காட்சி—6
காட்சி 6·46 காட்சிகளில்
[மதுரையில் கல்யாணியும் கணவன் தங்கப்பனும்]
தங் : கல்யாணி!
கல் : இதோ வந்துட்டேன்.
தங் : ஹூம்...புறப்படு சீக்கிரம்
கல் : ஏன் பறக்கிறீங்க (ஆடை அணிந்து வரும் போது தந்தையைப் பார்த்து) அப்பா போய்விட்டு வர்றோம்.......
மாணிக் : சரியம்மா ஜாக்கிரதையா போயிட்டுவாங்க,
[இந்நேரம் எதிர்வீட்டு பார்வதி வருகிறாள்]
பார் : கல்யாணி...
கல் : வாங்க அக்கா
பார் : நல்ல சமயத்திலேதான் வந்திருக்கேன்.. எங்கே பிரயாணம்?
மாணி : ஒண்ணுமில்ல மாப்பிள்ளை எழுதின கதை படம் பிடிக்கப் போறாங்களாம்.
தங் : ஆமா! கல்யாணி ரொம்ப நாளா படம் பிடிக்கிறதை பார்க்கணும் பார்க்கணும்னு தொந்தரவு பண்ணுது.
பார் : போகவேண்டியது தான். முழுகாதிருக்கிற பெண்ணு இப்படி நேரம் காலம் இல்லாமல் வெளியே போனால் நல்லாவா இருக்கு.
மாணி : தப்புதான் குழந்தை ஆசைபடுதில்லே போயிட்டுத்தான் வரட்டுமே.
கல் : இன்னைக்கு ஒரு நாளைக்குத்தானக்கா!
பார் : ம்...போம்மா! போ! மாப்புள்ளே நீ சொன்ன படியெல்லாம் கேட்டிரு! பையன் வந்துல்ல அடக்கணும்.
கல் : போங்க அக்கா
மாணி : அதுக்குள்ளே பையனே தீர்மானம் பண்ணிட்டியா?
பார் : நான் தீர்மானித்தாலும் தீர்மானிக்காவிட்டாலும் அவங்க ரெண்டு பேருமே தீர்மானம் பண்ணிட்டாங்களாம் பையனுக்கு பன்னீர் செல்வம்னு பெயர் வைக்கிறதா...
தங் : அதுமட்டுமல்ல பெண் பிறந்தால் நாகம்மான்னு பெயர் வைக்கிறதா தீர்மானிச்சிருக்கோம்.
(புறப்படுகின்றனர்)
மணி : என் பொண்ணு புத்திசாலிதான். இந்த சந்தோஷத்தைப் பார்க்க மகன்களும் இருந்தால்...