காட்சி 1
காட்சி 1
45 பகுதிகளில்
மறுமலர்ச்சி எண்ணம் கொண்ட வாலிபன் குமரன் அவனை தொலைத்துவிட சில துரோகிகள் கிளம்பினர். அன்னையின் வேண்டுகோள்படி அவன் வெளியூர் புறப்பட்டான். வரும் வழியில்........ ஒரு கிராமத்தில் மாரிக்கு பூஜை நடந்து கொண்டிருக்கிறது. அப்போது குமரன் அவனது அன்னையுடன் வருகிறான். எதிரே வந்த கிராமத்தில் ஒருவரான ஜீவானந்தர் குமரனை சந்திக்கிறார். குமரன் :- ஹூம்...என்னங்க அது கொண்டாட்டம்...? ஜீவானந்தர் :- கொண்டாட்டம் ஒண்ணுமில்லையப்பா... நம்ம திண்டாட்டத்தைப் போக்க தேவிக்கு பூஜை நடத்துறோம். கும :- பூஜையா......! ஜீவா :- ஊரிலே மழை இல்லாமல் விளைச்சல் இல்லை. விளைச்சல் இல்லாமல் ஜமீனுக்கு வரி கொடுக்க சக்தி இல்லை. அதனால் மாரியாத்தாளுக்கு பூசை நடத்துகிறோம். கும :- ஓ...ஹோ...அய்யா...ஜாக்கிரதை! பூஜை அதிகமாகி புயலும் மழையும் சேர்ந்து வந்திடப் போகுது. ஜீவா :- என்னப்பா பண்றது ஜனங்கள் எப்படிப் போறாங்களோ; அப்படித் தானே நாமும் போகணும். கும :- உங்கள் கண்ணீரைக் கண்டு கருணை காட்டாத மாரி—பன்னீரில் மயங்கி விடுவாள் என்றால்...நீங்கள் அவளை ஏமாற்றுகிறீர்கள் என்று தானே அர்த்தம். ஜீவா :- அதுவும் சரிதான்! நீ சொல்வதும் உண்மைதான்! ஆமா...நீங்க யாரு? எந்த ஊரு? நாராயணி : (குமரனின் தாய்) நாங்க வெளியூர். சஞ்சீவி வைத்தியரை பார்க்கணும்னு வந்தோம். அவரு வீடு...... ஜீவா :- சஞ்சீவி வைத்தியரா......? அவரு வீட்டிலே தான் இருப்பாரு! இல்லைன்னா விஷமூலிகை தயாரிக்கிற குடிசை ஒண்ணு இருக்கு! அங்கே இருந்தாலும் இருப்பாரு! எதுக்கும் கொஞ்சம் அப்படிப் போயி விசாரித்துப் பாருங்க. கும :- வாரேமுங்க! (ஜீவானந்தர் போய் விடுகிறார்.) நாரா : எம்பா...அங்கே இப்படி பேச்சுப் பேசித்தானே இந்த ஊருக்கு வந்தோம். இங்கேயும் வந்தவங்க—போனவங்க கிட்ட என் வம்பு பேசுறே? கும :- வம்பு இல்லேம்மா...சிறு விளக்கம், மழைக்கும்—மாரிக்கும் உள்ள தொடர்பைப் பற்றி......! நாரா :- சரி...சரி...வா போகலாம். (கோவில் பூசை நடந்து முடிகிறது) (பாட்டு) ### எல்லோரும் மாரி மகமாயி மாரி மகமாயி ஆயி எங்கள் காளியம்மா மாரி மகமாயி மாரி மகமாயி ஏழை நாங்கள் எல்லோரும் வாழ மாத மும்மாரி பொழியணும் தாயே. ### ஆண் சூரியனால் கடல் நீரும்—மேகமாகுமே மாறியதால் வேகத்திலே மழையும் பொழியுமா... ### பெண் சொல்றேன் கேளு... விஞ்ஞானம் புதிதாக மாறுது பாராய் கொடும்பாவி அருளாலே பெய்யுமாம் ஜோராய் மானம் சாஞ்சா நாமெல்லோரும் வாடிடுவோம் தன்னாலே வா...... ### எல்லோரும் திரி சூலி நீலி எங்கள் மாரி மகமாயி வரி கொடுக்க முடியாமல் வாடுறோம் தாயே... ஓங்கார ரூபிணி மாரி மகமாயி எங்கள் குறை தீர்த்து விடு மாரி மகமாயி......(மாரி)