காட்சி 93] [ஜெயில்
காட்சி 93·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
குமுதா: சின்னம்மா ! சின்னம்மா !
பூமாலை : அழாதே குமுதா!...
பாண்டியன் : நீங்கள் கொல்லவில்லை உங்கள் தம்பியை ! அவனுடைய பழைய செயல்கள் அவனைப் பழிதீர்த்துக் கொண்டன !
பூமாலை: ஆரம்பத்திலிருந்தே அவன் நல்லவனாயிருந்தால் எனக்கேன் அவன்மீது ஆத்திரம் வரப்போகிறது. தொட்டுத் தொட்டு வளர்த்த என் செல்வத்தை துடிக்கத் துடிக்க ஏன் கொல்லப்போகிறேன்.
குமுதா: சின்னம்மா!
பூமாலை : குமுதா ! உன் மாமன் உனக்கும் ஊராருக்கும் தந்த உபத்திரவங்களுக்கு உகந்த பரிசு வாங்கிக்கொண்டான் ! உன்னால் சந்தேகிக்கப்பட்ட நானும் களங்கமற்றவள் என்று காட்டிக்கொண்டேன், இந்தக் காரியத்தைச் செய்து !
குமுதா: என்னை மன்னித்துவிடு சின்னம்மா!
பூமாலை : அழாதே கண்ணே அழாதே ! சரி நேரமாகிறது ! குமுதா! பாண்டியன் ! வருகிறேன்.
(மாணவிகளின் கண்களில் நீர். அதைக்கண்ட பூமாலை)
பூமாலை : குமுதா ! என் ஒரே வேண்டுகோளை நிறைவேற்று!
(மாணவிகளைக் காட்டி) இதோ புதிய ஜெகத்தின் பூங்கொத்துகள்! இந்த இளம் இதயங்களிலே அறிவு விளக்கேற்றி வைக்கப் பாடுபடு. திரும்பிப்பார் என்னும் அறிவுரையை, நன்றாக வாழ்பவர்கள், நலிந்து கிடப்பவர்கள் நாசவேலையில் ஈடுபட்டிருப்பவர்கள் அத்தனை பேருக்கும் தேவையான அறிவுரையாக்க நீயும் பாண்டியனும் முயற்சியுங்கள் ! வருகிறேன்.. (மாணவிகளிடம்) என் சிங்காரச் சிட்டுகளே ! எல்லோருக்கும் வாழ்த்து ! திரும்பிப்பார் உபதேசத்தை மறந்துவிடாதீர்கள், நான் திரும்பாத இடத்திற்குச் செல்கிறேன்.
(குழந்தைகள் கண்ணீருடன் நிற்கிறார்கள். பூமாலை வார்டர்கள் கூட்டிப் போகிறார்கள்)
வணக்கம்.