காட்சி 31

காட்சி-31

45 பகுதிகளில்

(மீனு பாடிக்கொண்டிருக்கிறாள்) பேசும் யாழே பெண் மானே வீசும் தென்றல் நீ தானே கேளேனோ இனிமேல் இதுபோல் கீதம்.... (பேசும்) தளா தீச்சுழலில் தனியாய் விழித்தீரோ மீளாசோகம் மீட்டிடும் யாழானேன் மாளா காதலினால் வாழ்ந்தோமே காதல்... (பேசும்) பாழும் பேயாக பாரினில் அல்லவோ தீரா துன்பம் தீட்டிய ஏடானேன் மாறு பாசமதனை மறந்தீரோ நேசம்.... (பேசும்) குமரன் :- மீனு...மீனு .. மீனு :- யாரது...? குமரன்... (மீனு குமரனின் கொடூர முகத்தைக் கண்டு மயக்கமடைகிறாள்—மல்லயப்பன் வந்துவிடுகிறான். குமரன் திரைமறைவில் நிற்கிறான்) சஞ் :- (மீனுவின் கையை பிடித்து பார்த்துவிட்டு) சரிதான்... மல்லயப்பன் :- என்ன சரிதான்...? சஞ்சீவி :- ஒண்ணு மில்லே...இந்த மாளிகையிலே மழலை மொழி கேட்டு ரொம்ப நாளாச்சிலே... மல்லயப்பன் :- அப்படின்னு? சஞ்சீவி :- சிறுவிழிகாட்டி-குறுநகைபுரிந்து-தனிமை போட்டு—தமிழ்மொழி பேசி தவழ்ந்து விளையாட உங்களுக்கு ஒரு மருமகனே...மருமகளோ...பிறக்கப்போகுது... மீனு...கொப்பம்... மல் :- அடி பாவி... ஞானம் :- அட கடவுளே... சஞ் :- எல்லாம் அவன் செயல். மல் :- சண்டாளி! அவமானச்சின்னமே...ஊரார் நகைக்க வாழ்ந்த எனக்கு ஊழல் தேடிவிட்டாயே. உன்னை அங்கம் அங்கமாக வெட்டிப்போட்டாலும் ஆறாது என் ஆத்திரம். மீனு :- ஏன்...துடிக்கிறீர்? இப்போது என்ன நடந்து விட்டது? மல் :- இனியும் வேறு என்ன நடக்கவேண்டும்? எஜமான் நமஸ்காரம் என்று என்னை எப்படிப்பட்டவர்களெல்லாம் வணங்கி வாழ...இழிவை உண்டாக்கிவிட்டாயே...விபசாரி! மீனு :- நான் விபசாரியல்ல! முறைப்படி காதலித்தவன் மூலமானதொரு கனவை ஏற்றேன். அவன் தந்த வைர சிலையை என் வயிற்றிலே வளர்க்கிறேன். மல் :- காதலன்...கணவன்...மீனு... மீனு :- சீறிப்பாயும் ஜமீன்தாரே...நீர் சிரித்து மகிழும் சிம்மாசனம் யாருடையது என்று எனக்குத் தெரியும். மல் :- எனக்கும் தெரியுமடி. மீனு :- கயவன் காட்டிய கண்கட்டி வித்தையில் ஜமீன்தாரரானீர்! மல் :- உன் ஆசை நாயகனின் எண்ணமெல்லாம் தகர்ந்துவிட்டது—தணலாகப் போய்விட்டது. மீனு :- தணலாகவில்லை—வெறும் கனவு! அந்த உயில் இன்னும் சாம்பலாகி விடவில்லை! மலைய :- சாம்பலாகவில்லையா? எங்கே இருக்கிறது? கொடு... சஞ் :- “அந்த உயில் இன்னும் சாம்பலாகிவிடவில்லை” ஹா-ம்...இங்க வாங்க... (சஞ்சீவியும், மல்லயப்பனும் தனிமையில்) சஞ் :- மீனுவைக் கொல்லுவதால் உங்களுக்கு என்ன பிரயோசனம்? ஜெயிலுக்குப் போகலாம், அவ்வளவுதான்! மல் :- இந்த அவமானத்தை எப்படி போக்குகிறது? சஞ் :- மானமாவது? அவமானமாவது? நான் சொல்லுகிறபடி செய்யுங்கள்... மல் :- சொல் கேக்கிறம்... சஞ் :- மீனுவிடம் பிரசவத்துக்கு மலையங்களா தான் சரியான இடம் என்று சொல்லி—மீனுவை மலையங்களாவுக்கு அழைத்துச் செல்லவேண்டும்! குழந்தை பிறந்தவுடன் குழந்தையைக் கொன்றுவிடவேண்டும். (குமரன் இதை கேட்கிறான்) மல் :- குழந்தையைக் கொல்வதா? சஞ் :- என் யோசனைப்படி கேட்டு நடவுங்கள்! குழந்தையைக் கொன்றுவிட்டால் கவலையே இல்லே. மல் :- உயில் அவளிடம் இருக்கிறதாமே... சஞ் :- சும்மா சொல்லுவாள்...அப்படி இருந்தாலும் குமரன் இல்லாமல் அதை வைத்துக்கொண்டு அவள் என்ன செய்யமுடியும்? பயப்படாமல் செய்யுங்கள்! நான் இருக்கிறேன்.