பொருளடக்கம்

2. ஆடிக்காற்று

கட்டுரை 2 / 26

ஆடிக்காற்று

Aadi Wind

அச்சுப் பக்கம் 20–20

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

சீறியடிக்கும் ஆடிக்காற்றே! யாரைப் பயமுறுத்துகிறாய்? சிம்மாசனம் ஏறியிருப்போரின் சினத்தை விடப் பெரியதோ உன் சினம்! அதையே அனுபவித்தவன் நான். உற்றார், உறவினர், மனைவி, மக்கள், தாய், தந்தை, நண்பர் யாரும் என்னுடன் இருக்கக்கூடாது என்று தடை போட்டவர்கள், உன்னை மாத்திரம் உள்ளே அனுப்பி வைத்த ரகசியந்தான் என்ன!

வெளியிலே அவர்களின் வெறிபிடித்த தர்பாரை நான் காணமுடியாது என்பதற்காக உன் உருவிலே அந்தத் தர்பாரை எனக்குக் காட்டுகிறார்களா என்ன!

ஆடிக்காற்றே! மரங்களை ஏன் இப்படி ஆட்டி வைக்கிறாய்? மந்திரவாதி பேயாட்டி வைப்பதுபோல ஏன் ஆட்டி வைக்கிறாய்? மந்திரிமார்கள் மக்களை ஆட்டிவைப்பது போல ஏன் ஆட்டி வைக்கிறாய்? ஏன் வாட்டி வதைக்கிறாய்? என்ன குற்றம் செய்தன அந்த மரங்கள்? செழித்தது தவறா? சீர் தந்தது தவறா? மறுமலர்ச்சி பெற்றது தவறா? மணந்தரும் பூக்களை, சிகைக் கொண்டைகளில் சூட்டி நின்று செளந்தர்ய மோகினிகளாய்க் காட்சி தந்தது தவறா? எது தவறு? ஏன் தண்டிக்கிறாய்? ஆடிக்காற்றே! அந்தக் காரணத்தைச் சொல்! சொல்லமாட்டாய். உன்னைப் போன்ற அரசாங்கமும் எங்களுக்குக் காரணம் சொல்லவில்லை! ஆடிக்காற்றே! மண்ணை அள்ளிக் கண்ணில் போட்டால் பயந்து விடுவோமா? கண்ணீர்ப் புகைப் பிரயோகத்தைவிடக் கடுமையானதா உன் கைகள் வாரியிறைக்கும் மணல் துளிகள்! மதில் தாண்டி வந்து மந்தி போல் குதிக்கும் ஆடிக்காற்றே! சிறைச்சாலைக்கு வந்த பிறகுமா என்னை நீ சித்திரவதை செய்ய முயலவேண்டும்? என்ன, பதில் பேசாமல் பயங்கர மூச்சு விடுகிறாய்?

சர்வாதிகாரிகள் உன்னைப் போலத்தான் அகோர இரைச்சல் போட்டார்கள்; அராஜக வெறியாட்டம் நடத்தினார்கள். அவர்களும் நீயும் ஒரே ரகம். அந்த உண்மையை ஊளைத் தொனியில் பாடிக்காட்டும்

ஆடிக்காற்றே! பொறு! பொறு! ஆடி ஓய்ந்ததும் அடங்கிவிடுவாய். அடங்கிய பிறகு, உன்னைப் போல ஆட்டம் போட்ட அரசாங்க நண்பனை - அந்தரங்கத் தோழனை சந்திக்கப் போவாய்! அய்யோ பாவம், அப்போது அவன் உனக்கு முன்னே பொந்துக்குள் போயிருப்பான்!

போ-போ, மண்ணை வாரி இறைத்துப் போ!

கலைஞர் மு. கருணாநிதி · மீசை முளைத்த வயதில். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்