களஞ்சியப் பகுதி 15

58 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

—★— [ராஜாவின் எலக்ட்ரிக் ஸ்டோரில்] ['டைப்பிஸ்ட் தேவை' என்று போர்டைப் பார்த்து ராணி உள்ளே போகிறாள்.] கரண்ட்: வாங்க, நான்தான் கரண்ட்! இந்தக் கம்பெனிலே அசிஸ்டெண்ட்! ஒங்களுக்கு என்னா வாண்ட்டு? ராணி வெளியிலே போர்டு பார்த்தேன். கரண்ட்: ஓகோ! ராணி: உங்க முதலாளியைப் பார்க்கலாம்னு வந்தேன்! கரண்ட்: என்ன விசேஷம்? ராணி: ஒங்க கம்பெனியிலே 'டைப்பிஸ்டு' தேவைன்னு... கரண்ட்: அதுவா? எங்க கம்பெனிக்கி, பொம்பளை டைப்பிஸ்ட் வேண்டியதில்லை! ஆம்பளைதான் வேணும்! ராணி: அப்படி ஒண்ணும் போர்டுல போடலியே! கரண்ட்: அடடா! நான் அப்பவே சொன்னேன்; கேட்டானா அந்த போர்டு எழுதுரவன்! பரவாயில்லே அதை மாத்தி எழுதிடுறோம். ராணி: இந்தாப்பா! ப்ளீஸ், ஒங்க முதலாளியை பாக்கும்படியா ஏற்பாடு பண்ணேன்! கரண்ட்: அவரை பார்க்க முடியாதும்மா! அவரு ஒரு மாருதி... ராணி: மாட்டே? கரண்ட்: மாட்டேன், இந்த வீண் வம்புல நான் மாட்டவே மாட்டேன்! (ராணி உள்ளே போகிறாள்.) கரண்ட்: அம்மா அம்மா! இந்தாங்க. இந்தாங்க! அடடா, அடடா! ராஜா: யாரு, லீலாவா? அடடே...வா லீலா, வா, வா! உட்காரு, உட்காரு... கரண்ட்: சார் சார், இந்தம்மா நான் சொல்ல சொல்ல உள்ளே வந்துட்டாங்க சார்! ராஜா: கெடாவுட், ராஸ்கல்! டேய், ஒன்னைத்தான்டா, யாரு என்னான்னு தெரியாம ஒளறிகிட்டு போடா; போயி காப்பி, சோடா, கிரஷ் எல்லாம் வாங்கிட்டு வாடா; மூஞ்சியைப் பாரு...நீ ஒக்காரு லீலா, என்ன லீலா சௌக்கியமெல்லாம் எப்படி? வீட்ல தகறாரு ஒன்றுமில்லையே? ஒங்க அப்பா, அம்மாவெல்லாம் உன் மேலே சந்தோஷப்பட்டாங்களா? ராணி: ஓர்! ராஜா: ஆமா, நீ எப்படி நம்ப கடையைக் கண்டு புடிச்சே? இனிமே எங்க உன்னைப் பார்க்கப் போறோம்னுல இருந்தேன், நான். அது சரிதான்...ம், பரவாயில்லை...என்ன, கல்யாணமெல்லாம் இப்போ எவ்வளவு தூரத்திலே இருக்கு? ராணி: அதான்...கல்யாணந்தான்...இப்ப பண்ணிக்கப் போறதில்லைன்னு சொல்லிட்டேனே! ராஜா: ஆமாம். ஆமாம். அதான் அன்னைக்கே பேப்பர்ல பாத்தேனே...ஆமா, கல்யாணம் பண்ணிக்காம...? ராணி: எனக்கு ஏதாவது வேலை பார்க்கலாம்னு ஆசை! ராஜா: அடே, இது என்னா இது! புதுசா இருக்கே! நீ வேலை பார்க்கிறதாவது...பேஷ் பேஷ்! பணக்கார வீட்டு புள்ளைங்க, வேலை பார்க்கணும்னு சொல்ற குரலை இப்பத்தான் என் ஆயுசிலே முதல் முறையா கேக்கிறேன்! ராணி: சோம்பேறித்தனமா வாழறது எனக்குப் பிடிக்கிறதே இல்லை. ஏதாவது கௌரவமான வேலை, ஏன் உங்க கம்பெனியில்கூட 'டைப்பிஸ்ட்' வேலை காலியாயிருக்கு போலிருக்கே...! ராஜா: ஆமாம்...அந்த வேலை...நீ, நீ, என்ன லீலா, விளையாடுறே! என் கம்பெனி ரொம்ப சின்னக் கம்பெனி; நீயோ பெரிய வீட்டுப் பெண்ணு; இந்த வேலை எல்லாம் ஒனக்கு சரிப்பட்டு வருமா? ராணி: பரவாயில்லை, அதனால என்ன, பழகின எடமா இருக்கிறது நல்லதுதானே? ராஜா: அது சரிதான்...அது சரிதான்! ராணி: அப்ப இன்னைக்கே வேலையை ஆரம்பிக்கிறேன். 'அப்பாய்ன்ட்மென்ட்' போடுங்க. ராஜா: அப்பாய்ன்ட்மென்ட்... நமக்குள்ள எதுக்கு இதெல்லாம்? நீ வேலையை ஆரம்பீ...அதெல்லாம் நானு... [கதவு தட்டப்படுகிறது] எஸ் கமீன்... [கரண்ட் டீ கொண்டு வருகிறான்] சாப்புடு...டேய் கரண்ட்! என்னடா பாத்துக்கிட்டே நிக்கிறே? இன்னேல இருந்து நம்ப கம்பெனிக்கு இவுங்கதான் 'டைப்பிஸ்ட்டு'...தெரியுமா? கரண்டு: ஓ! [ராணி ராஜாவின் வேஷப் போட்டோவைப் பார்ப்பது கண்டு] நீங்க என்ன பாக்குறீங்க? சேரன் செங்குட்டுவன் நாடகத்திலே அய்யாவோட போஸ் இது. ராணி: ஆ!...ஓ! கரண்ட்: ஏங்க...அப்ப வெளியிலே மாட்டியிருக்கிற போர்டு...? ராஜா: கழட்டு போ! ராணி: நீங்க நடிகரா? ராஜா: இல்லை, இல்லை. எங்கூட ஒரு அமெச்சூர்ஸ் 'குரூப்' இருக்கு. அவுங்க எப்பவாவது நாடகம் போடுவாங்க. என்னையும் ஆக்ட் பண்ண சொல்லுவாங்க; பண்ணுவேன். அன்னைக்கி கூட ஓங்கிட்டே சொன்னேனே, ஒனக்கு ஞாபகம் இருக்காது... ஆ!... நடிப்பே தொழிலல்ல... ராணி: கலையிலே ஒரு ஆசை போலிருக்கு. ராஜா: ஆமாம்; ஆமாம்! இப்ப உனக்கு வேலைசெய்யனுங்கிற ஆசையில்லே, அது மாதிரி எனக்கு ஒரு ஆசை.