கட்டுரை 12 / 26
நாடக மேடை
The Stage
அச்சுப் பக்கம் 54–54
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
உறைபுகு வேலை என் வாளுக்கில்லையெனும் உரை தரு வீரன் - அவன் மடியிலே ‘பொறைமலி பூங்கொம்போ இவள், எனும் அழகுமிழ் ஆரணங்கு! தேனிசை! தென்பாங்கு! தென்றலுக்கு வாழ்த்து!
காற்றிலாடும் பசுங்கொடியோ! கற்பனை ஊற்றிலாடும் பைந்தொடியோ! மோவா அரும்பே! பூவார் சோலைப் புதுமயிலே! சிலம்பு குலுங்கிட - சிற்றிடை நடுங்கிட - செந்தமிழ்ப் பண்ணும், சிங்காரக் கண்ணும் தழுவிட, தழுவிட, அதைக் காண்போர்க்கு உறுதி நழுவிட, நழுவிட ஆகா - ஆட்டமென்ன சொல்லுவேன்!
மணிமுடி வேந்தர் - கனிமொழிக் கவிஞர் - ஆடலரசி - பாடும் சரசி - ஏழை - மேழை - எழில் மிகு மண்டபம் - தொழில்நிகழ் சாலை - சோற்றுக்கலைவோர் - சொர்க்கம் தேடிகள் - விடுதலை விருத்தம் - தருதலை கீதம் - பாரிக் கூட்டம் - பணக்காரத் தோட்டம் - பலப்பல கண்டேன்! நாடகமேடை!
இத்தனையும் காட்டும் ஈடற்ற கலையே! நாடக மேடையே! நன்றாகச் சொன்னான்; நீயும் உலகமும் ஒன்றென்று! ஒப்புகிறேன், அதை நான்! ஆனாலும் ஒன்றேயொன்று!
ஆண் பெண் சமத்துவத்தை நீ அணிமணிகளால் காட்டிவிடுகிறாய்; ஆணைப் பெண்ணாக! பெண்ணை ஆணாக! ஆணிலே பெண்! பெண்ணிலே ஆண்! உடை மாற்றத்தாலேயே உன்னால் விரட்ட முடிகிறது அந்தப் பேதத்தை! ஆனால் உள்ள மாற்றத்தால் அந்தப் பேதத்தை ஓட்டிவிட முடியாமல் உலகம் எவ்வளவு பெரிய மூச்சு விடுகிறது பார்! ஆகவே நீயும் உலகமும் ஒன்றல்ல.
தாழ்ந்தவரையும் - உயர்ந்தோராய்க் காட்ட முடியும் உன்னால்!
அந்த சக்தியைப் பெறமுடியாமல், சந்தியிலே நிற்கும் இந்த ஜெகமும், நீயும் ஒன்றா? யார் சொன்னது?
●
கலைஞர் மு. கருணாநிதி · மீசை முளைத்த வயதில். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்