கட்டுரை 5 / 26

ஆறு

River

அச்சுப் பக்கம் 30–30

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

அழகு

நதியே! நடனப்பெண்ணே! ஆட்டக்காரியின் அபிநயக்கரம் போல நெளிந்திடும் உன் அழகே அழகு! பெருகிவரும் நுரை வெள்ளமே! உருகி வரும் வெள்ளி ஒளியும் உனக்கீடாமோ! பண்ணமைக்கும் சிலம்பு நிகர் ஒலியும், வண்ணமெலாம் கூட்டிவரும் நடையும், உழவர் எண்ணமெலாம் களிப்பு செய்யும் உருவும் பொருந்திய பொன்னி மாதரசி! வாழி நீ வாழி!

காதலி

காதற் பெண்ணே! காவிரிக்கண்ணே! சிவப்பு தவழ் பவள இதழ் நங்காய்! உவப்பு நிறை காதலினால் மண்ணழகன் வாயில், நீ உமிழ்ந்துவிட்ட தாம்பூலந்தான் வண்டலெனும் பொருளோ!

அன்னை

முற்றாத மழலைகளை வற்றாத கைநீட்டி வளர்த்திடும் தாயே! அன்புக் கரத்தின் அணைப்பினால் - ஆணிப்பொன்மேனி அசைந்தாட, மாணிக்கப் பல்காட்டிச் சிரிக்கும் செந்நெற் குழவிகளைப் பார்த்திடுவாய்! இயற்கை இன்பம் சேர்த்திடுவாய்! அருமைத் தாயே! ஆற்று மாதா! தெரிந்தோ தெரியாமலோ தீய களைகளுக்கும் பாலூட்டுகின்றாய். இப்பிழையை உந்தன் அன்னையிடம் கற்றனையோ! தொட்டிற் பழக்கமோ, அல்லது உன்னிடந்தான் அந்தத் தூயவளும் கற்றனளோ!

அரசு

நன்மைகளைக் கொலு வைத்துக் குதூகலம் அடைவதிலே உனக்கு நிகர் யாருளர்? மஞ்சள் மணிக்கதிர் உன் மடியில் படுத்தே தலை நீட்டுகிறது. கரும்பின் கால் நனைந்து அதன் கணுவெல்லாம் சுவையேற்றுகிறாய். வாழை - மா - பலா - இன்னும் வாழ்வுக்குத் தேவையெல்லாம் உன் கைபட்டே கருத்தரிக்கின்றன. பொதுநலம் காணவே உழைத்திடும் உன்னை ஓர் அரசுக்குச்

சமானமென்பேன்! நாட்டுக்குள் புகுந்து நலம் பாடும் நீயொரு நல்லரசு! கடமை புரிந்தபடி கடல்நோக்கிச் செல்லும் நதியரசே! கடலை நீதான் சென்று நிரப்புகிறாய் என்று மட்டும் நினைத்து விடாதே! அப்படித்தான் இந்த வையகத்தில் அரசு புரிவோர் நினைத்து விடுகிறார்கள். சமுத்திரத்து நீர் முகிலாக மாறியதால் நீ சந்தன வண்ண ஆறாக ஓடுகிறாய்! ஆறு போல்தான் அரசு! ஜனசமுத்திரத்தின் படைப்பு! நிலைகெட்டு ஓடினால் அணை போட்டுத் தடுப்பர், நதியே உன்னை!

நாடாளும் அரசுக்கும் அக்கதிதான்!

ஓடும்போதே, இந்தப் பாடம் சொல்லி,

வாழ்ந்திடு நதியே! வாழ்ந்திடு! நதியே!

கலைஞர் மு. கருணாநிதி · மீசை முளைத்த வயதில். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்