காட்சி 39

காட்சி 39

45 பகுதிகளில்

மக்கள் :- அநியாயம்! குமரன் :- அன்பர்களே! அமைதியாக இருங்கள்! கண்ணியம், கட்டுப்பாடு, ஒழுங்கு இவைகளைக் காப்பாற்றுங்கள். பலாத்காரம்—ஒரு பயங்கரமான நோய்! நமக்கு நாமே வெட்டிக்கொள்ளும் படுகுழி! நானே நேரில் போகிறேன். (காட்சி மாறுகிறது) (இடம் :- மலையப்பனின் மாளிகை வாசல்) மலையப்பன் :- இவன்தான் அந்தச் சண்டாளன், சதிகாரன், நாஸ்திகன், கொடியவன், கொலைகாரன்...புரட்சிக்காரன்...... குமரன் :- ஏன் நிறுத்திவிட்டீர்? கள்ளன், கயடன், கடவுளை நிந்திப்பவன் கண்ணீர்த்துளி, கயவன் என்றெல்லாம் உண்டே உமது அகராதியில்! மலையப்பன் :- உனது ஜாலவித்தையால் எனது ஜமீனை கெடுத்தாய், உனது மாயவலையில் சிக்கியவர்களைக் கொண்டு எனது மாளிகை வாசல் இடித்தெறிந்திருக்கிறாய்! ஏன்...இவர்கள் வராவிட்டால் என்னையே கொன்றிருப்பாய்! குமரன் :- இதை யெல்லாம் போலீசார் அவர்கள் நம்பவேண்டுமென்கிறா? இதோ வீடு இழந்தோர், வீதியிலே நிற்போர்—விழிகள் குளமாகிக் கொண்டோர் இவர்களது கணக்குகளே எண்ணிப் பார்க்கட்டும்! பிறகு சொல்லட்டும்...பலாத்காரம், வெறிச் செயல் இவைகளுக்குப் பிறந்த ஏக புத்திரர்கள் யார் என்று? மலையப்பன் :- பார்த்தீர்களா...அவனது பாஷையிலேயே பலாத்கார வாடை வீசுவதை. சப் இன்ஸ். :- குமரன் கிராமத்தின் அமைதியைக் கருதி உம்மை கைது செய்கிறோம்! குமரன் :- ஆ! மலையப்பன் :- என்னடா, ஆச்சரியக்குறி போடுகிறாய்! குமரன் :- ஆச்சரியக்குறி தான்! கொஞ்சம் வளர்ந்தால் கேள்விக் குறியாக மாறிவிடும்! கேள்விக் குறிக்கும் அறிவாளுக்கும் அவ்வளவு வித்தியாசம் இல்லை! என்பது ஞாபகம் இருக்கட்டும். அரிவாள் என்றால் ஆள் வெட்டும் அரிவாள் அல்ல உமது அதிகாரத்தை, ஆணவத்தை, அறியாமை விருட்சத்தை வெட்டும் அரிவாள்! இதைக் கேள்! அறிஞரின் பேனாவே ஒரு அரிவாள்! சப் இன்ஸ். :- குமரன்! நீர் குற்றமற்றவராக இருக்கலாம். ஆனால், ஜமீன்தார் தந்துள்ள சாட்சியங்களிலிருந்து உம்மை கைது செய்ய வேண்டியிருக்கிறது. உண்மைகள் கோர்ட்டில் வந்து நிரூபித்துக் கொள்ளலாம். அது வரையிலும் உம்மை பாதுகாப்பில் வைக்க நேரிடுகிறது. (குமரன் கைது செய்யப்படுகிறான்) (ஜனங்கள் எதிர்க்கின்றனர்) குமரன் :- தோழர்களே! போலீசார் அவர்கள் கடமையைச் செய்கிறார்கள்! அவர்களுக்கு ஆத்திரத்தை விளைவிக்காதீர்கள்! உங்கள் ஆத்திரம் பெருக்கும் நான் ஒருவன் சாகிறேன்! ஆனால்...எனக்காக நீங்கள் சாக வேண்டாம். போகிறேன்! திரும்பினால் சந்திப்போம்! ## பின்னணிப் பாடல் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் பகையும் பழியும் பாம்பெனத் தீண்டும்—உலகில் எதையும் தாங்கும் இதயம் வேண்டும் சிறையா வதையா இன்னும்........ (எதையும்) சாக்ரடீஸ் வாழ்வினைப் பார் சாகாத காந்தி முடிவையுமே பார் வேதனையாலே வீழாதே சோதனையாலே வாடாதே—நீ வாடாதே சோதனையாலே வாடாதே—வரும்...... (எதையும்) தேனினும் வாழ்வே தேளாய் மாறும் போர்முனைச் சாவே பொதுவாழ்வில் இன்பம் ஆணவம் சீறலாம், ராணுவம் பாயலாம் சீற்றத்தைக் கண்டு சிதறாதே—உளம் சிதறாதே தூற்றலைக் கேட்டுத் துவளாதே—பகை......... (எதையும்) வணக்கம். (பகுத்தறிவாளன் சிறையிலே வாடினான், பழமை விரும்பிகள் மக்களை புது வாழ்வுக்கு திருப்பினர். எந்தக் குமரனால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தார்களோ...அதே குமரனை வெறுக்கின்றனர் அப்பாவி மக்கள்)