காட்சி 17

காட்சி 17.

45 பகுதிகளில்

மல்லயப்பர் :- குத்துச் சண்டை போட்டி எதற்காக என்று நினைத்தாய்? கிராம மக்கள் குதூகலப்படுத்தவா? இது தான் எங்களுக்கு வேலை? அந்த நாயைக் கொல்ல வேண்டும்? பரமசிவம் :- கொல்றதுன்னு லேசான காரியங்களா? தோற்கடிச்சுட்றேன். மல்லயப்பர் :- நீ வீராதிவீரன் என்று வெற்றி மாலை சூடுவதல்ல—எனக்கு வேண்டியது. அவனைக் கொல்லவேண்டும். பரமசிவம் :- அப்படி என்றால்... மல்லயப்பர் :- தவறான முறையில் சண்டையிடு! பரமசிவம் :- குத்துச் சண்டை சட்டப்படி குற்ற மாச்சுதுங்களே... மல்லயப்பர் :- சட்டம்! என்னிடம் சரணடையும்! தூக்கு மேடையில் இருப்பவனை காப்பாற்றும் துணிவு எனக்கு உண்டு! பாவம், புண்ணியம், நேர்மை, நீதி, இரக்கம், சட்டம், சமூதாயம் இவைகள் என்னிடம் செல்லாது. அனுசரித்தே பரமசிவம்! அவனை நீ கொல்லவேண்டும்! அதைக் கண்டு என் மனம் குளிரவேண்டும். (குமரனுக்கும்—பரமசிவத்துக்கும் குத்துச் சண்டை போட்டி நடைபெறுகிறது. பரமசிவம் தோல்வி அடைகிறான். குமரனுக்கு கிராம மக்கள் வரவேற்பளிக்கின்றனர்.) குமரன் :- உங்கள் அன்பிற்கும், ஆரவாரத்திற்கும் நான் எப்படி நன்றி தெரிவிக்கப் போகிறேன்? ஒருவன் :- தம்பி! இன்னிக்குத்தான் நாங்க சந்தோஷத்தைக் கண்டிருக்கிறோம். பசி, பட்டினி, அடி, உதை இவைகள்தான் இங்கு! குமரன் :- என்ன செய்வது? அந்த உயில் மட்டும் அகப்பட்டு விட்டால் இந்த ஜமீனையே உங்களுக்கு சொந்த மாக்குவேன். ஜரிகைத் தொப்பி உங்களை ஆளாது! சவுக்கு சவாரிகாரன் செலுத்தாது! அந்தக் காட்டு இராஜாவின் கண் அசைப்பு கட்டளையாக இருக்காது! ஜீவானந்தர் :- ஏழைகள் இன்பலோகத்தை கற்பனை செய்வதில் தனி ஆறுதல். குமரன் :- ஜீவானந்தரே! பக்தர்கள் கற்பனை செய்யும் சொர்க்க லோகமல்ல இது! முயன்றால் முடியக்கூடியது! நினைத்தால் நடக்கக்கூடியது! அதை அடைய நெற்றி நிறைய விபூதி அல்ல! நெஞ்சிலே தெளிவு—நேர்மையிலே நாட்டம்—இருந்தால் போதும். ஜீவா :- எதிர் பார்ப்போம்—அந்த நல்ல நாளை. கும :- நல்ல நாள் நம்மை நோக்கி வராது! அதை நோக்கி நாம் கால்கடுக்க நடக்க வேண்டும். (குமரன் ஆடைகள் கொண்டு வந்து) ஜீவானந்தரே! இதை எல்லோருக்கும் பங்கிட்டுக் கொடுங்கள்! உங்கள் புதுமை உள்ளங்கள் எனக்கு அளித்த பரிசு இது.