கட்டுரை 1 / 26

பிறையே

O Crescent!

அச்சுப் பக்கம் 17–17

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

பிறையே! வானக் கடலலையின் நுரையே! பலகணி வழியே சிறைக்குள் எட்டிப்பார்த்து என்ன சிரிக்கிறாய்?

“கைதியே” என்று என்னை நீ கூப்பிடுவது என் காதில் விழுகிறது. நீ மாத்திரம் என்ன; சுதந்திரத் தேரில் ஏறியா சுற்றிவருகிறாய்? கிழித்த கோட்டைத் தாண்டாமல், விழித்த கண்ணை மூடாமல் சிறைச்சாலைக் காவலனைப் போல நடந்து போகத்தானே உனக்கு உரிமையிருக்கிறது.

சிறைக்கோட்டைக்கு வெளியே தவித்து நிற்கும் காதலியிடம் தாவிட முடியாது என்னால், உனக்கென்ன வாழ்கிறதாம்; உன் கோட்டுக்கு அப்பால் கண் சிமிட்டும் நட்சத்திர சீமாட்டிகளை கைத்திட்டத் தொடமுடியாது உன்னாலும்!

நானும் கைதி!

நீயும் கைதி!

வெளியுலகிலே எனக்கு இருட்டிப்பு உண்டு. உனக்குந்தான் உண்டு; மாதம் ஒருமுறை அமாவாசை! என்னைச் சரியாகப் பிரகாசிக்க விடமாட்டார்கள் - என் முழு ஒளியைத் தந்திரத்தால் மறைப்பார்கள். உனக்கென்ன வாழ்கிறது. உன்னைச் சுற்றி மேகங்கள் - என்னைச் சுற்றி பகைவர்கள்.

நானும் கைதி!

நீயும் கைதி!

நானாவது விடுதலை பெறுவேன். என் நாட்டோடு சேர்ந்து; உனக்கு விடுதலையே கிடையாது - உன் வட்டமிடும் வாழ்வில் மாறுதலே கிடையாது.

பிறையே! வானத்துப் படகே! என் வெண்ணக் கலாப மயிலைக் கொஞ்சம் சுமந்து வாயேன். என்னை எண்ணியபடி ஏங்கிக் கிடக்கும் என் சுந்தரியை எடுத்து வாயேன். பலகணி வழியே அவளைப் பார்த்துப் பரவசமடைகிறேன்! என் விடுதலை தேவியை அழைத்து வாயேன்.

உன்னிடம் சொல்கிறேனே; உன்னால் எப்படி முடியும் - நீதான் கிழித்த கோட்டைத் தாண்டிச் செல்ல முடியாதே!

நீயும் கைதி!

நானும் கைதி!

கலைஞர் மு. கருணாநிதி · மீசை முளைத்த வயதில். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்