காட்சி 24

காட்சி-24.

45 பகுதிகளில்

இடம் :- மல்லயப்பனின் மாளிகை குமரன் :- இடைக்கால ஜமீன்தாரே, வணக்கம்! ஏன் திகைக்கிறீர்? எஜமான் என்று வணங்கி வரவேண்டியவன்—எப்படியோ வந்திருக்கிறேனே...ஏதேதோ உளறுகிறேனென்று? மல்லயப்பன் :- டேய் குமரா! (பல்லைக் கடித்தல்) குமரன் :- பல்லைக் கடிப்பதும்—பறக்க விழிப்பதும் பயன் படாது இனிமேல். மல்லயப்பன் :- மரியாதை தவறிப் பேசாதே! கும :- மரியாதை! இனிமேல் அதை விலைக்கு வாங்க வேண்டியது தான்! மரியாதை தவறுவதற்கு முன் மாளிகையை விட்டு வெளியேறி விடு! மல் :- என்னை எதிர்த்தவர்களுக்கு எலும்பு தான் மிச்சம்! கும :- அது கூட மிச்சப்படாது எமனோடு போராடும் உன்போன்ற ஆணவக்காரர்களுக்கு! நீ மிச்சப்படுத்தினையே...எலும்பு...அந்த எலும்பு தான் ஈட்டியாக மாறி உன்னை எதிர்க்க வந்திருக்கிறது! மல் :- குமரா! பைத்தியம் போல் பேசாதே! கும :- படாடோப பனிக்காற்றும்—சூழ்ச்சி வெயிலும்—மமதை மழையும் இவைகளால் பாதிக்கப்பட்டு ஜமீன்தாருக்குத் தான் ஜன்னி கண்டு விட்டது. நான் பைத்தியம் தான்! தெளியும் நெஞ்சம் எனக்கு இல்லே அதனால்! மல் :- என்னடா உளறுகிறாய்? கும :- உளறுவதற்காகவா இவ்வளவு ஆவலாக ஓடி வந்தேன்! மல் :- என்னடா கூறுகிறாய்? கும :- நான் கூறவில்லை! உமது திருவிளையாடல் புராணம் முடிந்து விட்டது என்று இந்த உயில் கூறுகிறது! ஊரார் முன் நீ போட்டிருந்த திரையை சுக்கல் சுக்கலாக கிழித்தெறிய வந்திருக்கிறேன். என்ன சொல்லுகிறாய்? ஹூம்...மரியாதையாக வெளியேறி விடு! மல் :- குமரா...! தூங்கும் புலியை இடறாதே! கும :- அந்தப் புலித் தோலிலே வாழும் கோவேரிக் கழுதைக்கு குறி வைத்திருக்கிறான் குமரன்! மல் :- குமரா! பேசாதே! கும :- பிணம் பேசாது! மல் :- உன்னை கொல்லப்போகிறேன். கும :- இதே வார்த்தையை—இதே மாளிகையில் எத்தனையோ முறை கேட்டிருக்கிறேன். இதே வார்த்தையை சொல்லித்தான் எத்தனையோ பங்களாக்கள் தரைமட்டமாகி இருக்கின்றன. மல் :- நான் மலையப்பன்! கும :- சந்தேகம் இல்லை! மல் :- உன் வீரப்பிரதாபத்தை குத்துச் சண்டை மேடையில் வைத்துக் கொள். கும :- இல்லை! மல் :- இது என் வீடு! கும :- இங்கே தான் வித்தியாசப்படுகிறாய்! மல் :- என்னடா வித்தியாசம்? விதியற்றவனே! ஊர் சுற்றித் திரியும் ஊதாரி! இவனுக்கு ஜமீன்...சொத்து...வீடு வாசல்...பழைய வேலைக்காரன் என்று விசுவாசம் காட்டினால் மரியாதையாக நடந்து கொள்ளத் தெரியவில்லை மடையனுக்கு? கும :- மலையப்பா! பச்சையாகச் சொல்லுகிறேன்! உன்னை வஞ்சம் தீர்க்கப் போகிறேன். மல் :- குமரா...... கும :- பயப்படாதே...இப்போது அல்ல! பொறுத்திருப்பேன். மல் :- குமரா! என் சுண்டு விரல் அசைவிலே சுருண்டு போனவர்களின் பட்டியல் உனக்கு மனப்பாடம் இருக்கும்! கும :- மனப்பாடம் இருப்பதால் தான் மறக்கவில்லை மடையனே கேள்! உன்போன்ற உளுத்தர்கள் உழைப்பாளிகளின் ஆவேஷ மூச்சால் ஊதிவிடப்பட்டிருக்கிறார்கள்! இதோ...நாட்டு மக்கள் வேட்டையாடிய உன் காட்டு ராஜா தர்பாருக்கு முடிவு கட்டும் உரிமை முழக்கம்! உன்னை வெட்டி வீழ்த்தும் சம்மட்டி! என்ன சொல்கிறாய்? ஏன் விழிக்கிறாய்? வியர்வை சிந்தாமல் வந்த விளைவு! கஷ்டப் படாமல் வந்த களிப்பு! பாடுபடாமல் வந்த பரவசம்! இவைகள் எல்லாம் விட்டு விட்டு எப்படிப் போவது? கொஞ்சம் கஷ்டமாகத் தான் இருக்கும்! உரிமை பறிக்கப்படுகிறதே என்று பதைக்கிறாயா? மல் :- நான் செத்தாலும் எனது பிணத்தைக்கூட இங்கே தான் புதைக்கும்படி உத்தரவிடுவேன். உனக்கு உரிமை இருந்தால் இங்கே வந்து உறுமுவதும், உளறுவதையும் வைத்துக் கொள்ளாதே! கும :- ஏழைகளின் நெஞ்சை பஞ்ச மெத்தையாக்கி அதிலே நடந்தல்லவா உனது பாதம்! ஏழையின் இதயக் குமுறல் அல்லவா உனக்கு கீதம்! திக்கற்றவர்களின் இரத்தத்தை திராட்சை இரசமென பிழிந்து குடித்தவனல்லவா நீ! சந்திப்போம் சட்டத்துக்கு முன்னால்! மல் :- போ! போய் விடு! இங்கு நில்லாதே! கும :- போகிறேன். இதுதான் உனது கடைசி அதிகாரக் குரல். (குமரன் போய் விடுகிறான்.) (மலையப்பன் குமரனின் குடிசையில் தீயிட திட்டமிடுகிறான்) (குடிசையில் தீப்பற்றி எரிகிறது)