கட்டுரை 9 / 26
தளிர்
Tender Shoot
அச்சுப் பக்கம் 41–41
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
அரும்பு பொதிய விழா மல்லிகையைப் பார்த்தால் ஆகா - எத்துணை இன்பமாயிருக்கிறது! வயலிலே நாற்று! வண்ணப் பொய்கையிலே மீன் குஞ்சு! காட்டிலே மான் குட்டி - வீட்டிலே குழந்தை.
குழந்தாய்! நீ ஈறு காட்டி இளஞ்சிரிப்பு காட்டும் இன்பப் புதையல்! ஜீவ ஆறு காட்டும் எழில்! தூண்டா விளக்கு! மூன்றாம் பிறை! செல்வத்துட் செல்வம்! செழும்பொன்! செந்தேன்! சங்கத் தமிழ்!
உதைத்த காலுக்கு முத்தமும், உமிழ்ந்த வாய்க்கு சர்க்கரையும் உன்னைத் தவிர வேறு யாரால் பெற முடியும்? சிரிப்பாய், அதன் விலை ஜெகம் பெறும்! அழுவாய் - அதையடக்க கவிஞர்களின் எழுத்தாணி முனைகள் அள்ளிக் கொட்டியிருக்கும் காவியங்கள் - அப்பப்பா - உயிர் ஓவியங்கள்.
அண்ணன், தம்பி, அப்பா, அம்மா, ஆளன் அனைவரையும் வெறுத்து ஆயுளை முடித்துக் கொள்ள விரும்பிய எத்தனையோ பெண்மணிகளை, மடியிலிருந்து பார்த்தும், கருவிலிருந்து பேசியும், சாவிலிருந்து மீட்டிருக்கிறாய் நீ!
குழலையும் யாழையும் வெல்லுவாய் என்ற குறளையும் வெல்லும் உனது மழலை மொழி.
தென்றலிலே உன் அசைவைக் காண்பதோ- உன் அசைவிலே தென்றலைக் காண்பதோ என்று கவிபுனைவோர் தத்தளிப்பது எனக்குத் தெரிகிறது!
கொட்டும் வறுமை - குட்டும் அதிகாரம் இவைகளால் கெட்டுப்போன குடும்பங்கள்கூட உன் பட்டுப் போன்ற பாதங்களைத் தொட்டு பரவசமடைவதை நான் கண்டதுண்டு.
இளந்தளிரே! எழுந்திரு! வளர்ந்திடு!
நல்ல மனத்திற்கு குழந்தை மனத்தைத்தான் ஒப்பிடுகிறார்கள். உன் மனம் உயர்வானது. மாசற்றது. அது மாணிக்கத்தின் ஜோதி,
பேதங்களில்லை - பிரிவுகளில்லை - பிளவுகளில்லை - வளைவுகளில்லை - பசி இல்லை - பயமுமில்லை - அதோடு ஒன்று குறைந்தாய்!
உனக்குக் கடவுள் என்ற எண்ணமுமில்லை. நீயும் நாத்திகவாதி. நல்ல மனத்திற்கு குழந்தை மனம் என்று பெயர். ஆகையால் நாத்திகர் நல்ல மனம் படைத்தவர்.
நல்ல மனம் படைத்தவர் நாத்திகர்
“அல்ல, அல்ல! நல்லது கெட்டது தெரியாத் குழந்தை - அறிவு தெளியாப் பருவம் - அரவத்தோடு விளையாடும் காலம் - ஆகையால் ஆண்டவன் சிந்தனை கிடையாது. வளர்ந்த மனிதன், நல்லது கெட்டது புரிந்தவன், பாம்பை நஞ்சென அறிந்தவன், அவன் சிந்தனைக்குக் கடவுள் தெரிகிறார்” என்று வாதிடுவோரை நானறிவேன் கண்ணே!
நீ நாகத்தோடு விளையாடுவது போலத்தான் சில பெரியவர்கள் நாசத்தோடு விளையாடுகிறார்கள் - அவர்கள் ஆண்டவனை வணங்குகிறார்கள், வாழ்த்துகிறார்கள், ஏத்திப் பாடுகிறார்கள்! அவர்கள் அறிவு தெளிந்தவர்கள் என்றா அர்த்தம்? பாம்பொடு விளையாடும் பண்பில் நீயும் அவர்களும் ஒன்று தானே குழந்தாய்!
பாம்பு - ‘பாம்பு’
பாம்பு - பாலப் பருவத்தில்!
பாபம் - வளர்ந்த மனிதனுக்கு
அவர்களுக்கு மாத்திரம் ஆண்டவன் எப்படி வந்து குதித்தான்?
காரணம் கண்டுபிடித்து விட்டேன், என் கட்டாணி முத்தே!
நீ - நல்ல மனம் படைத்த தளிர், பெரியவர் நல்ல மனம் படைத்த இலை.
நீ விளையாடுவது பாம்போடு! அவர்கள் விளையாடுவது ‘பாபச்’ செயலோடு!
ஆனால் -
நீ யாரையும் கெடுப்பதில்லை - அதனால்தான் உனக்குக் கடவுள் அவசியமுமில்லை.
●
கலைஞர் மு. கருணாநிதி · மீசை முளைத்த வயதில். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்