கட்டுரை 4 / 26

கடலே

O Sea!

அச்சுப் பக்கம் 27–27

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

கதிர் விழுங்கி - மதி உமிழும் கடலே! நிலமடந்தைக்கெழிலூட்டும் நீல உடையே! ஜகப் பெண்ணாளின் சந்தன மேனியில் சலசலவெனப் பறந்தாடும் சல்லாத்துணி நீ! பச்சைச் சிசுவின் பவள உதட்டிலே வழிந்து நிற்கும் பால்! கரையில் நீ உமிழும் நுரை! இரண்டும் ஒன்று! அசைந்தாடும் அழகு உதிர் அலைக்கரங்களால் அருமையான சங்குகளை நீ அள்ளி இறைப்பது; செங்கரும்புச் சிறு கைகளால் குழந்தைகள் செய்யும் இன்ப விஷமத்தை உணர்த்திக் காட்டுகிறது.

ஓய்வுபெற உன்பால் வருவேன். ஓசை முழக்கத்தால் உள்ளத்தைத் தாலாட்டுவாய்! தூங்காப் பெருங்கடலே! தூய்மை நிறை நம் சந்திப்பில் சிறு தொய்வு ஏற்பட்டுவிட்டது. ஆனாலும் கடலே! என் மடலுக்குப் பதில் எழுது.

“உழைக்கும் பாட்டாளி - உயரும் முதலாளி - உண்மை நவில் அறிஞன் - உயர் பண் தரும் கவிஞன் - சிற்பி - சித்திரக்காரன் - சிந்தனையாளன் - எல்லாருக்குமே ஓய்வுண்டு. உனக்கு ஓய்வே கிடையாதே ஏன்? ‘ஓயாமல் உழைக்கிறேனே பார்’ என்று உடல் வளையா சோம்பேறிக்குச் சொல்லிக் காட்டுகிறாயா?” என்று முன்பெல்லாம் கேட்டேனே? அதைக் கேட்பேன் என்று எண்ணுகிறாயா? இல்லை; இல்லை.

கற்கண்டுக் கையால் கஞ்சியைத் துழாவித் தந்து, அதைவிட இனிப்பான முத்தம் தந்து காலையிலே கட்டுமரத்தில் வழியனுப்பி வைக்கப்பட்ட காதலன் - கதிரவன் சென்றும் வரக்காணேனே என்று கண் சோர, கால் சோர குடிசையின் வாசலிலே எதிர்பார்த்து ஏங்கித் தவிக்கும் ஏந்திழையாள், உன்னை நம்பி வாழும் குடும்பத்தின் இளஞ் சிட்டு - அவள் அயர்ந்து போகாமல், இடிந்து மாளாமல், அவள் கணவனை அன்றாடம் உன் நீலமணித் தோள்களிலே தூக்கி வருகிறாயா? என்று கேட்பேனே - அதைத்தான் கேட்கப்போகிறேன் என்று கருதுகிறாயா? இல்லை - இல்லை.

கடல் மாதா காப்பாற்றுவாள் என்று நம்பி ஓரத்திலே முளைத்திருக்கும் ஓலைக் குடிசைகளைத் தூக்கி

எறிகிறாயே; தொழிலாளிகள் என்றால் உனக்குமா துரோக புத்தி - என்று கேட்டிருக்கிறேன் - பலமுறை கேட்டிருக்கிறேன் - அதையல்ல இப்போது கேட்கப் போவது!

முத்துப் பெருங்குளமே!

சிறைச்சாலையிலே, என் சிந்தனை அலைச்சலிலே அன்றொரு நாள் நீ செய்த அட்டூழியம் தலைகாட்டி மறைந்தது, கவின் நிறை நகராம் - தமிழரின் செல்வப் பூங்கா - காவிரிப்பூம்பட்டினத்தை அலைக்கரம் நீட்டி அழித்துப் போட்டாயாம்! ஏன் இந்த அநியாயம் புரிந்தாய் என்று கேட்கவில்லை. அதற்காக வழக்குத் தொடரவும் போவதில்லை.

ஆனால் கடலே! எம் செல்வத் திருநகரின் செழிப்பை அழித்தனையே! அதுபோல் பொல்லாத வடநாட்டுச் சின்னத்தை அழித்திடத்தான் துள்ளாதோ கல்லக்குடியில், உன் கரம்?

மடலுக்குப் பதில் எழுது! இல்லையெனில் மெளனமாய் இரு! இரண்டுமே உன்னால் முடியாத காரியம்!

கலைஞர் மு. கருணாநிதி · மீசை முளைத்த வயதில். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்