காட்சி 10

காட்சி-10.

45 பகுதிகளில்

(குமரன் மாட்டுக்கு வைக்கோல் போட்டுக்கொண்டிருக்கிறான். மீனு மறைந்து வந்து வைக்கோலை தூக்கிச் செல்லுகிறாள். குமரன் பிடித்துக் கொள்கிறான்) கும :- அட...நீதானா...? மாடெல்லே வைக்கோலை திங்கு தின்னு பார்த்தேன். மீனு :- போங்க குமரன். கும :- ஆமா...இன்னிக்கு என்ன முன்னாடியே வந்துட்டே? மீனு :- அண்ணன் ஊரில் இல்லை. கும :- அண்ணி? மீனு :- அந்தப் பிசாசு தூங்கி இருக்கும். கும :- ஆமா...இப்படி வர்றியே...யாராவது பார்த்தால் என்ன ஆகிறது? மீனு :- யாரைப்பற்றியும் கவலை இல்லே! எனக்கு வேண்டியது உங்கள் அழியாத அன்புதான். (என்று சொல்லி—துள்ளிக்குதித்து பால் கொண்டு வரப்போகிறாள். அங்கே ஞானம் பாலில் விஷத்தை கலந்து வைத்திருக்கிறாள்.) கும :- ஆமா...ஒரு நாளைக்கு பால் இல்லேன்னு என்ன? ஏன் இப்படி அவசரமாக ஓடணும்? மீனு :- எனக்கு ஒண்ணும் கஷ்டம் இல்லே. கும :- ஹூம்...எல்லா ஏழைகளுக்கும் இப்படி பாலா கிடைக்குது? மீனு :- எல்லோருக்கும் இப்படி ஒரு மீனுவா கிடைச்சிருக்கா? குடிங்கண்ணு... குமரன் :- முதல்லே நீ குடி. மீனு :- நீங்கதான். கும :- முடியாது...நீதான். (அப்பொழுது நாராயணி வருதல்) கும :- அம்மா... (மீனு ஓடி மறைகிறாள்) எங்கம்மா? நாரா :- படுத்திட்டியான்னு பார்க்கவந்தேன். இன்னுமா தூங்கலே? கும :- பால் குடிங்கம்மா... நாரா :- பால் ஏதுடா கண்ணு? கும :- குடிங்கம்மா...அதை இன்னொரு நாளைக்கு சொல்றேன். நாரா :- கண்ணே...நீ குடி. குமரன் :- ஒங்க பாலிலே வளர்ந்தவன்—இந்தப்பாலிலே யாவது பாசத்தை பார்க்கக்கூடாதா? நாரா :- என் கண்ணே...பாலிலா இருக்கிறது பாசம்? உன் பார்வையிலே இருக்கிறது வற்றாத பாசம். கும :- குடிங்கம்மா. (நாராயணி பால் குடித்தல்) நாரா :- இனிமேல் நீ குடி. கும :- இன்னும் கொஞ்சம்! (விஷம் கலந்த பாலைக்குடித்த நாராயணி கீழே சாய்கிறாள். குமரன் அதிர்ச்சி அடைகிறான்) குமரன் :- அம்மா... நாரா :- குமரா...ஏதோ சதி நடந்திருக்கிறது. அதில் குறி வைக்கப்பட்டவன் நீ—கொலை செய்யப்பட்டவள் நான், தம்பி! பல நாளாக மறைத்து வைத்திருந்த பரம இரகசியத்தை இன்று வெளியிட்டுப்போகிறேன். (காட்சி மாறுகிறது) மல்லயப்ப :- ஞானம்! ஞா :- வெற்றி! வந்து பாருங்களேன்...விபரத்தை பிறகு சொல்லுகிறேன். (இக்கோரக் காட்சியைக்கண்டு மட்டாக மல்லயப்பன் மகிழ்ச்சி அடைகிறான்—மமதையுடன்) (காட்சி மாற்றம்) கும :- அப்படியானால் இந்த மல்லயப்பர் யார்? நாரா :- உன் அப்பாவின் தூர பந்து! மலேயாவில் இருந்து வந்தவன். சூழ்ச்சியால் நம் சொத்தை கவர்ந்தவன். குமரா...எப்படியாவது அந்த உயிலை கண்டுபிடித்து விடு. கும :- அம்மா...அம்மா... மல்லயப்ப :- டேய்...குமரா...அங்கே என்னடா சப்தம்? குமரன் :- அம்மா... மல்லயப்ப :- காலராவா? ஜன்னியா? தூக்கிட்டுப்போடா எங்கேயாச்சிலும். (மீனு வருகிறாள்) மீனு :- குமரன்...இதென்ன விபரீதம்... கும :- (கோபத்துடன்) சீ...தொடாதே என் தாயை! பால் கொண்டு வருகிறேன் என்று அவசர அவசரமாக ஓடுனியே...இப்போது தெரிகிறது எதற்கு என்று. மீனு :- குமரன்...என்னை நம்புங்கள். கும :- முதலில் நீங்கள் குடியுங்கள் என்று கொஞ்சினாயே...அப்போது தெரியாதடி—நீ நஞ்சை கொண்டு வந்து குடிப்பாய் என்று... மீனு :- குமரன்...நான் கொடுத்ததில் தவறு ஒன்றும் இல்லே. கும :- நீ சரியாகத்தான் கொடுத்தாய்...நான்தான் தவறி என் தாயாரிடம் கொடுத்து விட்டேன். மீனு :- குமரன்...இவ்வளவு நாள் பழகியும் இன்னும் என்னை புரிந்து கொள்ளவில்லையா? கும :- புரிந்து கொண்டேனடி புரிந்து கொண்டேன். ஏழையின் இரத்தத்திலே நீச்சல் அடிப்பவன்—உன் அண்ணன்! அதிலே ஜலக்கிரீடை செய்பவள் தங்கை. பாட்டாளியின் எலும்பை சிலம்பாகச் செய்பவன்—உன் அண்ணன்! அதை அணிந்து கொண்டு நாட்டியம் ஆடுபவள்—தங்கை! இவளிடம் எனக்கு அன்பு, பாசம், காதல்... (என்று குமரன் மீனுவை உதறித் தள்ளுகிறான். மீனு போய் விடுகிறாள்.) குமரன் தனது தாயுடன் வைத்தியரிடம் போகிறான்.