பொருளடக்கம்

14. பச்சைக்கிளி

கட்டுரை 14 / 26

பச்சைக்கிளி

Green Parrot

அச்சுப் பக்கம் 58–58

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

சுரைக்காய்ப் பிஞ்சின் தலையில் மிளகாய்ப் பழத்தைச் செருகி இடையில் மல்லிகை இலைகள் சிறகாய்ப் பின்புறம் தாழை மடலை வைத்தால்; பச்சைக் கிளியே! உன்போல் படைப்பு! உன்போல் படைப்பு! வட்டத் தலையே! சிவப்பு மூக்கே!

சின்ன இறகே! நீண்ட வாலே! கன்னங் கிளியே சொன்னது பிசகா? வானை கேட்டு வாழ்த்த மறுப்பாய். புகழ்ச்சிசொல் கேட்கும் போற்றிட மாட்டாய். காரணம் அறிவேன் சின்னக் கிளியே! கூண்டில் உன்னைப் போட்டதனாலே தூண்டிற் புழுவாய்த் துடிக்கிறாய் நீயும் சிறையில் உன்னை அடைத்து மகிழ்ந்தேன் இன்று தெரிந்தேன் சிறைமிகக் கொடிது! சிறைமிகக் கொடிது! மன்னித் திடுவாய் மன்னித் திடுவாய்! பொன்மொழிப் பாவாய் மன்னித் திடுவாய்! என் சிறை முடிந்ததும் உன் சிறை உடைப்பேன்! சிறையின் கஷ்டம் சிறையால் உணர்ந்தேன். அடிமைப் புள்ளே! அழகுக் கிள்ளாய்! அனுபவம் பெற்றேன் - அனுபவம் பெற்றேன். வந்ததும் தருவேன் விடுதலை வாழ்வு பறப்பாய், பறப்பாய், உயரப் பறப்பாய்! கட்டிய கால்கள் விடுபடும் உடனே எட்டிய மட்டும் ஏறிப் பறப்பாய்! எழில்நிறப் பெண்ணே எங்கும் பறப்பாய்! கூண்டினில் உன்னை அடைத்தேன் கிளியே! மன்னித்து விடுக! கூண்டின் கஷ்டம் புரிந்துகொண்டேன். கூண்டின் கஷ்டம் புரிந்துகொண்டதால் கூண்டுக் கிளியுனைத் திறந்துவிடுவேன்.

ஆனால் கிளியே கூண்டின் கஷ்டம் புரிந்தோர் இங்கு ஆண்டிட வந்தார் மாண்டிட எம்மைக் கூண்டினில் போட்டார் ஏனோ கிளியே? ஏனோ கிளியே? பதிலும் சொல்வாய் பச்சைக் கிளியே! உன்னை நான் அடைத்ததால் என்னை அடைத்தார் என்றே சொல்வாய். நன்று கிளியே; நீ, யாரை அடைத்ததால் நானுன்னை அடைத்தேனோ ?

கலைஞர் மு. கருணாநிதி · மீசை முளைத்த வயதில். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்