கட்டுரை 3 / 6
முரசறைவாய்
Beat the Drum
அச்சுப் பக்கம் 25–28
scan 25 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
“வாளை எடு! வாழ்வா? சாவா? என்பதைப் போரில் புரிந்து கொள்வோம்” என்பதற்கு மட்டுமல்ல. “வாழ்விலோர் திருநாள்” பாடி, வளமார் நாட்டை வாழ்த்திடவும் முரசு முழங்குவதுண்டு.
அந்நாள் ஆண்ட மறத்தமிழன் கனகனையும் விசயனையும் களத்தினில் சந்திப்பான். போர்முரசு கொட்டிப் புலிப்பாய்ச்சல் நடத்துவான். அந்த ஆரிய மன்னர் சிரம் நொறுங்க, கண்ணகி சிலைக்குக் கல்லேற்றி சிங்க நடை போட்டு வருவான். ரத்தம் படிந்த வெற்றி முரசின் ஒலியும், ‘வாழ்க தமிழன்’ என்ற கீதமும் இமயத்தில் எழுந்து, விந்தியத்தில் எதிரொலித்து, கன்யா குமரியின் கடலோசையில் கலக்கும்.
வாடிக் கிடந்த காதலியை வெற்றி முரசம் துள்ளியெழச் செய்ய - புதுத் துடிப்பால் பூரித்த இசயங்காட்டி பொன்னழகி வழிபார்த்து நிற்க ‘தென்றலே! என்னைத் தேடித் துவண்டாயோ?’ என்று வந்த காளை, வாய் திறப்பதற்குள் .... மணவாளன் மார்பினி
லே காயங்கண்டு பனிப்பார்வை வீசி, அவன் மலைத் தோளில் முகத்தை ஒட்டிக்கொள்ள - அந்த மகிழ்ச்சியை ஒரு கவிதையாக மாற்ற நினைத்து எல்லைக்குள் அதை அடக்க முடியாமல் தோல்வியால் தொங்கிய முகத்துடன் ஒரு புலவன் திரும்பிவிட.....
இங்ஙனம் காதலும் வீரமும் கரைபுரண்டோடியது திராவிடத்தில் ஒரு நாள்! ஆனால் பயனற்ற இன்றைய பாட்டிக் கதையல்ல! நம் பாட்டனும் பாட்டியும் வாழ்ந்த வரலாறு! பெற்றிருந்த பண்பு!
ஆரியர் உருட்டி விளையாடும் உருட்டுச்சட்டிப் பொம்மைகளாய், ஆங்கில ஏகாதிபத்தியத்தைவிடக் கொடிய வடவர் ஏகாதிபத்தியத்தின் வால் பிடிப்பவர்களாய் - சீரிளமைத் தமிழ் ஒழித்து, செந்தமிழ் நாடழிக்க இந்தி மொழிக்குப் ‘பாராக்கு’ கூறும் சிப்பாய்களாய், இங்குள்ள தோழர் இருக்குங் காலத்திலேயே பொங்கல் விழாக் கண்டு நமக்குப் பூரிப்பு தங்கவில்லை யென்றால், காமராஜர்கள் சண்முகங்கள், ஜீவாக்கள் தோன்றி யிராத அந்தக் காலத்தில் மானத்துக்கும் தமிழனுக்கும் நீங்காத தொடர்பு இருந்த அந்தக் காலத்தில் - களத்தில் ஈட்டியைச் சுவைத்துக் கிடந்த வீர பரம்பரை வாழ்ந்த அந்தக் காலத்தில் - பொங்கல் இப்படிச் சோற்றுப் பொங்கலாகவா இருந்திருக்கும்!
“அறுவடை முடிந்ததா அத்தான்?” என்று அவள் கேட்க, “எதிரிகளின் படையை நம் மன்னர் அறுத்துக் குவிக்கும் போது பகை மன்னன் மார்பிலிருந்து உருண்டோடிய மாணிக்கத்தைப் போல இதோ பார் நெல் மணிகளை!” என்று கணவன் பதில் கூறியிருப்பான்.
“அதோ பார் கொல்லையில் ஆரியனின் வயிறுபோல வைக்கோற்போர்!” என்று காட்டி இருப்பான்.
“அத்தான்! பதரைத் தூற்ற வேண்டாமா?” எனக் கேட்டு முறம் எடுக்கச் செல்பவளைப் பார்த்து, “கண்ணே! தமிழினத்தில் வந்து கலக்கும் ஆரியக் கொள்கைகளை அகற்றுவதுபோல் இந்தப் பதர்களை அகற்று” எனச் சொல்லி இருப்பான்.
திராவிடனே! அந்நாளை நினைத்துப் பார்!
பசி பசி என்று பச்சிளங் குழந்தை அழ. அதுகண்டு பெற்ற தாய் அழ... “பொங்கலிலும் நாம் பட்டினி தாண்டா கண்ணே!” என்று தந்தை அழுகின்ற இந்நாளின் கோர நிலையையும் நினைத்துப் பார்!
கிரேக்க ரோமானிய நாடுகள் உன் நாட்டுப் பொருளுக்கு வாய் பிளந்து கிடந்தனவே! நீ ஒரு பிடி சோற்றுக்கும் ஒரு முழத் துணிக்கும் வாய் பிளந்து கிடக்கிறாயே!
இமயமும் இலங்கையும் உன் ஆணை கேட்டுத் தலை கவிழ்ந்தனவே! இன்று நீ அடிமையாக வாழ்கிறாயே!
‘இனிமைத் தமிழ் மொழி எமக்கின்பந் தரும்படி வாய்ந்த நல் அமுது’ என்று இசைத்தனையே - இன்று இந்திக்குத் தண்டனிடுகிறாயே!
சரித்திரத்தில் திரையிடப்பட்டுள்ள உன் பெருமைகளைக் கேட்டுப் பார்! வேங்கை யொத்த பகைவர் எத்தனையோ பேர் உன் வேல்பட்டு வீழ்ந்தனரே -- வீர மகனே! உன் கண்களிலே கனல் என்றால் எதிரியின் பாசரை தீய்க்கு இரை யென்று தானே பொருள்! உன் வீர முழக்கம் வேற்று மன்னன் கோட்டைக்கு வேட்டாயிற்றே! அவை யெல்லாம் இந்நாள் எங்கே?
கடல் கொள்ளாமல் - - - - களம் புரண்ட ரத்த வெள்ளம் கொள்ளாமல் - பகைவரின் போர்த்திறங் கொள்ளாமல் - வீரத்தை விலை கேட்கும் ஆரியம் கொண்டது ஏன்?
அந்நிலை மீளாதா? புது வாழ்வு மலராதா? மலரும்! மலர வேண்டுமானால் திராவிடா! இந்தப் பொங்கலில் உன் உள்ளம் பொங்கட்டும்!
குன்றெடுக்கும் நெடுந் தோளான் குலத்தினனே! குள்ள
நரிக் கூட்டத்தின் குணமறுக்க கூர்வாள் எடு!
சாணிப் பிள்ளையாரும் சீனிப்பாயசமும் பொங்கலின் குறிக்கோளல்ல!
கோணிக் கிடக்கும் சமுதாயத்தின் குறை தவிர்க்க முரசறைவாய்!
போர் முரசறைவாய்
—→×←—
கலைஞர் மு. கருணாநிதி · இன முழக்கம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்