பொருளடக்கம்

3. கருப்புப் பெண்

கட்டுரை 3 / 26

கருப்புப் பெண்

Black Woman

அச்சுப் பக்கம் 23–23

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

வா, இரவே வா! எழிலாடும் கருப்புப் பெண்ணே வா! நீ அழகி - பேரழகி. கருப்புப் பெண்ணை நான் விரும்புகிறேன். நேசிக்கிறேன். ஆனால் எனக்குக் கல்யாணமாகிவிட்டதே! அதனால் என்ன; களங்கமற்ற உள்ளத்தோடு உன் அழகை வர்ணிப்பது குற்றமா என்ன? மரகத மங்கையே! காரிருள் காதலியே என்று உன்னைக் கூப்பிட்டால் கடிந்து கொள்; நியாயம்! தோழியே என்று அழைப்பதில் தோஷமில்லையென்று நானே முடிவுகட்டி விட்டேன்.

இரவுப் பெண்ணே! இப்படி வா! உட்கார்! உட்கார்ந்தாயா, சரி. மகிழ்ச்சி! கருப்புப் பெண்ணை நான் விரும்புகிறேன். காரணம் தெரியுமா? கருப்புப் பெண் சிரித்தால்தான் முத்துப் பற்களுக்கு முதலிடம் கிடைக்கிறது. பெண்ணின் அழகே கண்ணில்தானே? கருப்பு மேனியில் வெள்ளை விழி. ஆகா, என்ன கவர்ச்சி! என்ன கவர்ச்சி!

நீயும் கருப்பாயிருந்து சிரிப்பதால்தான் உன் நட்சத்திரப் பற்களின் வைர ஒளியை வையம் புகழ்கிறது. நீ சிரிக்கிறாய்; ஆயிரம் முத்துக்களை அடக்கி வைத்துள்ள சிப்பியைப் பிளந்ததுபோல் இருக்கிறது உன் வாய், பெண்ணே! உன் இருதயத்தின் படபடக்கும் ஒலிகூட என் காதில் விழுகிறது. அவ்வளவு அமைதியாயிருக்கிறாய் நீ! நீ, அமைதி அலங்காரி ஆனாலும் உன் இருதயம் சாந்தியற்றது. சஞ்சலம் நிறைந்தது. அதன் துடிப்பை உணருகிறேன் நான். உனக்கு ஒரு காதலன் வேண்டும். கள்வர்கள் உன்னைக் காதலிக்கிறார்கள். நீ வெறுக்கிறாய். வேதனைப்படுகிறாய். குடியர்கள் உன் மடியைத் தேடி அலைகிறார்கள். நீயோ குமுறுகிறாய். அதையும் உன் இதயம் சொல்லத் தவறவில்லை. கனி குலுங்கும் சோலைகளில், காவிரியின் கரைகளில், கட்டித் தழுவும் காதலர்களின் சரச உரையாடல்களைக் கேட்டுக் கேட்டுத் தினவெடுத்த உன் இருதயம் கனத்துப் போய்க்கிடக்கிறது. நீ சிரிக்கிறாய், வெளி உலகுக்கு! ஆனால் உன் இருதயம் அழுவதை என்னால் உணர முடிகிறது. காதலுக்கேற்ற கட்டழகனே கிடையாதா என ஏங்குகிறாய். நானோ கல்யாணமானவன். என் விடுதலை ராணியை வெளியில் விட்டுவிட்டு வெந்து

கொண்டிருக்கிறேன் வெஞ்சிறைதனிலே!

கவிஞர்கள், அறிஞர்கள், கலைஞர்கள் உன் சுயம்வர மண்டபத்திலே காலையெடுத்து வைத்து - நீ மாலையெடுத்து வரும் சமயம் - உன் மந்தகாசப் புன்னகை கண்டு, மயக்கமுற்று உலகத்துக்குத் தேவையாக ஏதாவது உளறியபடி விழுந்து விடுகிறார்கள்.

நீ விட்ட கண்ணீர் - தோட்டத்து மலர்களிலே, காட்டகத்துப் பூக்களிலே, பனி நீராகத் தேங்கியிருப்பதை நான் காணாமலில்லை. ஆனாலும் என் செய்வது! ஆறுதலுக்கு வழியிருக்கிறதா என்று நீ பார்க்கிறாய். ஆருயிர்த் தோழிகள் யாராவது வருவார்களா என்று எதிர்பார்க்கிறாய்... அவர்களும் வரத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களெல்லாரும் உன் நல்ல பண்பின் மறைவிலே நாச நாடகம் நடத்திச் சம்பாதிக்கிறவர்கள். நலிந்து போன மாதர்கள்.

ஆமாம்; உன் சகோதரன் சந்திரன், வெண்துகில் ஒன்று கொடுத்தானே; அதை யார் பிடுங்கிக் கொண்டது? இயற்கையாண்டிதானே! அப்பப்பா;

அவன் ஒரு “மாயக் கண்ணன்” தான். உன் சேலையைத் திருடுவதிலே அவனுக்கு ஒரு திருப்தி. திருட்டுப்பயல் அவனைத்தான் உனக்கு அறவே பிடிக்காதே.

பிறகு எப்படித்தான் உனக்குத் திருமணமாவது? கருப்புப் பெண்ணே! இரவு நங்கையே! என் கவலையெல்லாம் உன் கல்யாணத்தைப் பற்றித்தான் - என் முகம் வெளுக்கிறது உனக்கு?

நேரமாகிவிட்டதென்றா? சோகம் தாங்காமலா? விரகதாபம் மேலிட்டா? இரு, இரு, அதோ வந்துவிட்டான் என் நண்பன். உனக்கேற்ற காதலன். அவனைத் தெரியுமா உனக்கு? காலையெனும் கட்டழகன் அவன்தான். உங்கள் கல்யாணத்தை இப்போதே முடிவுசெய்து விடுவோம். கருப்புப் பெண்ணுக்கும் காலைக்கும் கல்யாணமாம்; அதற்குப் பெயர் கருக்கலாம்.

அடே! எங்கே ஓடுகிறாய் - இரவுத் தோழியே; இளமைமாறா நங்கையே! இரு இரு, காதலனைக் கண்டதும் அவ்வளவு வெட்கமா உனக்கு! சரி, சரி போ!

கலைஞர் மு. கருணாநிதி · மீசை முளைத்த வயதில். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்