கட்டுரை 2 / 6
சொர்க்க லோகத்தில்
In the Heavenly Realm
அச்சுப் பக்கம் 14–23
scan 14 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
சொர்க்க லோகம், சூரியன் மறையும் நேரம். சுந்தரமான பூஞ்சோலை. சோலையின் ஒரு மூலையில் சொந்த விஷயங்கள் பேசிக் கொண்டிருந்த சில தேவர்கள், சுற்றிச் சுற்றிப் பூப்பறித்து சுழல் வண்டுகளென ஆடிவந்த அரம்பையர்கள்.
அவர்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்ளும் ஒய்யாரம்; ரம்பையின் நவரத்ன மாலையைப் பார்த்து மேனகை, இது ஏதடி? என்று கேட்க.. இது இந்திரன் தந்தது என..... ‘ஓஹோ கட்டிலறைப் பரிசா’ என்று மற்றவர்கள் கேலி செய்ய...... அப்படியே ஒவ்வொருவரும் தங்கள் அணிகளை...... இது சந்திரன் சன்மானம், இது சூரியன் பரிசு, இது மன்மதனின் வெகுமானம் என அறிமுகப்படுத்திக் கொண்டிருந்தனர்.
சந்திரனும் தாரையும் அஸ்வதி நட்சத்திரத்தை எடுத்து பூப்பந்து ஆடிக் கொண்டிருந்தார்கள், ஒரு பகுதியில்!
பூலோகத்தையே உருட்டி அக்னி பகவான் வாயு முதலியவர்கள் கால்பந்து விளையாட்டில் மும்முரமாக ஈடுபட்டிருந்
தார்கள்.
பார்வதிதேவி பரமசிவன் தோளிலேகிடந்த பாம்பை யெடுத்து (ஸ்கிப்பிங் ரோப்) குதிக்கயிறு ஆடிக் கொண்டிருந்தாள்.
பிரம்மாவும் சரஸ்வதியும் புதிதாக வெளியான ஒரு நாவலைப் படிக்கும் சுவாரஸ்யத்தில் இருந்தனர்.
மகாவிஷ்ணு, லட்சுமியோடு கண்ணா மூச்சி யாடுவதாகப் பொய் சொல்லி அவள் கண்ணைக் கட்டி அலைய விட்டுவிட்டு, ஊர்வசியும் அவரும் ஒரு அருவியின் பக்கம் போய் உல்லாசத்தில் ஈடுபட்டிருந்தனர்.
மயிலுக்கும் சேவலுக்கும் சண்டை மூட்டிவிட்டு, வள்ளி தெய்வயானை சமேதராய் முருகன் மகிழ்ச்சியில் திளைத்திருந்தார்.
விநாயகர் துதிக்கையால் நீரையுறிஞ்சி அதை தேவ மாதர்கள் மேலிறைத்து வேடிக்கை செய்திருந்தார்.
யாரும் தன்னைக் கவனிக்கவில்லை யென்றறிந்த பரமசிவன் தாருகாவனத்து ரிஷி பத்தினிகளின் “ஜாகை”க்குப் போய்க் கொண்டிருந்தார்.
சொர்க்க லோகத்தில் இந்தச் சோலை விருந்து!
இவைகள் எதையுமே கவனிக்காமல் புல்தரையில் ஒரு கூட்டம் அமர்ந்திருந்தது. அந்தக் கூட்டத்தினரின் தோள் பட்டையில் ஒகு மஞ்சள் நிறத்
துண்டுத் துணி தொங்கிற்று. அதில் நீல வர்ணத்தில் ‘குடியேறியவர்’ என்று குறிக்கப் பட்டிருந்தது. முகங்களைப் பார்க்கும்போது பூலோக வாசிகள்தான் என்பது நன்றாகத் தெரிந்தது. ஆமாம்...... பூலோக வாசிகள்தான்!
கண்ணப்ப நாயனார், காரைக்கால் அம்மையார், நந்தனார், சிறுத்தொண்டர் ..... இன்னும் எல்லோரும் இருந்தார்கள். அவர்கள் பேச்சு பெரிய விவாதமாக அமையவில்லை. ஆளுக்கு ஒரு வார்த்தை பேசினார்கள். அது அவர்கள் சொர்க்க லோகத்துக்கு வந்த விதத்தைப் பற்றி!
“என்னுடைய இரண்டு கண்களையும் குத்திக் கொண்ட பிறகுதான் கடவுளின் கருணை கிடைத்தது”
கண்ணப்ப நாயனார்.
“என் குழந்தையைத் துண்டு போட்டுக் கறி சமைத்து அதன் தலையை நானும் என் மனைவியுமே இடித்துத் துவையல் அறைத்து அன்னமிட்டேன். அதற்குப் பிறகுதான் சிவபெருமான் சித்தமிரங்கி என்னையாட்கொண்டார்.”
சிறுத்தொண்டர்.
“அக்கினியிலே முழுகி தீட்டையெல்லாம் பொசுக்கிக் கொன்றுவிட்டு பொன்மேனியோடு வா என்று தீக்ஷதர்கள் கனவிலே தீன தயாபரன் சொல்லிவிட்டார். அந்தத் தியாகத்தை நான் செய்த பிறகுதான் தில்லையப்பனின் திருப்பாத தரிசனம் கிடைத்தது.”
நந்தனார்.
“உடலிலே உள்ள சதைகளையெல்லாம் கழித்தெரிந்துவிட்டு, ரத்தத்தை வடித்துவிட்டு எலும்பு உருவமாக - பேய் மாதிரி - தலைகீழாக நடந்து வரச் சொன்னார் பீடுடைய பெம்மான்! அந்தக் கஷ்டத்திற்கு ஆளான பிறகுதான் கைலாசபதி கடாக்ஷம் பாலித்தார்.”
காரைக்கால் அம்மையார்.
“ஆலயங்களில் புல் செதுக்கினேன், அந்தணராம் திருஞான சம்பந்தரின் பல்லக்கு தூக்கினேன். அதையெல்லாம் செய்த பிறகுதான் அமரர் உலகம் வர அனுமதி கிடைத்தது, எனக்கு!”
அப்பர்.
‘மனிதனுக்கு மானம் பெரிது. அந்த மானத்தை அடகு வைத்து, என் மனை வியை பரமசிவனோடு பள்ளியறைக்கு அனுப்பி வைத்தேன். அந்தத் தியாகத்தின் பரிசாகத்தான் இந்தப் பரமண்டல வாசத்தைப் பரமன் எனக்கு அளித்தார்.’
இயற்பகை நாயனார்.
“என் முழங்கையைச் சந்தனக் கட்டைக்குப் பதிலாகத் தேய்த்து பகவத் பூசை பண்ணினேன், அதன் பலன்தான் எனக்குச் சொர்க்க லோகம்.”
மூர்த்தி நாயனார்.
“அப்பப்பா! இந்த லோகத்திற்கு வர எத்தனை பேரைக் கொலை செய்திருக்கிறேன் தெரியுமா? சிவனைத் தூஷித்தவர்களை யெல்லாம் மழுவால் வதைத்துக் கொன்று போட்டேன். அந்தப் பிணங்களையெல்லாம் பிறைசூடும் பித்தரிடம் காட்டிய பிறகுதான் இந்தப் பேறு கிட்டியது.”
எறிபத்த நாயனார்.
“சிவனுக்காகச் சேமித்து வைத்திருந்த நெல்லைப் பஞ்சகாலத்தில் சாப்பிட்டார்கள் என்பதற்காக..... பக்தியின் காரணமாக என் தாய், தந்தை,
என் ஆசை மனைவி. .நெல்லைத்தின்ற தாயின் பாலைக் குடித்திருக்கும் என்பதற்காக என் அன்புக் குழந்தை ஆகியோரைக் கொடுவாளால் வீசிக் கொலை புரிந்தேன். அதன் பிறகுதான் என் குற்றத்தை மன்னித்து கொன்றையணி செஞ்சடையார் காட்சி அளித்தார்.”
கோட்புலி நாயனார்
இப்படிப் பக்தர்கள் தங்கள் தியாகங்களைக் கூறிப் பெருமிதங் கொண்டனர். பெருமூச்சு விட்டனர்.
“உங்களுக்கும் ஆகஸ்ட் தியாகிகளுக்கும் வித்தியாசமில்லையப்பா” என்ற திடீர்க் குரல்கேட்டு, பேச வாயெடுத்த கண்ணப்பர் நிறுத்திவிட்டார். எல்லோரும் திரும்பிப் பார்த்தனர்.
ஒரு வாலிபம் மறைந்த மங்கையின் தோளில் கை போட்டபடி ஒரு பூனூல்கார அய்யர் நின்றார். எல்லா பக்த சிரோன்மணிகளும் அவர் வாயைப் பார்த்தபடி இருந்தனர். அந்த அய்யர் பேசினார்.
“நீங்கள் எல்லாம் மோட்ச லோகம் வர பெரிய பெரிய தியாகம் செய்ததாகப் பெருமை
யடித்துக் கொள்கிறீர்களே; அதை நினைத்தால் எனக்குச் சிரிப்பு வருகிறது. தந்திக் கம்பிகளையும் தபாலாபீசுகளையும் தகனம் செய்து, இருப்புப் பாதைகளை யெல்லாம் பெயர்த்தெடுத்த காங்கிரஸ்காரனுக்குப் பெயர் தியாகிதான்! தந்திக் கம்பிகளை அறுப்பது தகாது எனக் கூறி, ஆகஸ்ட் போராட்டம் ஆகாது என முழக்கி அதற்கு எதிரிடையாக நின்ற ஆச்சரியாருக்கும் பெயர் தியாகிதான்!
என்ன விழிக்கிறீர்கள்? நான் இப்பொழுது பேசுவது தமிழ் நாட்டு அரசியல் விஷயமாக்கும்!
சொர்க்கலோகம் வர, சொல்ல முடியாத தொல்லைகள் அனுபவித்ததாகச் சொல்லுகிறீர்களே; இதோ பாருங்கள் நான் எந்தவிதச் சிரமும் இன்றி சிவலோகம் வந்திருக்கிறேன்.
(பக்தர்கள் ஆச்சரியத்தால் திகைத்துவிட்டார்கள்)
‘ஆச்சரியப்படாதீர்கள் அன்பர்களே! இதோ என்மேல் சாய்ந்து கொண்டிருப்பது என் தாய்’
(கோட்புலி நாயனார் குறுக்கிட்டு)
‘உமது தாயாரா?’
“ஆமாம், என் தாய்! என்னைப் பத்துமாதம் சுமந்து பெற்றதாய். அழகுத் தொட்டிலில் இட்டு ஆராரோ பாடிய தாய்! இந்தத் தாயாரை நான் என் தாரமாகக் கொண்டிருக்கிறேன். இங்கு மட்டுமல்ல, பூலோகத்திலேயே இந்த அன்னை என் ஆசை நயாகியாக இருந்தாள். இவள் என்னைத் தொட்டிலில் போட்டு ஆட்டினாள். நான் இவளுக்குக் கட்டிலில் இன்ப மூட்டினேன், மாதாவை மகா மனைவியாக்குவது மல்லவா என்பீர்கள்; இதைவிட மகா மகா பாபமாக, எங்களை மஞ்சத்தில் கண்டுவிட்ட என் தகப்பனாரை உடனே கொன்று போட்டேன்.
உனக்கா சொர்க்கவாசல் திறந்தது என்று கேட்கிறீர்களா? ஆமாம்; எனக்குத்தான் சொர்க்கம் சுலபத்தில் வழிவிட்டது. ‘அரகர மகாதேவா’ என்றேன்; அம்மையை அணைத்தபடி அப்பன், ரிடபவாகன ரூடராய் அருள்மழை பொழிந்தார். ஆனந்தமாக சொர்க்க பூமிக்கு வந்துவிட்டேன்.”
நாயன்மார்கள் ஸ்தம்பித்து விட்டார்கள்.
காரைக்காலம்மை “இது உண்மையா?” என்றார்.
“சந்தேகம் வேறா? ஐயமிருந்தால் திருவிளையாடல் புராணம் மாபாதகம் தீர்த்த படலத்தைப் பாருங்கள்” என்றார் அய்யர்.
“பாபியாகிய உமக்கு மாத்திரம் இவ்வளவு சுலபத்தில் சொர்க்கலோக வாழ்வு கிடைக்கக் காரணம் என்ன?” என்று கேட்டார் சிறுத்தொண்டர்.
“இதுதான் காரணம்” என்று தன் பூணூலை உருவிக் காட்டினார் அய்யர்.
“நான் மட்டுமல்ல; சுந்தரமூர்த்தி நாயனாரை தாசி வீட்டுக்குப் பகவானே அழைத்துச் சென்றார்... தாசி வீட்டுத் தாம்பூலத்தோடு கோயிலுக்குள் சுந்தரமூர்த்தியை வரச் செய்தார்.... சொர்க்க வாழ்வு சுந்தரமூர்த்திக்குச் சுலபத்திலே அளித்தார். அதற்கு இந்தப் பூணூல்தான் காரணம்” என்று முடித்துவிட்டு அய்யரும் அம்மையும் சென்றார்கள்.
“அப்படியானால் ஆகஸ்ட் போராட்டத்தை மறுத்து ஆச்சாரியார் தியாகி ஆன தற்கும்......” என்று கண்ணப்பர் முடிப்பதற்குள்........
“ஆமாம் பூணூல்தான் காரணம்” என்று பதில் கூறினார் எறிபத்த நாயனார்.
“நாமெல்லாம் எவ்வளவு கஷ்டப்பட்டு எவ்வளவு மகத்தான தியாகங்கள் செய்து இந்த மகேஸ்வரன் திருவடியை அடைந்தோம்.... மாபாதகம் செய்த இந்தப் பிராமணன் ஒரு பூணூல் உதவியால் கைலாசம் வந்துவிட்டானே” என்று சோகமூச்சு விட்டார் மூர்த்தி நாயனார்.
“நாமெல்லாம் திராவிடர், அவர் ஆரியர் சொர்க்க லோகம் போவதில் கூட ஆரிய திராவிட வேறுபாடு வேரூன்றி விட்டதப்பா” என்று இரண்டுதுளி கண்ணீர் விட்டார் அப்பர்.
இந்நிலை மாறத்தான் “இனமுழக்கம்” நடைபெறுகிறது என உரத்துக் கூறியபடி எழுந்தேன் நான்.
“என்னடா தம்பி சொப்பனங் கண்டாயா?” எனக் கேட்டபடி என் தாயார் என் தூக்கத்தைத் தெளிவித்தார்கள்.
என் தூக்கம் கலைந்தது. காமராஜர்—கிராமாணியார்—தூக்கம் கலையவேண்டுமே?
*
—→×←—
கலைஞர் மு. கருணாநிதி · இன முழக்கம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்