காட்சி 29

காட்சி 29.

45 பகுதிகளில்

இடம் :- சஞ்சீவி வீடு சஞ்சீவி :- உயிலை பத்திரமாக வைத்திருப்பாய் என்று தானே உன்னிடம் அனுப்பினேன்! உயிலுடன் நீதிமன்றத்துக்கு அல்லவா போயிருக்க வேண்டும்; அவனிடம் போய் என் காரியம் செய்தாய்? ஆமா...இப்போதாவது உயிலை பத்திரமாக வைத்திருக்கிறாயா? கும :- உயில்...உயில்...உயிர்...! சஞ்சீவி :- ஆம்! உயிர்தான்...எங்கே வைத்திருக்கிறாய்; கும :- உயில்...தீயில் எரிந்து சாம்பலாகப் போயிருக்கும் வைத்தியரே! சஞ் :- பார் தாயா...என்னிடமே பொய் சொல்லுகிறியே! கும :- இல்லாவிட்டால் மலையப்பனிடம் சிக்கி இருக்கும். [சஞ்சீவியும் பிரேமாவும் தனிமையில்] சஞ் :- பிரேமா...! பிரேமா :- எம்ப்பா! சஞ் :- இனிமேல் நீ குமரனை மறந்துவிட வேண்டியது தான். பிரேமா :- எம்ப்பா... சஞ் :- தெளிவாகச் சொல்ல வேண்டுமா? இனிமேல் அவன் ஜமீன்தார் வீட்டு வாசல்லே கூட கால் எடுத்து வைக்க முடியாது! இனிமேல் அவனை நம்பிப் பிரயோஜனம் இல்லே! மறந்து விடு! பிரேமா :- அப்பா...நீங்கள் சொல்வீர்களே பாவத்துக்கு விளக்கம்...அப்படி எத்தனை பாவம் வேண்டுமானாலும் செய்யத் தயார்! அவர் எனக்கு கிடைத்தால் போதும்! சஞ்சீவி :- (கோபத்துடன்) சீ... (பிரேமா போன பிறகு) “பிரேமா...காதல்...பிரேமா குமரனை வெறுக்க வேண்டும்! மீனு...குமரனை மறக்க வேண்டும். அவன் எங்கே பிசாசா சுத்திக்கிட்டு இருக்கானோ...” (இது வைத்தியனின் மனச்சாட்சி) ஹா-ம்...பிரேமா... (பிரேமா வருகிறாள்) ஆத்திரத்தில் பேசிவிட்டேன்......நீ குமரன் மீது கொண்டுள்ள காதல் நான் கெடுத்து விட விரும்பவில்லை! நீ குமரனை மணக்க வேண்டுமானால் மீனு குமரனை மறக்க வேண்டும். அப்படித்தானே... குமரனும்—மீனுவும் திடீரென்று சந்தித்து விட்டால்...? பிரேமா :- நாம் தான் அவரை வெளியே அனுப்ப மாட்டோமே... சஞ்சீவி :- அனுப்பமாட்டோம்...நம்மையும் மீறி சந்தித்துவிட்டால்...இதற்கு நீ ஒரு பொய்பிரச்சாரம் செய்ய வேண்டும். பிரேமா :- பிரச்சாரமா? சஞ்சீவி :- ஆம்! குமரன் பிசாசாக மாறிவிட்டான். பேயாகத் திரிகிறான்...என்று. பிரேமா :- மனிதனை பிசாசு என்றால் நம்புவார்களாப்பா? சஞ்சீவி :- மரம் செடிகள் அசைவதைப் பார்த்துக் கூட உலகத்தில் பலபேர் செத்திருப்பார்கள்! குமரன் பிசாசாக மாறிவிட்டான் என்று ஒரு பெண்ணிடம் சொல்! போதும் உலகம் பூராவும் தெரிந்து விடும்! (காட்சி மாறுகிறது) (ஆற்றங்கரை) பெண் :- கண்ணங்கரேனு வந்திச்சாம்! காலைக் காணோம்! காவக்கார அண்ணே சப்தம் போட்டுச்சாம்! காத்துப்போல பறந்துச்சாம்! (இவ்வாறு பேய் விளம்பரத்தைப் பெண்கள் பரப்புகின்றனர்)