கட்டுரை 5 / 6
ஆரியம் பேசுகிறது
Aryanism Speaks
அச்சுப் பக்கம் 38–38
scan 38 shows no printed numeral
கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.
இரணியன் மகன் பிரகலாதனுக்குத் தந்தை என்ற வாஞ்சையைத் தவிடு பொடியாக்கி........ தந்தைக்கு எதிரியாக பிரகலாதனை ஆட்டி வைத்து இரணியனின் உயிர் குடித்து ஏப்ப மிட்டேன்.
தென்னிலங்கை வேந்தன் இராவணனுக்கு இளையோன் விபீஷணன். அவனிடத்தில் ஆசை வலை விரித்தேன். அவன் சுருண்டான். இலங்கை இருண்டது. இராவணனை வஞ்சம் தீர்த்து வாழ்ந்தேன்.
வாலியும் சுக்ரீவனும் பிரிபடாத சகோதரர்கள், குடும்பத்திலே தகராறு! அதை என் குல வளர்ச்சிக்குப் பயன்படுத்தி வாலி சுக்ரீவர்களை மோத விட்டு வாலிவதைப் படலம் கண்டேன்.
எண்ணாயிரம் சமணப் பெரியோர்! எப்பாடு பட்டுச் சமணத்தை வளர்த்தனர் தெரியுமா? குலச்
சிறை யென்று ஒரு கோடாரிக் காம்பு கிடைத்தான். அவனைச் சமணர் விரோதியாக்கி எண்ணாயிரம் பேரையும் துடிக்கத் துடிக்கக் கழுவேற்றி, களிப்புக் கொண்டேன்.
அவ்வளவு ஏன்? காந்தியார் உயிரைக் கோட்சே உருவில் உறிஞ்சினேன். உலகம் தேம்பியழுத போது நான் தித்திப்பு வழங்கினேன்.
என் கோர சொரூபத்தை ஒரு சில திராவிடப் பத்திரிகைகள் எடுத்தெழுதின என்பதற்காக ஓமாந்தூராரை அதட்டிக் கேட்டேன், “ஆரியத்துக்கு எதிர்ப்பா?” என்று! ஆட்சி பீடம் ஆடிற்று. அதன் எதிரொலி.......கறுப்புப் படையின் மேல் அடக்கு முறை!
என்ன முறைக்கிறீர்கள்? நான் நினைத்தால் யாரையும் அரியாசனத்திலிருந்து அகற்றி விட முடியும்.
உங்கள் இனத்தில் விபீஷண சுக்ரீவர் இருக்கும் வரையில் எனக்கு இங்கு விருந்துதான்!
—→×←—
கலைஞர் மு. கருணாநிதி · இன முழக்கம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்