காட்சி 33
காட்சி 33
ஜமீன் மாளிகை / முதல் இரவு அறை
72 பகுதிகளில்
**ஜமீன் மாளிகை** **முதல் இரவு அறை** (விங்கன், தான் நின்ற இடத்திலிருந்து அவளைப் பார்க்கிறான்; அவளும் பார்க்கிறாள். அருகே வருகிறான்.) விங்கன்:—உமா!...இந்த இன்ப இதழ்கள் இசைப்பது உண்மை யாழ்; என் லட்சியம் நிறைவேற...நான் எந்த நேரத்தில் எதைச் சொன்னாலும்...ஏன் என்று கேட்காமல்...காரணம் எதுவும் புரிந்து கொள்ளத் துடிக்காமல்...நான் சொன்னதை அப்படியே செய்ய வேண்டும்!..கேட்பதை அப்படியே தர வேண்டும்!.. உமா:—இப்பொழுது என்ன கேட்கப்போகிறீர்கள் என்று எனக்குத் தெரியும்...அதை நீங்கள் கேட்காமலே தருவதற்கு... (அவன் கன்னத்தருகே இதழ்களைக் குவித்து நகருகிறாள்...) விங்கன்:—இதல்ல உமா!...இது இன்பபுரிப் பயணம் செல்ல நீ வழங்கும்...தேன்!..கற்கண்டு!..திராட்சை!..ஆனால் என் இலட்சியபுரிப் பயணம் முடிவு பெற...நான் கேட்பதைச் சொல்வதை நீ தட்டாமல் நிறைவேற்ற வேண்டும் என்கிறேன்!.. உமா:—நிச்சயமாக!.. விங்கன்:—(கையை நீட்டி) எங்கே?.. உமா:—சந்தேகமா?... சத்தியமாக!... (கை அடித்துத் தருகிறாள். கைகள் இறுகுகின்றன..) விங்கன்:—உமா! உமா:—அத்தான்!..... (உதயமாகிறது) (அயர்ந்து கட்டிலில் உறங்கும் இருவரில், உமா எழுந்து ஆடை திருத்திப் புறப்படுகிறாள். அவள் சேலைத் தலைப்பை இழுத்தவாறு....) விங்கன்:—எங்கே உமா? உமா:—இருங்கள்! பெட் காபி கொண்டு வருகிறேன்!.. விங்கன்:—(எழுந்தமர்ந்து) காபி...பிறகு!... உமா!...முதலில் உன் தந்தையின் அறைக்குச் செல்!..... உமா:—உம்... விங்கன்:—அவரிடமுள்ள...ஜமீன் களஞ்சியத்தின் சாவிக்கொத்தை அப்படியே...அவருக்குத் தெரியாமல் எடுத்துவா!... உமா:—சாவிக்கொத்தா? ஏன்? விங்கன்:—இரவே சொன்னேனே; காரணம் எதுவும் கேட்கக் கூடாதென்று! ஏன், எதற்காக என்ற கேள்வியே எழக் கூடாது என்று! உமா:—சரி...அப்பா அறைக்கு எப்படிப் போய்... விங்கன்:—உன்னால முடியாது!... பூனையைவிட மிருதுவான உன் பட்டுப் பாதங்களால் ஓசை படாமல் நடந்து...கொண்டுவா அந்த சாவிக்கொத்தை!... (உமா சிறிது தயக்கம்) ஏன் உமா? முடியாதா?... உமா:—இல்லை...இல்லை..இதோ போகிறேன்!... ★