கட்டுரை 4 / 6
பழிக்குப் பழி
Revenge for Revenge
அச்சுப் பக்கம் 30–36
scan 30 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
“நம் நாடு வளமையாக இருக்க வேண்டுமானால் நாட்டிலுள்ள வகுப்புவாதக் குரோதங்களை அடியோடு ஒழிக்க வேண்டும், மகாத்மாவின் வாழ்நாளில் முழுவெற்றி அடைய முடியாத வகுப்புவாத ஒழிப்பை அவரது மரணத்தின் விளைவாகவேனும் பெற வேண்டும் ........”
இது திராவிடர் கழகத்துத் தீர்மானமல்ல! காங்கிரஸ் காரியக் கமிட்டி முடிவின் சாரம்.
நாம் வரவேற்கிறோம், ‘சொன்னோம், சொல்கிறார்கள்’ என்று பெருமைப்படுகிறோம். நமது பாசறை கீதத்தின் எதிரொலி இது என மகிழ்கிறோம்.
மதமெனும் பேய் பிடியாதிருக்க வேண்டுமென நாம் கூறிய காலத்தில் நமக்குக் கிடைத்தது நாத்திகர் பட்டம். இன்று அவர்கள் கருத்தில் இது கலக்க, காந்தியாரைப் பலிகொடுக்க வேண்டியதாயிற்று.
இந்தத் தெளிவும் முடிவும் முன்னமே செயலாக மாறியிருந்தால் ஒரு உத்தமரின் கோரக் கொலை நடந்திருக்காது.
நடந்ததை மறப்போம். நாட்டு நலத்தில் விழி வைத்து........ இனியாவது நல்லவழி நடப்போம்........ என்ற உறுதிமொழிதான் இனி திராவிடர்க்குத் தேவை!
“வகுப்பு வாதம்” வீழ்க என்கிறது காரியக் கமிட்டி.
‘சாபத்திற்காளான அந்த வகுப்பு வாதம் எது?........ அந்த வகுப்பு வாதத்தின் ‘உயிர்நிலை’ எங்கே இருக்கிறது......?’ என்ற ஆராய்ச்சி அவசியம் தேவை.
‘அல்லித் தண்டில் நுழைந்து பாதாள லோகம் சென்றால்...... அங்கிருக்கும் பாறைகளின் இடுக்கில் பறந்து கொண்டிருக்கும் பெரிய வண்டில் இருக்கிறது மயில் ராவணன் உயிர்’ என்பார்கள் பௌராணிக போதகர்கள்.
அதைப் போலவேதான் வகுப்பு வாதத்தின் உயிர்நிலையும் அமைக்கப்பட்டிருக்கிறது. வகுப்பு வாதம் விழவேண்டுமானால் மேற் போக்கான திருத்தங்கள் பயன்படா! அதன்
ஆணிவேர் அறுபட வேண்டும். வகுப்புகளை அனுமதித்துக் கொண்டு வகுப்புவாதத்தை அழிக்க நினைப்பது ஆகாத செயல்! நெருப்பையும் மூட்டி விட்டு அதை அணைக்கவும் நீர் தேடுவது போல!
வகுப்பு ஒழிந்தால் வாதம் ஒழியும்—வகுப்பு வளர்ந்தால் வகுப்பு வாதம் வளரும்.
பார்ப்பனீயம் ஆகாது—கூடாது—என்று நாம் பேசுவது வகுப்புவாதம் என எதிரிகளால் பிரச்சாரம் செய்யப்படுகிறது. வகுப்புக் கலவரத்தைக் கிளப்பிவிடும் சாதனத்திற்குப் பெயர் வகுப்பு வாதமா? அல்லது வகுப்புப் பேதத்தைத் தகர்த்தெரியும் திராவிடர் கழகக் கொள்கைகளுக்குப் பெயர் வகுப்பு வாதமா?
கலகமும் போராட்டமும் ஏற்படுவதற்குக் காரணம் தன்னுடைய மனிதாபிமானமற்ற கொள்கைகளை விடாப்பிடியாக பிடித்துக் கொண்டு இந்த நாட்டில் அக்கிரகாரங்களில்—ஆலயங்களில்—சிற்றுண்டிச்சாலைகளில்—அரசியல் துறைகளில் தங்கள் சாதி உயர்வைக் காட்டிக் கொண்டிருக்கும் பார்ப்பனியமும்—பிராமண சேவா சங்கங்களும் வகுப்புவாத ஸ்தாபனங்களாக்கப்பட்டு ஒழிக்கப் படவேண்டும்.
வகுப்புக்கள்—சாதிமுறைகள்—பிறவியின் காரணமாக உயர்வு தாழ்வுகள் அழிக்கப்பட்டால்
பறையன்—பள்ளன்—பார்ப்பனன் என்ற பேதங்கள் மறையும். சாதிக் கொரு சங்கம்—சங்கங்களுக்குள் போட்டி......... என்ற நிலை மாறும். சமத்துவம் பூக்கும். சமதர்மம் ஓங்கும்.
காந்தியாருக்காக கட்டப்படும் உண்மையான நினைவுச் சின்னங்கூட இதுதான்! வகுப்புவாதம் வீழ்வதற்கு சரியான வழி...... வகுப்பு வாதத்தின் உயிர் நிலையில் வாள் வீசுவதுதான்! நமது ஆட்சியாளர் இதைச் செய்ய வேண்டும்.
‘மதத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்தாபனங்கள் அரசியல் லட்சியங்களுடன் வேலை செய்வதற்கு இடந்தரக் கூடாது’
காங்கிரஸ் காரியக் கமிட்டியின் இந்தத் தீர்மானமும் மிகவும் பாரட்டத் தக்கது. மதத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்தாபனங்கள் அரசியல் லட்சியங்களோடு வேலை செய்வதற்கு மட்டுமில்லை—மதத்தை அடிப்படையாகக் கொண்ட ஸ்தாபனங்கள் இருப்பதுகூட ஆபத்து—அபாய அறிகுறி—அடுத்து ஒரு கோட்சே தோன்ற காரணமாகிவிடும் என்பது நம் கருத்து.
மத ஸ்தாபனங்கள் அரசியல் லட்சியங்களோடு வேலை செய்வதால் மட்டுமே....... இம்மாதிரிக் கோணல்கள் விளைவதாகக் கூற முடியாது.
‘பறையனுக்கு என்னடா பக்தி?’ என்ற பதட்டம் நந்தனை நெருப்பில் தள்ளி ‘ஜோதில்கலந்தான்’ எனக் கூறிற்று. மதத் திரையில் அந்த மாபெரும் சதி மறைந்தது.
‘மதமெனும் பேய் மாய்க’ எனக் கூறிய இராமலிங்கர் மதவெறியர்களால் கொலை செய்யப்பட்டார். ‘அருட் சோதியிலே ஐக்கியமானார்’ என்ற அண்டப் புளுகு உருவாயிற்று. மதபக்தி மக்கள் கண்களை—கருத்தை மறைத்தது.
எண்ணாயிரம் சமணர்களைக் கழுவேற்றி........... கழு மரங்களுக்கு ‘ரத்த அபிஷேகம்’ செய்து வைத்தார் திருஞானசம்பந்தர். ஏனென்று கேட்கவில்லை மக்கள். மத விசுவாசம் அவர்களை மௌனிகளாக்கிற்று.
இப்பொழுதுதான் என்ன; காந்தியார், புதுடில்லியில் பொதுமக்கள் முன்னிலையில் சுடப்படாமல்—வார்தா ஆஸ்ரமத்தில் கொல்லப்பட்டிருந்தால் அவரை அந்தக் கொலைக்காரர்களே
எடுத்துப் புதைத்துவிட்டு “காந்திஜீ திடீரென்று புஷ்ப விமானத்தில் ஏறிச் சொர்க்கலோகம் போயிருக்கிறார்” என்று புராணம் பாடி யிருப்பார்கள். மதவெறி செய்த சதி மறைக்கப்பட்டிருக்கும்.
நந்தனை நாசமாக்கி—வள்ளலார் வாழ்வை வெட்டி—சமணரைச் சாய்த்து இதுவரை இன்ப வாழ்வு நடத்தியதைப் போலவே இனியும் இந்தச் சதிகார மதம் வாழ, வழிகோலப்பட்டிருக்கும்.
ஆனால் காந்தியாரின் படுகொலை, இந்து மதத்தின் ரத்தம் தோய்ந்த நாக்கை, நமக் கெல்லாம்—இல்லை—நம் பேச்சைக் கேளாமல் இருப்பவர்க் கெல்லாம், படம் பிடித்து காட்டி விட்டது.
இதற்காகத்தான் சொல்லுகிறோம் மதவெறியின் கடைசி இரையாக மாவீரர் காந்தி இருக்கட்டும் என்று!
காந்தியாரின் சோக முடிவு பாம்புக்கு பால்வார்த்த கதை! எந்த வர்ணாஸ்ரமத்தைக் காக்க வழி வகுத்தாரோ அந்த வர்ணாஸ்ரமம் அவர் வாழ்வு குடிக்கும் பாம்பாயிற்று! எந்த இந்துமத சீர்திருத்தம் தேவை என பணிபுரிந்தாரோ...... அதே இந்துமதம் அவருக்கு இறுதியில் பரிசாக மூன்று
குண்டுகளை அளித்தது. காந்தியார் அகிம்ஸைக்காகப் பாடுபட்டார்...... அதில் அவர் வெற்றியடையவில்லை என்பதற்கு கோட்சேயின் கோரச் சிரிப்பு சான்று!
காந்தியார், உண்மை-சத்திய நெறி இவைகளைப் போதித்தார். அதில் அவர் தோல்வியுற்றார் என்பதற்குச் செய்திகளைத் திரித்துப் போட்டு அராஜகத்தைக் கிளப்பிவிடும் இந்து—மதத்தின் ஏடுகள் சான்று!
காந்தியார், இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகப் பாடு பட்டார்—அதிலும் அவருக்கு வெற்றி இல்லை என்பதற்குப் பாகிஸ்தான் பகிர்ந்தளிக்கப் பட்டதே சான்று!
காந்தியார் அமைதிக்கு வழி கோலினார்...... அதிலும் அவர் ஆறுதல் பெறவில்லை என்பதற்கு நாட்டிலே பெருத்த கலகங்கள் சான்று!
காந்தியாரின் வெற்றிப்பாதைகளிலே முட்டுக் கட்டையாக நின்றது எது?....... எது? எது?......... மதம்! மதவெறி! இந்த வெறி ஒரு விடுதலை வீரரை வீழ்த்தியது...... இந்த மதத்தைப் பழிக்குப்
பழி வாங்க வேண்டாமா? மிஞ்சியுள்ள தலைவர்களையாவது காப்பாற்ற வேண்டாமா? திராவிடரே? சொல்லுங்கள்!
—→×←—
கலைஞர் மு. கருணாநிதி · இன முழக்கம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்