காட்சி 4

காட்சி 4

45 பகுதிகளில்

இடம் :- வைத்தியர் வீடு. கும :- (கதவை தட்டிக்கொண்டு) வைத்தியரே...வைத்தியரே... பிரேமா :- (வைத்தியரின் மகள் — கதவைத் திறந்து) வாங்க! ஆ...இதென்ன அக்கிரமம்... கும :- அப்பா இல்லே... பிரே :- அய்யோ...இரத்தம் இரத்தமா தளிர்ச்சிருக்கே கும :- எங்களை புலியா மாத்துறுங்க—இப்படி சிகப்பு கோடு போட்டு. அப்பா எங்கே...? பிரே :- இதோ கூப்பிட்றேன் ஏ அப்பா...சீக்கிரம் வாங்கோ...” (என்று குடிசையில் இருந்து தனது தந்தையை பிரேமா அழைக்கிறாள்) [தங்கையன் வருகிறான்] தங்கையன் :- வைத்தியர் இல்லே? பிரே :- இல்லே. தங் : கொஞ்சம் உடம்பு எண்ணெய் வேணும். பிரே :- இப்போ இல்லே. தங் : பணம் கொண்டு வந்திருக்கேன். பிரே :- அப்புறம் வாய்யா! இப்போதான் வேலையா இருக்கே. (தங்கையன் போன பிறகு) கும :- ஏன்...பிரேமா அதை கொடுத்தனுப்புறதானே பிரே :- டேரப்பை போறவன்...அப்புறம் வருவான். இதை விட அது ஒண்ணும் முக்கியம் இல்லே... (வைத்தியர் வருகிறார்) சஞ் :- ஏன்...பிரேமா...யார் குமரா? பிரே :- இந்தக் கொடுமையை பாருங்கப்பா—அந்தச் சண்டாளன் சவுக்காலே அடிச்சிருக்கான். சஞ் :- என்ன குமரா இது? கும :- இது என் எஜமான் கொடுத்த முத்தங்கள். சஞ் :- ஏன் பிரேமா......அந்தக் கீல்வலிக்கார தங்கையன் உடம்பு எண்ணெய் கேட்டானுமே......ஏன் கொடுத்தனுப்பலே? பிரே :- அது இல்லேப்பா! சஞ் :- சும்மா கெட! டேய் மாத்திரை! அவன் கோபிச்சிக்கிட்டு போறான். இதைக் கொடுத்திட்டு பணத்தை வாங்கிட்டு வா. மாத் :- (வைத்தியரது வேலைக்காரன்) இப்போ எதுங்க முக்கியம்? அவன் கோபிக்கக் கூடாதுங்குறதா? பணமா? சஞ் :- சீ......கொண்டு போயி கொடுத்திட்டு வாடா. (மாத்திரை போகிறான்) பிரே :- சரி........இவரைக் கவனிங்கப்பா! சஞ் : குமரா...நல்ல வேளை...உடனே வந்தாய்...இல்லேன்னு சீர் கெட்டிடும். கும :- நான்......எனக்காக வரவில்லே! என்னை அடிச்சதிலே ஜமீன்தார் கை சுளுக்கிடுச்சி...அதுக்காக உங்களை கூட்டிட்டு போக வந்தேன். பிரே :- கடவுள் கூலி கொடுக்காமலா விடுவாரு? கும :- கொடுப்பாரு......கொடுப்பாரு!...... சஞ் :- பிரேமா...இந்தா...இந்த மருந்தைப் போடு! நான் போயி அந்த கொம்பேறி மூக்கனை பார்த்துட்டு வர்றேன்.