கட்டுரை 10 / 26
விண்மீன்
Star
அச்சுப் பக்கம் 45–45
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
முழு நிலவும் வரைக்கட்டி, முகில் குன்றில் மோதுண்டு சிதறிவிட்ட ஒளித்துண்டே தாரகையே நீதான்! பாய்ந்தெழுந்த மின்னலின் படைப்பே! சாய்ந்துவிட்ட மணிமுடியின் மாணிக்கச் சிதறலே!
வேய்ந்துவிட்டான் வானக்கூரையெல்லாம் இயற்கைக் கொத்தன் - இரத்தினத்தின் முத்துக்களால்! மணவாளன் வரவு பார்க்கும் நிலவு மங்கை, வான மஞ்சத்தில் பரப்பி விட்ட மலர்க்குழுவோ நீங்கள் எல்லாம்!
கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி, தானு மதுவாகப் பாவித்துத் தானுந்தன் பொல்லாச் சிறகை விரித்தாடுங்காட்சி கண்டேன் - அது போல் - பொன் கடையில் புது நீலப்பட்டினிலே பரப்பியுள்ள வைரமென - விண்ணிடையே கண்சிமிட்டும் உமைக்கண்டு, மின்மினியாம் ஒரு பூச்சி மரக்கிளையில் மாநாடு கூட்டும்.
பூச்சி இனம் - பறவை இனம் மட்டும் இந்தப் புதுப்போட்டி நடத்தவில்லை. சீச்சீ! மனிதர்களுள் சில பேரும் அய்யகோ! அப்படித்தான் ஆகிவிட்டார்!
‘மந்தி கையில் மலர்மாலை’ என்னும் கருத்து நிறை அடுக்குச் சொல் கற்கண்டு! அறிஞர் தரும் பூச்செண்டு! அது கண்டு, எமக்குந்தான் தெரியாதோ - தமிழை அடுக்க எனச் சொல்லி, சில பேர்,
‘அ’ வினிலே ஆயிரத்தை அடுக்கி வைத்து, ‘க’ வினையே நா கடுக்கத்தேடி, என்ன சொன்னோம் என்பதையே மறந்து மின் மினியாய்ப் பறக்கின்றார், விண்மீன்கள் முன்னே!
ஓவியமும், காவியமும், உரைநடையும், இசையும் கூத்தும், இன்னும் பல தாரகைகளே, உம் போலத் தமிழினிலே இருக்கையிலே, அவைகட்குப் போட்டியாக அவனியிலே மின்மினிகள் பறப்பதுவும் இயற்கை தானோ?
‘வான்’ என்ற அடைமொழியால் - கோழி - வண்ணக் கலாப மயில் ஆகவில்லை. ‘மின்மினிப் பெயரால் பூச்சிகளும் விண்ணின் ஒளிப்பூக்கள் ஆகவில்லை! மனிதர்களும் இதைக்
கற்க வேண்டுமென்றே பறை சாற்று மஞ்சள் ஒளிமுத்தே! மாணிக்க மலர்க் கொத்தே!
மணி விளக்கின் சுடரே! முடிவாக ஒன்று சொல்வேன் - திகழும் உன் ஒளிப்புகழைத் திக்கெட்டும் பாடுகிறோம் ஆனால் - திடுமென ஒரு நாள் உங்களில் ஒருவர்க்கு ஒரு முழு வால்தான் முளைத்திடுமாம் - அய்யோ! பின்னர் - ‘நட்சத்திரம்’ எனப் புகழ்ந்த இப்பெரு வையம், ‘வால் நட்சத்திரம்’ என இகழும். மனிதரிலும் - புகழ் வளர்ந்த சில பெரியோர்க்கு இந்தப் பொல்லாத வியாதி உண்டு.
முகில் மாடத்து அகல் விளக்கே! முழு மதியாம் தரு நிழலில் இறைந்து கிடக்கும் மகிழ மலர்காள்! வான்சொரியும் தங்க ஒளி மழையே! பொன்பூவே! விண்மீனே!
நீ பூமி காணும் ஓவியம்.
புதுக்கற்பனை தரும் காவியம்.
●
கலைஞர் மு. கருணாநிதி · மீசை முளைத்த வயதில். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்