காட்சி—1
காட்சி 1·46 காட்சிகளில்
(மதுரையில் கல்யாணிக்குத் திருமணம் நடக்கப் போகும் சமயம் அவளது அண்ணன்மார்களான சந்திரசேகரன், ஞானசேகரன், குணசேகரன் ஆகிய மூன்று பேரும் ரங்கூனில் இருக்கின்றனர். அப்போது மதுரையில்...ஒரு கூட்டத்தில் நாட்டியம் நடைபெறுகிறது.)
வாழ்க வாழ்கவே வாழ்க வாழ்கவே வளமார் எமது திராவிட நாடு (வாழ்கவே சூழும் தென் கடல் ஆடும் குமரி தொடரும் வடபால் அடல் சேர் வங்கம் ஆழும் கடல்கள் கிழக்கு மேற்காம் அறிவும் திறனும் செறிந்த நாடு (வாழ்க பண்டைத் தமிழும் தமிழில் மலர்ந்த பண்ணிகர் தெலுங்கு துளு மலையாளம் கன்னட நிகர் கன்னடமெனும் மொழிகள் கமழக் கலைகள் சிறந்த நாடு (வாழ்க அகிலும் தேக்கும் அழியாக் குன்றம் அழகாய் முத்துக்குவியும் கடல்கள் முகிலும் செந்நெல்லும் முழங்கு நல் செய் முல்லைக் காடு மணக்கும் நாடு (வாழ்க ஆற்றில், புனலின் ஊற்றில், கனியின் சாற்றில் தென்றல் காற்றில் நல்ல ஆற்றல் மறவர் செயலில் பெண்கள் அழகில் கற்பில் உயர்ந்த நாடு (வாழ்க
(ஆடல், பாடல்கள் முடிந்தவுடன் மாப்பிள்ளை பேசுகிறார்)
தங்கப்பன்: (மாப்பிள்ளை பெரியோர்களே இதுவரையில் புதுமையின் குரல் புதுமையாட்டத்துடன் கலந்து ரசித்தீர்கள். இத்தகைய எழில்மிக்க நாட்டின் குழந்தைகள் இந்த மண் மாதாவின் மடியிலே தவழாமல் வேறு நாடு சென்று வருகின்றனர். இதை நினைக்கும் போது நமது அறிவர் சொன்னது ஞாபகத்திற்கு வருகிறது. கடல் நீர் ஏன் உப்பாக இருக்கிறது காரணம் கற்பனையாக சொல்லப்போனால்...சொந்த நாட்டிலே பிழைக்க வழி இல்லாமல் அயல்நாடு சென்று தமிழர்கள் அழுது வடித்த கண்ணீர்தான் காரணம் என்றார். அவ்வளவு
ஏன்? இதோ நான் திருமணம் செய்து கொள்ளப் போகும் திருமதி கல்யாணி தன் சகோதரர்களின் முகத்தையே பார்த்ததில்லையாம்! அவ்வளவு இளமையிலேயே அவர்கள் இரங்கூன் சென்றுவிட்டனர். அவர்கள் மட்டுமல்ல! எத்தனையோ லட்சக் கணக்கான இளைஞர்கள். எத்தனையோ குடும்பங்கள்! மலேயாவின் ரப்பர் தோட்டத்திலே! ஆப்பிரிக்காவிலே, இலங்கை தீவிலே அவர்கள் எல்லாம் நம் திரு நாட்டுக்குத் திரும்ப வேண்டும். அதைத்தான் இந்த அழகிய பாடலும் நமக்கு நினைவூட்டுகிறது.)