காட்சி 2
காட்சி 2
45 பகுதிகளில்
இடம் :- சஞ்சீவி வைத்தியரின் குடிசை நாரா :- குவிந்து கிடக்கும் செல்வத்தை ஒரு கொடியவன் அனுபவிக்க விட்டு விட்டு, நானும்—என் மகனும் கண் இருந்தும் குருடர்களாக அலைய வேண்டுமென்பது விதியா வைத்தியரே......? சஞ்சீவி :- வேதவல்லி...... நாரா :- உஸ்......குமரனுக்குத் தெரியாது. சஞ் :- ஹூம்...நாராயணி...இன்றைய ஜமீன்தார் மல்லயப்பனுக்கு உன்னைத் தெரியாது. நியாயம்...குமரனும் சில நாள் அங்கேயே வேலைக்கு அமரவேண்டும். நாரா :- வேலைக்கா? சஞ் :- அப்படியானால் தான் நமது இலட்சியம் நிறைவேறும்! மறைந்து கிடக்கும் உயிரையும் நீ அங்கேயே கண்டு பிடிக்கவும் கூடும்! குமரனுக்கும் ஜமீன் பழக்க வழக்கங்கள் பாடமாகும்! நாரா :- குமரனுக்கு பணக்கார வீடு என்றால் பிடிக்காது! அந்த ஊரிலே சீர்திருத்தம் பேசித்தான் உயிருக்கு ஆபத்து வந்து—இந்த ஊருக்கு வந்தோம். சஞ் :- இப்போது எல்லா சீர்திருத்தமும், கொள்கைகளும் பேசலாம்! பிறகு ஜமீன் கிடைத்து விட்டால் அந்த உல்லாசத்திலே அவற்றை எல்லாம் மறந்து விடுவான்! நாராயணி...நான் சொன்னது ஞாபகமிருக்கட்டும்! நாராயணி :- குமரா...குமரா...! (குமரன் வருகிறான்) கும :- என்னம்மா! ரகசியமெல்லாம் பேசி முடிந்ததா? நாரா :- குமரா! நமக்கு ஜமீன்தார் வீட்டிலே வேலை கிடைக்கப் போகுதாம்! கும :- வேலையா! ஜமீன்தார் வீட்டிலேயா? நாரா : சொல்றதை சரின்னு கேக்கணும்! (மூவரும் புறப்படுகின்றனர் ஜமீன்தார் மல்லயப்பரிடம்)