காட்சி 72]

காட்சி 72·93 காட்சிகளில்

கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.

[தாசி வீடு

[பரந்தாமன் தாசியின் வருகைக்காக காத்திருக்க அவள் வந்து திரைமறைவில் நிற்கிறாள்]

பரந்தாமன் : ஏ இங்கே வா! அட த்சு வான்னா ! (ஒரு ரூபாய் நாணயத்தை எடுத்து வீசுகிறான்) வாங்கிறேன்ல !

வர்ரியா நான் வரட்டுமா ? (எழுந்து வந்து) அன்புக்கரசி! அழகு மணி மாளிகையின் அலங்காரத் திருவுருவே ! அழித்தெழுதாச் சித்திரமே !

(திரையில் குரல்)

குரல்: அழித்தெழுதாச் சித்திரமே! ஆடிவரும் பொன் விளக்கே ! கட்டாணி முத்தழகி! கண்கவரும் ரத்தினமே !

பரந்தாமன்: ஆ! யார்?

(பாமா வெளிப்படுகிறாள்)

பரந்தாமன் : ஆ ! பாமா!

பாமா: நானேதான்! அன்புக்கரசீ என வர்ணித்தாயே அந்த அரசியின் சரசி வேஷத்தைப் பார் ! அழகு மணி மாளிகையின் அலங்காரத் திருவுருவம்! சமுதாயக் குட்டிச்சுவற்றின் நிழலில் சருக்கி விழுந்து உருக் குலைந்து கிடப்பதைப் பார் ! அழித்தெழுதாச் சித்திரம் ! நாள்தோறும் இங்கு நடமாடும் புதுப் புது ஓவியக் கலா ரசிகர்களால் திருத்தி எழுதப்பட்டு தெருவில் நாசமாகிக் கிடப்பதைப் பார்! ஆடிவரும் பொன் விளக்கு ! அனுதினமும் தேடி வரும் ஆணழகர் கையில் அகப்பட்டு அணைந்து கிடப்பதைப் பார்! கட்டாணி முத்தழகி ! மொட்டாகவே கருகிவிட்டதைப் பார்! கண்கவரும் ரத்தினத்தில், மண்படிந்து கிடப்பதைப் பார்! கயவனே, காதகனே! கவிதை பேசிய காதற் புலவனே ! பார் ... ! பார் ...

பரந்தாமன் : பாமா பொறு ! போனதை மறந்துவிடு!

பாமா: மறப்பதா! என் மானமே போய்விட்டதடா மகா பாபி!

பரந்தாமன்: மானத்தை இழக்க நீ தானே காரணம்!....

பாமா: ஆமாம். உன் காதல் மாளிகையிலே, கனகமணி கட்டிலிலே, உல்லாச உப்பரிக்கையிலே,ஒய்யார கீதம் பாடியபடி அல்லும் பகலும் இணைபிரியாத அன்புத் தெய்வமாக வைத்திருந்தாய். நான்தான் அவமானச் சாக்கடையில் தொப்பென்று குதித்து கல்லாக மாறிவிட்டேன்! அப்படித்தானே !

பரந்தாமன்: விதியின் விளையாட்டு எல்லாம்!

பாமா : விதி!

பரந்தாமன்: ஆம் விதி! ஒரு விபரீதமான பாரசூட் ! அதைப் பிடித்துக்கொண்டால் அது எங்கு இறக்கி விடுகிறதோ அங்குதான் இறங்க வேண்டும்!

பாமா : அறியாமை என்ற ஆகாய விமானத்தில் ஏறியவர்களுக்குத்தான் அந்தப் பாராசூட் தேவைப்படும்! அப்படி ஏறிய முட்டாள் நான்தான் ! முட்டாள் நான் தான் !

பரந்தாமன்: நீ பழைய சாஸ்திரங்களை படித்ததில்லை.

பாமா: எங்கே அந்த சாஸ்திரங்களை கொண்டுவா ! ஆணுக்கோர் நீதி பெண்ணுக்கோர் நீதி சொல்லும் அந்த அக்ரம சாஸ்திரத்தைக்கொளுத்தி அந்த நெருப்பிலேயே உன்னையும் போட்டு வேக வைக்கிறேன்,துரோகி !

பரந்தாமன் : பாமா! வேசியாக மாறியதுமல்லாமல் அதை மறைக்க வேகமாகவும் பேசுகிறாய்!

பாமா : ஆம், வேசிதான்.ஆனால், மறந்து விட மாட்டேன் உன்னுடைய மாஜி காதலி என்பதை ! ஏனடா வேசியாக மாறினேன்? வேடிக்கை விநோதங்களில் காலத்தைக் கழிக்கவா? இல்லை. இல்லையடா இல்லை. வெந்துகொண்டிருக்கும் என் உள்ளத்திலிருந்து கிளம்பும் தீ ஜ்வாலைக்கு உன்னை இரையாக்க! வேதனைக் கனலிலே கூர் தீட்டப்பட்ட வேல் முனைக்கு உன்னை விருந்தாக்க! பாமா பரத்தைக் கோலம் பூண்டது பணம் சம்பாதிக்க அல்ல. உயிர் வாழ. உயிர் வாழ்வது சாகப் பயந்து அல்ல. சண்டாள பரந்தாமனை பழிவாங்க !பழிக்குப் பழி வாங்க! இதோ பாமாவின் காரியம் முடிந்துவிட்டது. எண்ணம் ஈடேறி விட்டது ! ஈடேறி விட்டது !

(என்று கத்தியெடுத்துக் குத்தப்போக, பரந்தாமன் தப்பி விடுதல்)