிகள் உன் இனத்திலும் உண்டு. அவைகளை நீக்கிவிட உன்னால் முடியுமானால் - என்னாலும் முடியும் உமிகளைப் போக்கிவிட! முயற்சித்துப் பார்!”
இப்படி அகப்பை சித்தர் பேசிக் கொண்டேயிருந்தார். வரிசையாக நின்ற நானூறுக்கு மேற்பட்ட நண்பர்களின் தொகை தேய்ந்தது. கடைசியாக, நான்; கையிலே தட்டுடன்! எஞ்சிய கஞ்சியார் என் தட்டில் குதித்தபடியே “என்ன தம்பி! சொன்னது புரிந்ததா?” என்று கேட்டார். “உப்பில்லை” என்றேன். உங்கள் மனித ஜாதியின் உடம்பிலுந்தான் சிலருக்கு ‘அது’ இல்லை என்றார்.
●
கலைஞர் மு. கருணாநிதி · மீசை முளைத்த வயதில். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்