காட்சி—2
காட்சி 2·46 காட்சிகளில்
(இரங்கூனில்...குணசேகரன் தூங்கிக் கொண்டிருக்கும் போது ஞானசேகரன் வருதல்)
ஞான : தம்பி! தம்பி குணசேகரா டேய் எழுந்திரு இன்னுமா தூங்குறே? எழுந்திருப்பா தம்பி டேய் குணசேகரா? (ரேடியோ வைத்தல்) டேய் கும்பகர்ண எழுந்திரு!
குண : ம்... அய்யய்யோ...என் கண்ணே! தூங்குற போது வந்து விளையாண்டுகிட்டு...
(இந்நேரம் சந்திரசேகர் வருதல்)
சந் : என்ன ஆரம்பிச்சிட்டீங்களா? பொழுது விடிஞ்சுட்டுதில்ல.
ஞான : அண்ணே குணசேகரன் இப்பத்தான் எழுந்திரிச்சான்.
குண : இல்லையண்ணே நான் காலையிலே அஞ்சரை மணிக்கெல்லாம் எழுந்திரிச்சிட்டேன்.
ஞான : இல்லேண்ணு பொய் சொல்றேன்.
சந் : ஞானசேகரா! ஏம்பா பொய் சொல்றே! தம்பிக்குத் தான் சூரிய உதயத்தைப் பார்க்கவே பிடிக்காதே ம்...ஊரிலே இருந்து...
குண : தங்கச்சி போட்டோ வந்திருக்கா?
சந் : தங்கச்சிக்கு கல்யாணம் நிச்சயம் செய்து அப்பா கடிதம் எழுதியிருக்காரு!
சந் : அட பார்ரா! நாம் எல்லோரும் எப்போ ஊருக்குப் போகிறது!
சந் : டிக்கட் புக் பண்ணச் சொல்லி போன் பண்ணி இருக்கிறேன். பதில் இப்போ வந்திடும். (அண்ணியிடம் போதல்)
குண : அண்ணி! குட் நியூஸ்! கல்யாணிக்குக் கல்யாணம் உங்களுக்குத் தெரியுமா?
ஞான : அண்ணிக்குத்தானப்பா முதலிலே தெரிஞ்சிருக்கும். இல்லையண்ணே...!
(சந்திரசேகரன் அவன் மனைவி சரஸ்வதியினுடைய தந்தையின் போட்டோவைப் பார்த்து கண்ணீர் விடுகிறான்)
சரஸ் : தங்கச்சிக்குக் கல்யாணம்! இப்படி திடீர்னு வருத்தப்படுறீங்க
சந் : இல்ல...ஒங்க அப்பா படத்தைப் பார்த்தவுடன் என்னமோ மாதிரி இருந்திச்சி மனமே மாறிடுச்சி நம்ம கல்யாணத்துக்கு அவரு இருந்து எவ்வளவோ நல்லா நடத்திருப்பார் இப்ப இந்தக் கல்யாணத்துக்கு இல்லேன்னுதான்...
சரஸ் : அதுக்குத்தான் ஒங்க அப்பா இருக்காரே
சந் : என்ன இருந்தாலும் சீரழிந்த குடும்பத்தைச் செல்வமாக்கினவரு அவருதானே சின்ன வயசிலே இருந்து அவருடைய ஆதரவிலேதானே வளர்ந்தோம். மடியிலே விளையாண்டோம்.
(காப்பி குடிக்க உட்காருகின்றனர்)
ஞான : குணவைப் பார்த்து டேய்! கீழே வைடா பல் விளக்கிறதுக்குள்ள என்னடா காப்பி.
சந் : ஞானசேகரா! நீ சும்மா இருப்பா நீ சாப்பிடு தம்பி.
குண : கல்யாணிக்கு என்ன பரிசு கொடுக்கிறது?
சந் : கல்யாணிக்காக நம்ம இதயங்களே துடித்துக் கொண்டிருக்கின்றன. இதைவிட நல்ல பரிசு நம்மால் வேறென்ன அளிக்க முடியும். (போன் மணி அடிக்கிறது) ஹலோ—சந்திரசேகரன் ஸ்பீக்கிங்
பேசு : டிக்கட் கேட்டீங்களாமே?
சந் : ஆமாம்...
பேசு : எத்தினி?
சந் : போர்...நாலு
பேசு : நாலா முடியாதே சார்!
சந் : முடியாதா? எப்படியாவது முயற்சி செய்யுங்க சார் ப்ளீஸ்—
சரஸ் : பெரிய பாரிஸ்டர் இதுக்கு எத்தினி ப்ளீஸ் போட வேண்டியிருக்கு.
பேசு : உங்களுக்கு தெரியாதா? வார் டைம்...
சந் : வார் டைம் சரி சார்! எங்க குடும்பத்துக்கு முக்கியமான மேரேஜ்! அவசியம் எல்லோரும் போகத்தான் வேண்டும்.
பேசு : பேமிலிக்கு ஒருத்தரைதான் அலவ் பண்ணுறது? மொத்தமே முன்னூறு சீட்டுதான் ஒரு டிக்கட் தான் இருக்கு...
சந் : சரி புக் பண்ணுங்க
ஞான : என்ன அண்ணே?
சந் : நாளைக்கு சென்னைக்கு புறப்பட்ற கப்பல்ல மொத்தமே முன்னூறு டிக்கட்டானும்! அதுவும் குடும்பத்துக்கு ஒருத்தர்தானும். தங்கையின் வாழ்விலே பொன் விழா? அதை நாம் எல்லோரும் சேர்ந்து பார்க்க கொடுத்து வைக்கலே.
சரஸ் : அப்படின்னு யார் போறது?
குண : (ஆவலுடன்) நான் போகிறேன்
சந் : ஞானசேகரா தங்கைக்கு வேண்டிய புடவை நகையெல்லாம் எடுத்து பெட்டிக்குள்ளே வச்சிட்டு குணசேகரன் வழி அனுப்பி விட்டு வா. (ஞான சேகரன் வருந்துகிறான்) ஞானசேகரா ஏம்பா கவலைப்படுற? நாமெல்லாம் போகலாம்.
ஞான : அண்ணே, அதுக்குள்ளே யுத்த நிலமை ரொம்பவும் மோசமாகிவிட்டா?
சந் : எப்படியும் போய்ச் சேரலாம்
சரஸ் : நான் கல்யாணிக்காக அரை டஜன் சேலையும் ஜாக்கெட்டும் தாரேன் பெட்டியிலே இடம் இருக்குமா?
ஞான : தங்கைக்கின்னு தலையிலே தூக்கிட்டுப் போவானே, சும்மா கொடுத்தனுப்புங்க அண்ணி
(குணசேகரன் புறப்படுகிறான்)