காட்சி 32
காட்சி 32
ஜமீன் மாளிகை / திருமண விழா
72 பகுதிகளில்
**ஜமீன் மாளிகை** **திருமண விழா** ஜமீன்தார்:—(விரக்தியுடன்) நான் சொன்னதை ஒழுங்கா செய்யாம...காரியத்தைக் கெடுத்து விட்டாயே!... காளிங்:—என்ன என்ன செய்யச் சொல்றீங்க? இந்தப்பெண்ணுக்கு இவன்தான் புருஷன்னு...பிறக்கும் போதே பிரம்மதேவன் எங்கேயோ எழுதிப் போட்டுட்டான்...அதை மாத்த நம்மளால முடியுங்களா? (உமாவை மணக்கோலத்தில் மரகதமும், கோகிலாவும் அழைத்து வருதல். மணமக்கள் மணமேடையில் அமருதல்! புரோகிதர் தாலியை எடுத்து விங்கன் கையில் தருதல்...) புரோகிதர்:—கெட்டி மேளம்! கெட்டி மேளம்!.. (தாலியுடன் விங்கன் எழுதல்.) காளிங்:—மாப்பிள்ளே!...உக்காந்துகிட்டே கட்டுங்க!...ஜமீன்தார் வீட்டுப் பொண்ணுன்னு பயந்துகிட்டு மரியாதையா நின்னு தாலிகட்டப் போறீங்களா? விங்கன்:—மரியாதைக்காக எழுந்து நிக்கலே! என் மனத்தில் உள்ள சில விபரங்களை இந்த மணவிழா மண்டபத்தில் வெளியிடுவதற்காக எழுந்து நிற்கிறேன்!.. (ஜமீன்தார் அதிர்ச்சி) ஜமீன்தார் ஜம்புலிங்க பூபதி அவர்கள், தன் அருமை மகள் உமாவை எனக்கு வாழ்க்கைத் துணைவியாக்க சம்மதித்ததற்காக முதலில் என் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன்!...ஆனால் ஒன்று நான் இப்போது ஒரு திடுக்கிடும் ரகசியத்தை வெளியிடப் போகிறேன்!..அதற்குப் பிறகும் ஜமீன்தார் என்னை மருமகனாக ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கிறாரா?...இந்தக் கேள்விக்கு எனக்குப் பதில் வேண்டும்! காளிங்:—முதல்ல என் கேள்விக்கு பதில் தேவை!...அது என்ன அப்படிப்பட்ட ரகசியம்...சிதம்பர ரகசியம்?... விங்கன்:—ஊரார் வணங்கிட, உலகத்தார் போற்றிட, ஜமீன் குடும்பத்தின் கெளரவக்கொடி பட்டொளி வீசிப் பறந்திட, கைகட்டி நிற்கப் பத்து பேர்...கால் பிடித்துச் சேவைசெய்ய பலநூறு பேர்!..இன்னோரன்ன சீரோடும் சிறப்போடும் பெருவாழ்வு—பெருமைக்கு வாழ்வு நடத்துகின்ற மேன்மை தங்கிய ஜம்புலிங்க பூபதியின் மகளுக்குத் தாலிகட்டப் போகிற நான் கேவலம்—சாதாரண ஒரு வண்டிக்காரனின் மகன்!... (ஜமீன்தார் அதிர்ச்சி—சடையன் மகிழ்ச்சி) (சடையனிருக்குமிடம் சென்று அவனை இழுத்துக் கொண்டுவந்து) இவர்தான் என் தந்தை!...இந்த ஜமீனில் வண்டியோட்டும் ஏழை!...பதினைந்து வருடங்களுக்கு முன்...பாசமுள்ள தாய் தந்தையைப் பிரிந்து எங்கேயோ ஓடி...எப்படியோ படித்துப் பட்டம் பெற்று...நானும் ஒரு மனிதன்—எனக்கும் ஒரு குறிக்கோள் உண்டு என்று இங்கேயே வேலைக்கு வந்துவிட்ட விங்கன்...என் பழைய பெயர் சொக்கலிங்கம்! சடையன்:—தம்பி!..சொக்கலிங்கம்...நீ உயிரோடு இருக்கியா?..என் மகனே!... விங்கன்:—உயிரோடு இருக்கிறேன்ப்பா!...இன்னும் உயிரோடிருக்கிற சில மிருகங்களுக்குப் புத்தி புகட்ட இன்னும் உயிரோடிருக்கிறேன்!... (ஜமீன்தாரைப் பார்த்து) இப்போது சொல்லுங்கள்—சடையன் மகனுக்கும், ஜமீன்தார் மகளுக்கும் திருமணம்! சம்மதம்தானே ஜமீன்தார் அவர்களே! சடையன்:—வேண்டாம்பா வேண்டாம்! இது ரொம்ப விபரீதம்! அவுங்க கால்தூசிப் பெறமாட்டோம் நம்ப... ஜமீன்தார்:—(பல்வேறு உணர்ச்சிகள் சமாளித்துக் கொண்டு—அலட்சியமாக சிரித்தவாறு அருகே வந்து) சடையா!...ம்...மன்னிக்கணும்...சம்மந்தி அவர்களே! சடையன்:—அய்யோ எஜமான்!... ஜமீன்தார்:—விங்கன் யார் என்று எனக்கு முன்பே தெரியும்...! என் ரத்தத்தில் ஊறிக்கிடக்கும் சமத்துவம்—சமதர்மம் என்ற உணர்வுகளே நீங்கள் அறியாமல் இருக்கலாம்...ஜமீன்தாரிசம்—சமதர்ம இசம்—இரண்டும் கலந்ததுதான் இந்த ஜம்புலிங்கபூபதி இசம்!...ஜமீன்தார் மகளும்...பத்து மாதத்தில் பிறந்தவள் தான்! வண்டிக்காரன் மகனும் பத்து மாதத்தில் பிறந்தவன் தான்! ஜமீன் குடும்பத்துப் பெண்ணுக்கு சிவப்பு ரத்தம்—வண்டிக்காரன் மகனுக்கு கறுப்பு ரத்தம்—ஆண்டவன் அப்படி பேதம் காட்டிப் படைக்கவில்லையே!...இருவர் உள்ளமும் கலந்தது—இணைந்தது! என் சமத்துவ இதயம் சந்தோஷத்தால் மலர்ந்தது!..விங்கன்!..தயங்கத் தேவையில்லை—தடையேதும் கிடையாது!..நான் பெற்ற தனிக்கொடியின் கழுத்தில் கட்டுச்ச தாலியை!...ம்...வாங்க மாப்பிள்ளே!... (விங்கன் உமாவுக்குத் தாலி கட்டுதல். எல்லோரும் பூ தூவுதல். சடையன் பூ போடுதல்.) காளிங்:—எல்லாரும் சாப்பிடுறதுக்குப் போங்க!.. [கூட்டம் கலைகிறது] (மண மேடைக்கு அருகே...விங்கன்—ஜமீன்தார் இருவர் மட்டுமே நிற்கிறார்கள்...) ஜமீன்தார்:—விங்கன்! இதோ புகைவது ஓமகுண்டத்தின் நெருப்பு!...நினைவிருக்கட்டும்!...என் நெஞ்சத்தில் புகைந்து கொண்டிருப்பது...எரிமலையின் நெருப்பு!...எச்சரிக்கை! எரிமலையின்மீது நின்று மகுடி ஊத முயலாதே!... விங்கன்:—மகுடி ஊதமாட்டேன் மாமனார் அவர்களே!..உத்தமன் என்று திரை போட்டுக்கொண்டு ஊரை ஏமாற்றும் பளபளப்பான பாம்பு மனிதனின் நச்சுப்பல்லைப் பிடுங்கி எறிவேன்!... ஜமீன்தார்:—தோல்விகள்தான் தழுவுவாய்!... விங்கன்:—தோல்விகளையும் வெற்றியின் படிகளாக்கிக் கொள்ளும் வித்தை கற்றவன் நான்!... ஜமீன்தார்:—அதையும் பார்ப்போம்!.. விங்கன்:—நாம் மட்டுமல்ல; இந்த நாடே பார்க்கத்தான் போகிறது!... ஜமீன்தார்:—ஹா! (சிரிப்பு) விங்கன்:—ஹா! (சிரிப்பு) ★