காட்சி 13

காட்சி 13

45 பகுதிகளில்

இடம் :- நாராயணியின் கல்லறை. ஜீவானந்த :- குமரா... கும :- வாருங்கள்...உங்களை உட்காரச்சொல்லி உபசரிப்பதற்கு எனக்கு ஒரு இடம் கிடையாது. என் தாய்க்கு நான் கட்டிக் கொடுத்திருக்கும் வீடு, உட்காருங்கள். ஜீவானந்த :- குமரா...வருந்தினால் செத்தவர்கள் வந்து விடுவார்களா? கும :- எனக்கும் தெரியும். ஆனால் அவர்கள் விட்டுப் போன வேலையை எப்படி நிறைவேற்றுவது? ஜீவானந்த :- ரொம்பவும் கலங்கி இருக்கிறாய். கும :- கலங்கவில்லை! கடமைசபதம் எடுத்திருக்கிறேன். நான் ஒரு பணக்காரன்...நான் ஒரு ஜமீன்தார்.... ஜீவானந்த :- என்ன பணக்காரனு? கும :- பயப்படவேண்டாம்! நான் ஒரு பணக்காரன் தான்! ஆனால்...எல்லா பணக்காரர்களும் கெட்டவர்களாக இருந்து விடமாட்டார்கள். என் தாயைக் கொன்றது யார் தெரியுமா? வைத்தியர்கள் கூறும் வியாதியுமல்ல...வேதாந்திகள் கூறும் விதியுமல்ல...கொடியவர்களின் கூடாரத்திலே தயாரப்பட்ட விஷம்...என் தாயைக் கொன்றது. ஜீவானந்த :- ...விஷமா! கும :- ஆம். விஷம்தான்...சாந்தம்...சாந்தம் என்று போதித்து வந்த என் தாயை சமாதியாக்கிவிட்டது. அந்தச் சமாதியிலே மல்லயப்பனின் இரத்தம் மழையெனப் பொழியவேண்டும்! அந்த மதோன்மத்த வம்சத்தின் கண்கள் பிடுங்கி மலர்களாகத் தூவவேண்டும். அம்மா...உங்களுக்கு அளித்த உறுதியை நிறைவேற்றும் வரை ஓயமாட்டான் குமரன்! துடிக்கும் என் கைகளுக்கு பதில் சொல்லித்தான் ஆகவேண்டும்! அந்தத் துரோகியை கொல்லாமல் விடமாட்டேன்! பழிக்குப் பழி...! (பழி வாங்க முடிவு செய்தான். பலரிடமும் விசாரித்தான் உயிலே...) கும :- பெரியவரே...சாதகமான பதில் கிடையாதா? பெரியவர் :- உயில் விஷயமாக எனக்கு ஒன்றும் தெரியாது. மற்றொருவர் :- உயிலாவது மண்ணுங்கட்டியாவது. கும :- அப்படி ஒரு உயிலாவது கேள்விப்பட்டதில்லையா? மற்றொரு :- கேள்விதான். கும :- என்னங்க கேள்வி? மற்றொரு :- அட, யாருங்காணும் சுத்தப் பைத்தியக்காரனு இருக்கே...ஆட்டத்திலே கேள்வின்னு... (குமரன் அலைந்தான், எங்குமே “பைத்தியம்” என்ற எதிரொலி.) கும :- (கல்லறைக்கருகே) அம்மா...நான் பைத்தியக்காரனு அம்மா...நான் பைத்தியமாம்மா...? சஞ்சீவி :- பைத்தியம் என்றுதான் சொல்லுவார்கள் குமரா! நானே உன் புது வரலாற்றை நம்ப முடியவில்லை மற்றவர்கள் எப்படி நம்புவார்கள்? குமரன் :- ஆ...அப்படி ஒரு உயில் எழுதப்பட்டது உங்களுக்குத் தெரியாதா? சஞ்சீவி :- உயில் எழுதப்பட்டது தெரியும். விண்ணிலே நட்சத்திரங்கள் விழுவதை பார்க்கமுடியும்! ஆனால், அது எங்கே விழுந்தது என்று கண்டு பிடிப்பதுதானே கஷ்டம். கும :- எங்கே இருந்தாலும் சரி! இடத்தை மட்டும் சொல்லுங்கள். சஞ்சீவி :- பளிங்கு மண்டபத்திலே பார்வைக்கா வைத்திருப்பார்கள்! அது எந்த பாம்புக் காட்டுக்குள் பதுங்கி இருக்கிறதோ... குமரன் :- பாம்புக்காடு—பாதாளச் சுரங்கம்! இடத்தை மட்டும் சொல்லுங்கள் வைத்தியரே. சஞ்சீவி :- உயில் ஒரு வாள்! அதை சட்டம் என்னும் சாணைக்கல்லிலே தீட்டவேண்டும். பிறகுதான் நீதிமன்றம் என்னும் போர்க்களத்திலே மல்லயப்பனை சந்திக்க முடியும். இந்தச் சாணைக்கல்லை வாங்க சாதாரணமானவர்களால் முடியாது! ஏராளமான சம்பத்துகள் தேவை! இந்த யோசனை சொல்வதால் உயில் இருக்கும் இடம் எனக்குத் தெரியும் என்று யூகித்து விடாதே. குமரன் :- வைத்தியரே...ஏமாற்றம் தான் பதிலா? சஞ்சீவி :- ஏமாற்றத்தையும் ஏணிப்படியாக்கிக் கொள்வார்கள், இங்கிதம் தெரிந்தவர்கள். வழக்கு நடத்த பணம் தேவை! பிறகு உயிலத் தேடு. (குமரன் போய் விடுகிறான்) (பிரேமா வருகிறாள்.) என் பிரேமா...இவ்வளவு நேரம்? பிரேமா :- வழியிலே லக்ஷ்மி வந்தாப்பா...ஆமா...குமரன் ஏதோ உயில் உயில்னு அலையிறாராமே...அது என்னப்பா? சஞ்சீவி :- சீக்கிரம் கொண்டுவா...பசிக்கிறது. (உணவுடன் உள்ளே போகிறாள்.) வேண்டாம்! இங்கே கொண்டுவா. (சாப்பிட்டுக் கொண்டே) ஜமீன் சொத்துக்கு அவன் அதிபதி! இறந்து போன ஜமீன்தார் மகன் குமரன். சொந்த மனைவி கிடையாது! ஆசை நாயகியின் மகன்! சொத்துக்கள் எல்லாம் குமரனுக்கு எழுதப்பட்டுவிட்டன. அந்த உயிலுக்குத்தான் ஆதாரம் தேடுகிறான். பிரேமா :- ஆதாரமா...(தனக்குள்) ஜமீன்தாரின் மகனா? சஞ்சீவி :- ஆம்...இறந்த ஜமீன்தாருக்கு சிகிச்சை செய்தான் ஒரு வைத்தியன். அவன் மறைத்து விட்டான் அந்த உயிலை. பிரேமா :- என்னப்பா சொல்லுகிறீர்கள்? யார் அந்தக் கொடியவன்? சஞ்சீவி :- கொடியவன் அல்ல! மகளை ஜமீன்தாரணி யாக்க வேண்டுமென்று பேராசைப்பட்டவன். பிரேமா :- யார் அந்தப் பேராசைக்காரன்? சஞ்சீவி :- பிரேமாவின் தகப்பன். பிரேமா :- ஆ...நீங்களா! இதை அவரிடம் சொல்லி விட்டீர்களா? சஞ்சீவி :- அசட்டுப் பெண்ணே! அவசரப்பட்டு விடாதே! குமரன் மீது நீ கொண்டுள்ள காதலை நான் அனுமதிக்கிறேன் தெரியுமா? அவன் உன்னை ஏழை என்றும் பாராமல் திருமணம் செய்து கொள்ளவேண்டும். பிறகு வழக்கு—அப்புறம் குமரன் ஜமீன்தார்! நீ ஜமீன்தாரணி!! பிரேமா :- ஆ...! என் குமரன் ஜமீன்தார்! என் காதலன் ஜமீன்தார்!!!