காட்சி 34
காட்சி 34
45 பகுதிகளில்
(இரவு நேரம்) கிராம வாசிகள் ஹா ஹா! வருவாய் வருவாய்...... வைபோக சுந்தரியே...... சைபோக செளந்தரியே! சைரந்திரியே...கண்ணே...வருவாய்... கீசகன் ஆசைகொண்ட கிச்சிலிப் பழமடி நீ... காச நோய்போல வந்து காதலுக்கு மருந்தடி நீ... ஆண்மகா மம்முதா ஆசைகொண்ட கீசகா! கீசகா! கீசகா! கீசகா...........டேய்... இறுக்குத்தனமாய் வந்து மீசையை முறுக்கி விட்ட குரங்கே! பெரிய குரங்கே! எட்டுத் திக்கும் நடுநடுங்க முரசு கொட்டும் பீமசேனனிடம் வாலாட்டமா...? வாலாட்டமா...? (தெருக்கூத்து நடந்துகொண்டிருக்கும்போது குமரன் வருகிறான். ஜனங்கள் குமரனின் கொடிய முகத்தைக் கண்டு பயந்து ஓடுகின்றனர். அதிலே மாத்திரையின் மனைவியும் ஒருத்தி! குமரன் மாத்திரையை வைத்தியம் பார்க்க அழைக்கிறான். மாத்திரை மறுக்கிறான், குமரன் தூக்கிச் செல்லுகிறான் மாத்திரையை. இறுதியாக மாத்திரை குமரன் மனிதன் என்று உணர்ந்து மக்களிடம் ஓடுகிறான்) (பூஜை நடந்துகொண்டிருக்கிறது கோவிலில்) மாத்திரை :- ஏ......முட்டாள்களே! யாரு பிசாசு? ஒருவன் :- இவன் தாண்டா பிசாசு! அண்ணுமலை :- விடாதிங்க இவனை! மாத்திரை :- இது ஜமீனுக்கு அடிமை பிசாசு! இது மக்களை (பூசாரி) ஏமாற்றுகிற பிசாசு! இந்த இரண்டுக்கும் பெரியது ஜமீன்தார் பிசாசு! அண்ணுமலை :- இவன் பேச்சை நம்பாதிங்க! மாத்திரை :- இவன் பேச்சை நம்புங்க! ஊரு உருப்பட்டுப் போகும்! குமரன் பிசாசு இல்லே .. ஜீவானந்தர் :- மாத்திரை! எப்பா இந்த வம்பு? நீ தான் நிரூபிச்சிக் காட்டேன். மாத்திரை :- இவரு வேற...ரெண்டும் கெட்டான். இப்ப நிரூபிச்சிக் காட்டுறேன் பாருங்க. (போகிறான்) அண்ணுமலை :- ஓடிட்டான்டோ... மாத்திரை :- அய்யோ... (குமரன் வருகிறான் பலர் பயப்படுகின்றனர்) குமரன் :- ஏன் பயப்படுகிறீர்கள்? நான் பேய் இல்லை! பேய் என்று ஒன்று இல்லவே இல்லை! பேய்க்கு சொல்லப்படும் இலட்சணங்கள் மனித சமுதாயத்தில் தான் நடமாடுகின்றன! வீரர்கள் உலாவுகின்ற பூமியிலே வாழ்ந்த நாம்... விவேகிகளின் மண்ணிலே வாழ்ந்த நாம்...வெறும் கற்பனைக் கதைக்கு—விஷமக்காரர்கள் கட்டி விடும் கட்டுக் கதைகளுக்கு அடிமையாவது? அறிவை இழப்பது? ஆண்மையை பலியிடுவது? எச்சில் பணத்துக்காக இனத்தை காட்டிக் கொடுத்தவன் ஒரு பேய்! சொந்த வாழ்க்கையை நந்தவனமாக்கிக் கொண்ட நயவஞ்சகன் ஒரு பேய்! சூது செய்து சுரண்டிப் பிழைப்பவன் ஒரு பேய்! நண்பர்களே...சிந்தித்துப் பாருங்கள்.... நானு பேய்? உங்களில் வீரர்கள் ஒருவருமே இல்லையா? (ஒரு சிறுபையன் குமரனிடம் போகிறான்) குழந்தைகளைவிட கோழைகள் நாம்! இளமையிலே ஓடக்கூடிய விசுவாச இரத்தம்! வீர இரத்தம் பலியிடப்படுகிறது! ஏதால்? மூட நம்பிக்கை என்னும் பேயால். (கூட்டத்தில் குமரன் வாழ்க என்ற குரல் கிளம்புகிறது)