பொருளடக்கம்

6. கவிதைகள்

கட்டுரை 6 / 6

கவிதைகள்

Poems

அச்சுப் பக்கம் 40–48

X

கீழே அச்சிட்ட மூலத்தின்படி சரிபார்க்கப்பட்ட தமிழ்க் கட்டுரை — சொற்கள், நிறுத்தக் குறிகள், மேற்கோள்கள், அச்சுத் துணைத்தலைப்புகள் அனைத்தும் மூலத்தின்படியே.

நியாயத் திராசு!

புண்ணுக்கு மருந்திட்டு ஆற்ற வழி தேடிடுவாய்! கண்ணுக்குள் பாவைபோல் உருண்டிடும் உள்ளம்—கைம் பெண்ணுக்கு இருப்பதையும் உணர்ந்திடுவாய்!

“என் மனைவி இறந்திட்டாள்” வேறுமணம் வேண்டுமென்பாய் பின் நீ சாவு முனை அடைந்திட்டால் உன் மனையாள் காவு கொடுக்க வேண்டுமோ காதல்தனை.

ஏற்பரோ!

தருமனும் பீமனும் மற்று மூவரும் போதாது கருணனையும் காதலித்தாள் பாஞ்சாலி! அட்டா! இலக்குமியும் பார்வதியும் இசைச் செல்வி கலைமகளும் கடல்தனை வெறுக்கவில்லை கற்பிழந்து போனதால்! கைச்சரக்கல்ல! கதையுண்டு! இந்திரனுக்குடன் பட்டாள அகல்யை எனும் ரிஷி குலத்தாள்; சந்திரனைக் காமுற்றாள் தாரையாம் தவப் பெண்ணாள்; இத்தனை புராணத்தையும்

இந்நாட்டுக் கோசாக்கள் முத்தமிழில் தீட்டித் தந்தார் முதுகெலும்பு வளைந்ததாலே!

“மலை வந்தெதிர்த்த போதும் கற்புக் குலையோம்” என வீரமொழி பேசும் பெண்டீர்! மேற்சொன்ன பெண்களெல்லாம் தெய்வமென்றால் ஏற்பாரோ மனமுள்ளார் உங்கள் பேச்சை.

சைவரே!

ஏறிபத்தர் எதிரிகளை மழுவால் வதைத்தார்! முறிபட்டார் தாய்தந்தை மனைவி மக்கள், கோட்புலியால்! நிலைக்களமாம் அன்புக்குச் சைவம் என்பீர்! கொலைக்களத்தில் குலச் சிறையால் சமணர் செத்தார்! தலைக்கனம் பிடித்துப் பிதற்றுகின்ற மெய்யன்பீர்! வலைக்குள் மாட்டிட வளர்த்துவந்த சைவத்தை, சாக்காட்டால் மோதி சடுதியில் சாய்த்திடுவோம்! பூக்காட்டில் புகுந்துவரும் தென்றலல்ல நாங்கள்! புயல் என அறிவீர்!

வா!

நக்கிக் குடிக்கின்றார் நம்புலவர் கலைரசத்தை சொக்கித் துதிபாடும் சோதாவே புரட்டிப்பார்! ஆபாசத்தை அழகு தட்டில் ஊற்றி பாயாசமென் றுரைத்தால் பருகுவரோ பண்டிதர்? கம்பருங் கிழாரும் நம்மருந் திராவிடத்தில் வெம்பிய கலை வகுத்தார்! கருத்துக்குக் கலையா? கட்டுப்பாட்டுக்குக் கலையா? வெறுத்தொதுக்கும் காலமே வேகமாய் வா நீ!

பொதுவுடைமையே!

‘முன்னூறு நானூறு வேலியேன் முதலாளியே! உன்னாலே ஓர் ஏழை உயர்ந்த துண்டா?” என்று என்னேரங் கேட்டிடும் எந்நாட்டுத் தோழா! உரமான உனது நெஞ்சின் வினாவை வரவேற்று உபசரித்து மகிழ்கின்றேன் மரமாவாய் என் கேள்வி எழுந்தவுடன்!

யோசித்துப் பார்!

கல்லுக்கு ஆயிரம் வேலி ஆலயத்தில் உண்டு நண்பா! புல்லுக்கும் பயனில்லை புலம்புகின்றார் ஏழை மக்கள் பல்லிடுக்கால் ஒரு வார்த்தை பாரத வீரா!

மாணவர் எழுச்சி.

சேரர் வாழ்ந்த சிறப்பிடம் எங்கே? வீரர் பாண்டியன் அரசேன் கவிழ்ந்தது? சோழர் உலவிய சோர்விலா நாட்டில் கோழைக் கொள்கை குவிந்த தெவ்விதம்? வெடித்தன வினாக்கள் வெதும்பிய மனத்தில் குடித்திடுவோம் உயிர்! கொடுத்திடுங்கள் நாட்டை! பிரிவினை வேண்டாமெனும் பெரும் உபதேசம் நரிகளின் ஊளை! நாட்டு வெறி பிடித்த காளைகளே! கிலிபிடித்த மனிதர்களைக் கீறியெறியுங்கள்! புலி வாழ்வின் உச்சியிலே புதுமைதனைப் பொறித்திடுவோம்.

வாளிங்கே!

குடிசைதான்! ஒருபுறத்தில் கூரிய வேல்வாள் வரிசையாய் அமைந்திருக்கும்—வையத்தைப் பிடிப்பதற்கும் வெம்பகை முடிப்பதற்கும் வடித்துவைத்த படைக்கலம்போல் மின்னும்; புலியின் குகையினிலே அழகில்லை— புதுமையல்லவும் கிலியும் மெய் சிலிர்ப்பும் கீழிறங்கும் தன்மையும் தலைகாட்டா மானத்தின் உறைவிடம்— மறவன் மாளிகை.

இல்லத்தின் வாயிலிலே கிண்ணத்துச் சோற்றோடு வெல்லத்தைச் சிறிது கலந்து வயிற்றுக்குள் வழியனுப்ப பொக்கை வாய்தனைத் திறந்து பிடியன்னம் எடுத்துப் போட்டாள் பெருநரைக் கிழவி யொருத்தி.

ஓடி வந்தான் ஒரு வீரன் “ஒரு சேதி பாட்டி!” என்றான் ஆடிவந்த சிறுமிபோல் பெருமூச்சு வாங்குகின்றாய் ஆண் மகனா நீ தம்பி! அவசரம் வேண்டாம்! மூச்சுக்கு மூச்சு இடைவேளை ஏற்படட்டும் பின்,

பேச்சுக்குத் துவக்கம் செய் என்றாள்—அந்தக் கிண்டலுக்குப் பேர்போன கிழட்டுத் தமிழச்சி!

வேடிக்கை நேரமல்ல பாட்டி—உன் வாடிக்கைக் கேலியை விட்டுவிடு ‘மடிந்தான் உன் மகன் களத்தில்’ என்றான்—மனம் ஒடிந்து நிமிர்ந்தாள் தாய்க்கிழவி ஒருமுறை!

“தாயம் ஆடுகையில் காய்களை வெட்டுவதுண்டு—களமும் அதுதான் காயம் மார்பிலா? முதுகிலா? கழறுவாய்” என்றாள்—முதுகிலென்றான்.

கிழவி துடித்தனள் இதயம் வெடித்தனள் வாளை எடுத்தனள் முழவு ஒலித்த திக்கை நோக்கி முடுக்கினாள் வேகம்!

“கோழைக்குப் பால் கொடுத்தேன் குப்புற வீழ்ந்துகிடக்கும் மோழைக்குப் பெயர் போர் வீரனாம் முன்பொருநாள் பாய்ந்துவந்த ஈட்டிக்குப் பதில் சொல்ல மார்பைக் காட்டிச் சாய்ந்து கிடந்தார் என் சாகாத கண்ணாளன். அவருக்குப் பிறந்தானா? அட்டா மானமெங்கே—குட்டிச் சுவருக்கும் கீழாக வீழ்ந்து பட்டான் வெட்கம்! வெட்கம்!

இமய வரம்பினிலே வீரம் சிரிக்கும்—இங்கு வீணை நரம்பினிலே இசை துடிக்கும் அதுவும் மானம் மானமென்றே முழங்கும் மதுவும் சுராவும் உண்டு சாகும் மானமற்ற ஆரியத்தின் வம்சமா நீ—ஏடா மறத் தமிழ்க் குடியிலே மாசு தூவி விட்டாய் மார்பு கொடுத்தேன் மகனாய் வளர்த்தேன்—தின்று கொழுத்துத் திமிர் பாய்ந்த தோள்களெங்கே? தினவெடுக்கவில்லையா அந்தோ! வேலுக்கு வழி சொல்ல வகையற்ற கோழையே—என் வீரப் பாலுக்கு வழி சொல்வாய்”

என்று கதறினாள் எண்பதை நெருங்கிய ஏழைக் கிழவி.

சென்றடைந்து தெரு முனையில் சிதறிக் கிடக்கும் செந்தமிழ்க் காளைகளைப் புரட்டிப் பார்த்தாள்—அங்கு நந்தமிழ் நாட்டைக் காக்க ஓடிற்று ரத்த வெள்ளம்! பிணக்குவியலிலே பெருமூச்சு வாங்க நடந்தாள்! மணப் பந்தலிலும் அந்த மகிழ்ச்சி அடையவில்லை—மகன்

பிறந்த போதும் மகிழ்ச்சிக்கு எல்லையுண்டு—அவன் இறந்து கிடந்தான் ஈட்டிக்கு மார்பு காட்டி! இதைக் கண்டாள்—இதயங் குளிர்ந்தாள்!

“எதைக் கண்டாலும் இனிக்கவலை இல்லை என் மகன் வீரனாய் இறந்தான்” என்றாள் அறுத்தெறிய இருந்தேன் அவன் குடித்த மார்பை அடடா! கருத்தெரிய பொய் சொன்ன கயவனெங்கே? வாளிங்கே! அவன் நாக்கெங்கே?

தோல்வி எப்பொழுது?

சுண்டெலி வந்ததென்று சூரப்பூனை அடுப்பின் அண்டையில் பதுங்க! அரவமொன் றாடியோட கண்ட கீரிப்பிள்ளை கலங்கியே வியர்த்து நிற்க! மண்டலத்தில்லா இம் மாபெரும் வேடிக்கைகள் வண்டமிழ் நாட்டில் வந்தால் வாகை சூடி வாழ்ந்திருந்து சண்டைக்குச் சளைக்காத சிங்கத் தமிழக்காளை யெல்லாம் நண்டுக்குப் பயந்தொளிந்த நரியைப்போல்—ஆரிய வெண்டைக்காய் வீரரிடம் வெற்றிகளைக் கொடுத்திடுவார்!

இன்னுமா கூச்சல்?

காவிரியின் கரையினிலே பெண்ணையின் பாய்ச்சலிலே சரிதமில்லை! சரிதமில்லை! ஐயகோ தமிழ்நாடே! ஆரம்பம் கங்கையிலாம் பாண்டியர் ஆண்டதை யார் கண்டார்? சேரர் செழிப்பைச் செதுக்கிய தெவர்? சோழர் வளப்பம் சொன்னதுமுண்டோ? செருப்பாண்ட கதைதான் சரிதத் தொடக்கம்! மறுப்பவரெல்லாம் மானம் விற்றார். மாற்றியமைத்திட மாணவர் வந்தார்! பளிச் செனப் பாய்வர் பாசறை வீரர்! இளித்தவாயரே! இன்னுமா கூச்சல்?

வருணமா? மரணமா?

பரணி பலபாடிப் பாங்குடன் வாழ்ந்த பைந்தமிழ் நாட்டில் சொரணை சிறிதுமிலாச் சுய நலத்துச் சோதாக்கள் சில கூடி வருணத்தை நிலை நாட்ட வகையின்றிக் கரணங்கள் போட்டாலும் மரணத்தின் உச்சியிலே மானங்காக்க மறத் தமிழா போராடு.

கலைஞர் மு. கருணாநிதி · இன முழக்கம். அச்சிட்ட மூலத்துடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கப்பட்டது. மூலமும் சான்றும்