காட்சி 8
காட்சி 8.
45 பகுதிகளில்
இரவு நேரம் குமரன் தூங்கிக் கொண்டிருக்கும்போது மீனு யாருக்கும் தெரியாமல் குமரனை சந்தித்துப் பேச வருகிறாள். நாயின் பாதுகாப்பிலே காதலி காதலனைக் கண்டு பேசுவதில் என்ன தவறு இருக்கிறது? (இருவரும் தனிமையில்) கும :- மீனு...... மீனு :- குமரன்...... கும :- அண்ணன் தூங்கியாச்சா? மீனு :- தூங்கியாச்சி! ஆமா...நாளைக்கு வரி வசூலுக்கா போறீங்க? கும :- உனக்குத் தெரியாதா? நாளைக்கு ஒங்க அண்ணன் வரி வசூலுக்குப் போறாரு! இந்த அக்கிரமத்தைப் பார் மீனு...பருவ மழை இல்லாமல் பட்டினிப் பஞ்சம் தலை விரித்தாடுது...ஒங்க அண்ணன் வரி வசூலுக்குப் போறாராம்—வரி வசூலுக்கு. மீனு :- நீங்கள் இப்படி யெல்லாம் பேசறது அண்ணனுக்குத் தெரிஞ்சுதான் ஆத்திரப்படுறாரு! கும :- நாளைக்கு நீ என்னுடன் வந்து பார்—அந்த வயிற்றெரிச்சல் உனக்கும் தெரியும். வரி கொடுக்க வழி இல்லை என்பான்—அவன் கை வலி எடுக்கும் வரை அடிப்பான் உன் அண்ணன். ஒளி இழந்த கண்கள்—உலர்ந்த உதடுகள்—ஒட்டிய வயிறு...இவைகள் அந்த ஓட்டைக் குடிசையிலே. விம்மலும், விக்கலும் அந்த விதியற்றவருக்கு—விசார குரல் வீணையின் நாதமாக இருக்கும் இந்த விழியற்றவருக்கு. பசியால் பத்துவான் பஞ்சை—பால் இல்லாக் குழந்தை வீறிட்டழும்...கருணை இழந்த நெஞ்சம், கண் இழந்த தன்மை, கண்ணிய மற்ற செயல் இவைகள் உன் தமையனின் தர்பாரிலே......முகாரியை மோகனம் என்பான். ஒப்பாரியை ஒய்யார கீதம் என்பான்...மீனு...நீ அடிக்கடி சொல்வாயே...“கடவுள் காப்பாற்றுவார்” என்று...—அதைத்தான் அந்த கதியற்றவர்களும் ஆயிரம் முறை சொல்லிக் கதறுவர்...அடிப்பான்...அவர்களது உடலிலே இரத்தம் சொட்டும் வரை...அய்யோ என்று அழுகுரல்...அடுக்குமா இந்த செயல்...? சுழலும் சாட்டைக்கு முன்னே சுருண்டு போவார்கள்...இவற்றுக்கிடையே உன் அண்ணனின் அதிகாரத் தேர் நாலு பாட்டாளி மக்களின் தெருவிலே பவனி வரப்போகிறது...வந்துபார்...வந்துபார்...பார்...பார்...... மல் :- டேய்...அங்கே என்னடா சப்தம்? (மீனு ஓடி மறைகிறாள்). (மல்லயப்பர் போன பிறகு) மீனு :- வைக்கோல் போருக்கு முன்னே பட்டாசு கொளுத்துறீங்க. கும :- பட்டாசா இது? மீனு...... மீனு :- போதும்...போதும்...மறுபடியும் ஆரம்பிச்சிடாதீங்க. குமரன் : பேசும் யாழே பெண் மானே வீசும் தென்றல் நீ தானே. மீனு : நீல வானே தன்னை மறந்து நிலவினைப் புகழ்ந்திடலாமோ. குமரன் : எழிலே! தமிழ்க் காவியமே எழுதாத ஓவியமே— மீனு : இன்ப மொழி பேசி பேசி அன்புப் பார்வை வீசி வீசி. குமரன் : பேசும் யாழே பெண் மானே— மீனு : யாழே நானென்றால் நாதம் நீர்தானே குமரன் : நாதத்தில் பேதம் உண்டு நமக்கது வேண்டாமே. இருவர் : காதல் வாழ்வே கனி ரசமே மாதர் மறவர் உல்லாசமே.