கட்டுரை 8 / 26
மலையே வாழி
Hail, Mountain!
அச்சுப் பக்கம் 38–38
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
மலையே!
வைரமணி விளக்குகள் ஒளிவிடும் வானப் பந்தலின் கீழே அரியாசனம் அமைத்து வீற்றிருக்கும் பூமி அன்னையின் தலையை அலங்கரிக்கப் பொன்னாலும், பச்சையாலும் இழைக்கப்பட்ட மணிக் கிரீடம் என்பேன் உன்னை! எப்படி எப்படி யெல்லாமோ உன்னை வர்ணிக்கத் தோன்றுகிறது! அப்படியப்படியெல்லாம் நீ காட்சியளிக்கிறாய்.
விண்ணகத்து வெண் முகில்களெல்லாம் கீழே விழுந்து கண்ணுக்கெட்டா உயரம் வளர்ந்தனவோ என்று திகைக்கிறேன், பனியால் நீ உடலை மூடிக் கொண்டிருக்கும்போது!
பனி மலையே! மற்றொரு கற்பனையும் மனதில் தோன்றுகிறது; முகத்தையும் உடலையும் வெண் துகிலால் மூடிக்கொள்ளும் ‘கோஷாப் பெண்’ணோ நீ என்று ஐயுறுகிறேன்.
மலையே! நீ ஒரு பெரிய மகானாம். மங்கையின் மயக்கு மொழி கேட்டும் மனங் குலையா முனிவர்களுக்கு அசையாத உன் உறுதியை உவமையாகக் காட்டுகிறார்கள் சிலர்.
எனக்கல்லவா தெரியும் உன்சேதி! வலுவிலே வந்து உன் தோளைத் தழுவும் மேகச் சீமாட்டிகளின் மோகத்தைத் தணிப்பதற்காக நீ உன் குளிர்க் கரத்தை நீட்ட, கரம்பட்ட அந்தக் காரிகைகள் மயங்கி, மேலே செல்ல முடியாமல் மழையாகக் கரைந்து, நதிக் கரங்களால் உன்னைச் சுற்றியணைக்கும் ஆவேசத்தை நானல்லவா நேரே பார்த்தவன்? அதற்குப் பிறகு தானே அனைத்தும் துறந்த முனிவர்களும் ‘அந்தப்’ பாசத்தைத் துறக்க முடியாது என்று அகிலமதிரக் கூவுகிறேன்.
மலையே! நீ ஓர் அழுத்தக்காரக் காதலன். அதோடு அறிவு நிறைந்த கவிஞன்; கவிஞன், எழுந்த கருத்தை மக்களிடம் வெளியிடுவான், நீயும் விழுந்த மழையை மாநிலம் செழிக்க வழங்குகிறாய்.
மலையரசா! நீ வளராவிட்டால் - வையமெங்கும் உன் அகிலும் தேக்கும் நிறைந்த உயர்ந்த தோள்களை
நிமிர்த்தாவிட்டால் - வளமேது? வாழ்வேது? வாழ்க உன் வைரத் தோள்கள்!
பொன்னும் பொருளும் தருவதால் பூமிக்கோர் வள்ளலாய் - உலகிற்கு உதவி செய்வதால் பொது நலத் தொண்டனாய் - புகழேந்தி நிற்கும் புவி மகுடமே! நீயோர் கலைஞனுங்கூட! நீயில்லா விட்டால் எகிப்து நாட்டுச் சிற்பங்கள் ஏது? எல்லோரா குகைதான் ஏது? எழிலூட்டும் அஜந்தா உண்டா? சிற்றன்னவாசலின் சிறப்பும், மாமல்லபுரத்து மகிமையும் காணவும் போமோ!
சிற்பக் குகையாய் சிரிக்கும் மலையே! உன் அகன்ற நெற்றியில் ஜொலிக்கும் கலைகள் எல்லாம் உயர்ந்தவை. உன்னதமானவை, உலகுக்கு அழகூட்டுபவை.
ஆனால் மலையே ஒரே குறை! மூலைக்கு மூலை கோடிக்கணக்காய்த் தெய்வம் குவிய மூலப் பொருளாய் நீயே ஆனாய்!
ஆயினும் மனிதனைவிட நீ உயர்வு! மனிதன் உன் தலையை மிதித்தான் என்றாலும், மனிதனை விட நீ உயர்வு!
காரணம் : மனிதனின் மதவாதப்பசி - ‘கடவுள் மலையைப் படைத்தார்!’
அந்த மலையின் துளியால்தானே கடவுளைப் படைக்கிறான் மனிதன்!
●
கலைஞர் மு. கருணாநிதி · மீசை முளைத்த வயதில். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்