கட்டுரை 13 / 26
புகழ்
Fame
அச்சுப் பக்கம் 56–56
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
புகழே! நீ ஒரு கணிகை. கால் கடுக்க உன்னைத் தேடி அலைபவர்களிடம் காசு பெற்று காதல் வழங்குகிறாய்.
புகழே! நீ ஒரு சந்திர மண்டலம். உன்னை அடையும் முயற்சியில் பல மேதைகள் இன்னும் வெற்றி பெற முடியவில்லை.
புகழே! நீ இமயத்தின் உச்சி. இடைவிடா முயற்சியால் உன்னைச் சிலர் பிடித்து விடுவார்கள்.
புகழே! நீ ஒரு பனிக்கட்டி. உன்னைக் கைக்குள்ளேயே வைத்துக் கெட்டியாகப் பிடித்திருந்தாலும் நீராகக் கரைந்து மறைந்து விடுகிறாய்.
புகழே! நீ ஒரு மதுக்கலயம். உன்பால் வீழ்ந்த ஈக்கள் எழுந்ததேயில்லை. புகழே! நீ ஒரு நிழல்! உன்னைப் பற்றிக் கவலைப்படாதவர்களைத் தொடர்ந்து கொண்டேயிருப்பாய்.
புகழே! நீ ஒரு புதிர்! உன்னைப் பற்றி விளக்கவே என்னால் முடியாது!
●
கலைஞர் மு. கருணாநிதி · மீசை முளைத்த வயதில். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்