கட்டுரை 1 / 6
இன முழக்கம்
The Clarion Call of the Race
அச்சுப் பக்கம் 6–12
scan 6 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
கோவலனையே என் நெஞ்சாரக் காதலித்தேன். கணிகையர் குலத்தில்தான் பிறந்தேன். ஆனால் வேசியாக வாழ விரும்பவில்லை. விஷங்கலவாத நீரோடை என் காதல். என் காதலைப் பாலைவன மாக்கி என் கருத்தில் நுழைந்த கட்டழகரைப் பாண்டியன் பலியிட்டான். அவர் மேல் எனக்கிருந்த அன்பு என்னைத் துறவி யாக்கிற்று.
ஆனால் தமிழ்ப் பெண்ணைக் கேளுங்கள்! “காதலிற்சிறந்தவளுக்கு ஒரு உதாரணம் கொடு” என்று!
என்னை வேசி, விபசாரி என்று வசைமாரி பொழிந்து நாடகம் நடத்துவார்கள் .... சிலப்பதிகாரம் தெரியாதவர்கள், சிந்தனையற்றவர்கள் ...!
காதலுக்கு உதாரணம் இந்திரனைக் கூடிய கௌதமரிஷி மனைவி அகல்யாவும், சந்திரனைக் காமுற்ற பிரகஸ்பதி முனிவர் பத்தினி தாரையும் என்று ... கதை கூறுவார்கள். காதலுக்காக
வாழ்வையே தியாகம் செய்த என்னைச் சொல்ல மாட்டார்கள்!
காரணம் என்ன?
மாதவி.
*
என் காதலன் மதுரைக் காவலனால் கொல்லப்பட்டார் என்று கேட்டு... மன்னனை நீதி கேட்டு, அம் மணிமுடியோன் தன் தவறையுணர்ந்து மாளச் செய்து, மதுரை நகரையே சாம்பலாக்கப் புறப்பட்டேன். என் மனாளனோடு இறப்புலகில் இன்பங் காண எண்ணினேன்.
நான் மட்டுமா பூதப் பாண்டியன் தேவி, தன் கணவன் இறந்ததும் தானும் தீயில் இறங்கினாள். தீ அவளுக்குத் தாமரைப் பொய்கையாய் இருந்ததாம்.
ஆனால் தமிழச்சியைக் கேளுங்கள் “கற்புக்குப் பேர் போனவள் யாரம்மா?” என்று! எங்களைச் சொல்ல மாட்டாள் - ஐவரை மணந்து ஆறாவது புருடனை மாலையிட எண்ணிய திரௌபதியை அழியாத பத்தினி என்பாள்.
காரணம் என்ன?
கண்ணகி.
“என் சகோதரன் செங்குட்டுவன்தான் சேர நாட்டு மகுடத்துக்கு உரியவன். ஒரு நாள் கொலு மண்டபத்தில் ஒரு ஆரூடக்காரன் நுழைந்தான். அவன் அண்ணனுக்கு முடி கிடைக்காது தம்பிக்குத்தான் அந்த அதிர்ஷ்டம் என்று புளுகினான். செங்குட்டுவன் முகத்திலே மாறுதல் படர்வதை நான் கண்டேன், ‘எனக்கு ஆட்சியா? இல்லை.... இல்லை.... இந்த ஜோஸ்யத்தைப் பொய்யாக்குகிறேன்’ என சபதம் ஒலித்து உடனே துறவறம் பூண்டேன். அண்ணனையே அரியணையில் அமர்த்தி அகமகிழ்ந்தேன். இது நான் சகோதரனுக்காகச் செய்த தியாகம்.
ஆனால் தமிழனைக் கேளுங்கள் ‘சகோதர வாஞ்சையுள்ள ஒருவன் பெயரைச் சொல்ல முடியுமா?’ என்று! உடனே பதில் வரும் ‘இராமன் தம்பி பரதன்’ என்று! என்பெயரும் நான் தந்த சிலப்பதிகாரமும் தமிழனுக்குச் சரியாகத் தெரியாது.
காரணம் என்ன?”
இளங்கோவடிகள்.
*
“என் நண்பன் சோழ மன்னனை நான் நேரில் பார்த்தது கூட இல்லை. ஆனால் அறிவின் சிறப்பு எங்களைத் தோழர்களாக்கிற்று, மன்னன் இறந்தான் என்ற செய்தி என் செவியைத் தொடுவதற்குள் நான் மாண்டுவிட்டேன்.
ஆனால் தமிழனைக் கேளுங்கள்; நட்புக்கு யாரப்பா நல்ல உதாரணம்? என்று! என்னைச் சொல்ல மாட்டான் - இராமாயணத்துக் குகன், விபீஷணன் சுக்ரீவன் ஆகியவர்கள்தான் அவன் நினைவுக்கு வருவார்கள்.
காரணம் என்ன?”
புலவர் பிசிராந்தையார்.
*
நானும் பட்டினத்தாரும், தாயுமானவரும், பதினெட்டுச் சித்தரும் எவ்வளவோ பாடிப் பார்த்தோம் இந்தப் பாழ் பட்ட நாட்டைப் பண்படுத்த! நாங்கள் பட்ட தொல்லைகள் கொஞ்சமல்ல. என்னை ஒரு அறையிலே தள்ளிக் கொன்று அருட்பெருஞ் சோதியிலே ஐக்யமாகிவிட்டதாக அறியாத மக்களிடம் அறிவித்துவிட்டனர். இவ்வளவு அல்லலுற்
றோமே...... ஆனால் தமிழனைக் கேட்டுப் பாருங்கள்; ‘உன் நாட்டில் சமரச கீதம் பாடியவர்கள் யாரப்பா?’ என்று! நாங்கள் அவன் நெஞ்சில் இடம் பெற மாட்டோம்.
ஆனால் சாதாரண சாயிபாபா அவன் நெஞ்சில் மட்டுமல்ல.... பொத்தானாக, மோதிரமாக அவன் உடலிலும் இடம் பெறுவார்.
காரணம் என்ன?
வடலூர் இராமலிங்கம்.
*
“கர்வத்தால் கனத்துப்போன கனக விசயர் தலைகளில் கல்லேற்றி இமயத்தில் கொடி பொறித்து, இந்நாட்டுப் புகழ் பெருக்கி வந்தேன். தமிழர் வீரத்தைத் தரணிக்கு எடுத்துக் காட்டினேன்.
ஆனால் தமிழனைக் கேளுங்கள்; ‘வீரத்திற்குச் சான்று யார்?’ என்று! என்னை மறந்து விடுவான் மறைந்திருந்து வாலியைக் கொன்ற மகாவிஷ்ணுவின்அவதாரம் இராமபிரான் என்று வர்ணிப்பான்.
காரணம் என்ன?”
சேரன் செங்குட்டுவன்.
உலகு செழிக்க - வாழ்வு உயர - அல்லல் மாள - அவதி நீங்க - அரும் பாடு பட்டு ஆயிரத்து முன்னூற்று முப்பது அருங் குறட்பாக்கள் அளித் ....
ஆனால் தமிழனிடம், “வாழ்வு ஓங்க வழி வகுத்தவன் யார்?” என்று வினவுங்கள். பகவத்கீதையைத்தான், கண்ணன் காட்டிய வழி என்று உங்களிடம் காட்டுவான்.
காரணம் என்ன?
திருவள்ளுவர்
*
“ஒரு நாள்..... மாலை நேரம் தேரில் சென்று கொண்டிருந்தேன். சிரித்த முல்லைக் கொடி தழுவிப் படரக் கொம்பில்லாமல் தவித்தது. என் தேரை நிறுத்தி அதன் தூணில் அதைப் படர விட்டு.... கால் நடையாக அரண்மனை திரும்பினேன். புலவர்களுக் கெல்லாம் பொன்னும் மணியும் அள்ளிக் கொடுத்தேன்.
ஆனால் தமிழனைப் பார்த்து ‘தம்பீ! கொடை வள்ளல் ஒருவன் பெயரைக் குறிப்பிடு’ என்று
கேட்டுப் பாருங்கள்; என் பண்பே அவனுக்குத் தெரியாது. ‘கொடைக்குக் கர்ண மகாராஜா’ என்பான்.
காரணம் என்ன?
பாரிவள்ளல்.
*
காரணம் என்ன? .... அத்தனை பேருங் கேட்கிறார்கள், காரணம் என்ன? என்று!.... காமராஜ நாடார் தனக்குத் தெரியாது என்கிறார். கிராமணியார்தெரிந்தும், காரணம் சொல்ல மறுக்கிறார்.
இதோ காரணம் சொல்கிறான் சுயமரியாதைக் ....
‘வள்ளுவரே! வடலூர் இராமலிங்கரே! வாளுக்கஞ்சா வீர செங்குட்டுவரே! வள்ளல் பாரியே! மாதவியே! கண்ணகியே! நீங்கள் போற்றப்படவில்லை, காரணம்: நீங்கள் திராவிட இனம். அவர்கள் ஆரிய இனம்.’
“திராவிடன் திராவிடனைப் போற்றாத அளவுக்கு மான மிழந்து விட்டானா? இப்படித் திருவள்ளுவர் கேட்கிறார்? சோகமாக!
‘இந்நிலை மாறாதா?’ என கண்ணீர் விடுகிறாள் கண்ணகி.
‘மாறும் ... அதற்குத்தான் நாட்டில் இன முழக்கம் நடைபெறுகிறது’, என்று ஆறுதல் வார்த்தை பேசுகிறான் உறுதியொளி வீசும் கண்களோடு சுயமரியாதைக்காரன்!”
—→×←—
கலைஞர் மு. கருணாநிதி · இன முழக்கம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்