காட்சி 30
காட்சி 30,
45 பகுதிகளில்
(இடம் :—வைத்தியர் வீடு) சஞ்சீவி :- எப்படிய்யா வந்துச்சி? வந்தவர் :- திடீர்னு அவசரப்பட்டு கட்டை அவிழ்த்து விட்டான். சஞ்சீவி :- இந்த கருப்பை போடு! போ...போ...காயம் ஆறினதும் விகாரம் விகாரம் தான். (வந்தவர் போன பிறகு சஞ்சீவி யோசிக்கிறான்) “எப்படி இரணமாச்சி...?” “அவசரப்பட்டு கட்டை அவிழ்த்திட்டான்” (வைத்தியன் குமரனுக்கும் போட்டப்பட்டிருக்கும் கட்டுகள் அவிழ்க்க முடிவு செய்கிறான்). சஞ்சீவி :- குமரா எழுந்திரு... குமரன் :- ஏன்...வைத்தியரே... சஞ்சீவி :- எத்தனை நாளைக்குத்தான் இப்படி கஷ்டப் படுவாய்? கட்டுக்கள் அவிழ்த்து விடப் போகிறேன். (அவிழ்த்துவிடுகிறான் அவிழ்க்கும் போதே காயம் ஆறாமல் இருப்பதால் வேதனை தாங்காது கத்துகிறான்) குமரன் :- (உவப்புடன்) உங்கள் உதவியை மறக்க மாட்டேன் வைத்தியரே...! (குமரன் கண்ணாடியில் தனது வெந்து போன முகத்தை பார்க்கிறான். வெறி பிடித்தவன் போல் கத்துகிறான். குமரனது முகம் புலியின் முகத்தை விட பயங்கரமாக இருக்கிறது) குமரன் :- அய்யோ...அய்யோ... சஞ்சீவி :- குமரன்! பதறாதே... குமரன் :- சண்டாளா...சதி செய்துவிட்டாய் என்னை பயங்கர மனிதனாக்கிவிட்டாய்...விகாரம்...பரம விகாரம்...என் முகத்தைப் பார்! பாவி என்னை பார்க்கமுடியவில்லையே...எண்டா என்னை சித்ரவதை செய்தாய்? சொல்லுடா சூதுக்காரா...நீ இதற்கு முன்பு எனது முகத்தை பார்த்திருப்பாயே...இப்போது பார் கேடுகெட்டவனே...எண்டா உனக்கு இந்த கெட்ட எண்ணம்? நீ அந்த நெருப்பைவிட கொடியவன்! எங்கேடா எனது கண்? எங்கே எனது கண்? பால் வடியும் முகம்...பால் வடியும் முகத்திலே இரத்தம் வடிகிறது...குஷ்டரோகியை விட கொடிய முகம். கசங்கிய மலரைக்கூட காண சகிக்கமாட்டார் களே...கருகிப்போய்...சதை சதையாக பிய்ந்து தொங்கும் முகத்தை யாரடா பார்ப்பார்கள்? இதயம் இல்லாதவனே...இரக்கமற்ற கொலைகாரா...எனது குரல்வளையை நெறித்து கொன்றிருக்கலாமேடா...அம்மா......அம்மா...உங்கள் குமரனைப் பாருங்கள் நீங்கள் முத்தமிட்ட கன்னத்தைப் பாருங்கள்...அம்மா (பிரேமா வருகிறாள்) பிரேமா :- ஆ...குமரன்...என்ன நடந்தது? எங்கே முகத்தை பார்க்கலாம். (குமரன் முகத்தை காட்டுகிறான். பிரேமா அதிர்ச்சி அடைகிறாள்) பிரேமா...உன் அப்பன் என்னை எவ்வளவு அழகாக்கி விட்டான் பார்! இப்போது காதலிக்கிறாயா என்னை? காதல் காதல் என்று கதை அளந்தாயே!...என் காலில் விழுந்து கதறினாயே! இப்போது காதலிக்கிறாயா என்னை? முத்தமிடுகிறாயா என் முகத்திலே? அணைத்து மகிழ்கிறாயா இந்த அலங்கோலத்தை? காதலி! காதலி! மணாளன் கேட்கிறான்—மாப்பிள்ளை பிடித்துவிட்டதா உனக்கு? பிரேமா...நீ இப்போது என்னை விரும்பமாட்டாய்...நீ வெறும் அழகை காதலித்தவள்! என் உள்ளத்தை காதலிப்பவள் ஒருத்தி இருக்கிறாள்! அவள் தான் என்...மீனு...மீனு...மீனு! (மீனு...மீனு...என அலறிக்கொண்டு குமரன் வைத்தியன் வீட்டை விட்டு வெளியேறுகிறான்.)