காட்சி 12] [பூமாலை வீடு -பகல்
காட்சி 12·93 காட்சிகளில்
கீழே அச்சிட்ட நூலின் மூல தமிழ் வாசிப்பு — மாற்றமின்றி.
(பூமாலை மனவேதனையுடன் வீட்டுக்குள் நுழைகிறாள். பரந்தாமன் உட்கார்ந்திருக்கிறான்.)
பூமாலை : எங்கே வந்தாய்
(அவன் வைத்துள்ள 'வாழு' என்ற கையெழுத்துப் பிரதியில் 'வாழு' என்பதற்குக் கீழே ஆசிரியர் 'துறவி' என்று எழுதுகிறான்.)
பூமாலை: உன்னைத்தான் கேட்கிறேன், எங்கே வந்தாய்...
பரந்தாமன்: என் வீட்டுக்கு நான் வந்தேன்.
பூமாலை: உன் வீட்டில் நீயே இரு-நான் போய்விடுகிறேன்.
பரந்தாமன் : யாரும் போகவேண்டாம். நானே போகிறேன். செத்தே போகிறேன். அப்போதுதான் நீ நிம்மதியாயிருப்பாய்.
பூமாலை: நீயேன் சாகிறாய். இன்னும் எத்தனை பெண்களின் கண்ணீர் வெள்ளத்தில் நீச்சல் விளையாட்டு நடத்த வேண்டும் நீ.
பரந்தாமன்: போதும். நான் சாகவேண்டுமென்பதை நீ ஜாடையாகக் கூறிவிட்ட பிறகும் உயிரோடிருக்கவா போகிறேன் இல்லை,இல்லை.
பூமாலை: பயமுறுத்தாதே / உற்சாகச் சேறு, உல்லாசச் சகதி, இவைகளிலே உடலைப் புரட்டவேண்டும் என்பதையே வாழ்க்கை லட்சியமாகக் கொண்டவர்கள் சாவை நினைக்கக் கூட பயப்படுவார்கள் என்பது எனக்குத் தெரியும்.
பரந்தாமன் : இப்போது என்னதான் சொல்லுகிறாய்.
பூமாலை: நானா சொல்லவேண்டும். ஊரே சொல்கிறதே ! சூதுவாதறியாத கன்னி யொருத்தியின் வாழ்வைக் களவாடிய சூதாடியின் அக்காள் இவள் தானென்று சுட்டிக்காட்டிச் சொல்கிறதே.போதும் உன்னால் வந்த வேதனை. தம்பியை ஒழுங்காகப் பார்த்துக்கொள் என்று அப்பாவும் அம்மாவும் ஆயிரம்முறை சொல்லியிருப்பார்களே. மிக ஒழுங்காகப் பார்த்துக் கொண்டேன். மிருகத்தைக்கூடப் பழக்கி விடலாமப்பா... உன்னை திருத்தவே முடியாது.
பரந்தாமன் : உனக்கென்ன தெரியும் என் நிலைமை -அழுவாய். அதைப் பார்த்து ஊர்- அக்காள் நல்லவள் தம்பி கெட்டவன் என்று சொல்லும், உன் முகாரிக்கு முழு வெற்றி கிடைத்துவிடும்... கல்யாணம் நின்றுவிட்டதே, அதனால் விருந்து நடத்த வாங்கிய ஏராள சாமான்கள் வீணாகிவிட்டதே, பந்தல்காரனுக்குத் தந்த பணம் பாழாயிற்றே : செலவு செய்த செல்வத்தை இனி மீண்டும் சேர்க்க முடியுமா என்ற கவலை உனக்கு. எனக்கல்லவா தெரியும் பணம் வீணாகாமல் பாமா பரிணயம் முடிந்திருந்தால் பிறகு என் மனம் படும் பாடு. உனக்கு எப்படித் தெரியும். அப்பா அம்மாவா இருக்கிறார்கள் என்னைப்பற்றி கவலைபட
பூமாலை: தம்பி அப்படியெல்லாம் சொல்லாதே. ஏன் கல்யாணத்தன்று ஓடிவிட்டாய்.
பரந்தாமன்: பாமா பரிசுத்தமானவள் அல்ல. அவளை நம்பி மோசம் போனேன் .....
பூமாலை : இருக்காது- யாரோ தவறாக சொல்லியிருக்கிறார்கள். பாமா பத்தரைமாற்றுப் பசும்பொன்.
பரந்தாமன் : பொன்னல்ல- பொன் பூசிய பித்தளை.
பூமாலை: என்னால் நம்பமுடியாது. உன் தவறுக்கு காரணம் கற்பிக்கிறாய்.
பரந்தாமன்: (கண்டிப்பாக) நம்பவேண்டாம். எனக்குக் கல்யாணம் பிடிக்கவில்லை. அவ்வளவுதானே...
பூமாலை : இந்த ஞானோதயம் முன்பே வந்திருக்கவேண்டும்.
பரந்தாமன் : பெரிய பெரிய மனிதர்களுக்கே பிறகுதான் உதயமாகியிருக்கிறது. நான் என்ன சாதாரணம்...
('வாழு' புத்தகத்தை எடுத்துக்கொண்டு போகிறான்)
[பாடம் கற்கும் குழந்தைகள் ஓடி வருகின்றன பூமாலையிடம்]
ஒரு குழந்தை: அக்கா, அக்கா, அம்புஜம் சொல்றா,நாய் வாலை நிமிர்க்க முடியாதாம். நிஜந்தானா அக்கா!
பூமாலை: ஆமாம் சரி வாங்க படிக்கலாம்