காட்சி 10

Scene 10

10 பகுதிகளில்

## காட்சி 10. பலி பீடம். துர்ஜய:- நீ, கடைசியாகச் சொல்வது? காண்டி:- கடைசியாகச் சொல்வது? யாரிடத்தில் சொல்வது! என் உயிரைக் குடிக்கத் துடித்து நிற்கும் சாவியிடத்தில் சொல்வதா? என் கழுத்தை நெறிக்கக் காத்திருக்கும் கத்தி இடத்தில் சொல்வதா? அல்லது வழிந்தோடும் என் ரத்தத்தைப் பார்த்து ரசிக்க வந்திருக்கும் உன்னிடத்தில் சொல்வதா? யாரிடத்தில் சொன்னாலும் சரி! யார் கேட்டாலும் சரி? கடைசி நேரத்திலாவது என் இதயத் துடிப்பு ஆவேசமாகத் துடித்து ஓயட்டும்! என் கண்களில் ஒருமுறை கனல் வீசி பிறகு அணைந்து போகட்டும்! என் ரத்தம் சூடேறிக் கொதித்துப் பிறகு ஜில்லிட்டுப் போ ட்டும்! நீதியின் நிலைக்களமாய், நேர்மையின் உலைக்களமாய் வாழ்ந்த வண்டமிழ் வளநாடே! நீ, சூதகர்களின் உறைவிடமாய், சூழ்ச்சியின் இருப்பிடமாய் ஆனது ஏன்? தூய்மை, அன்பு, சத்தியம் இவைகள் மட்டும் தாங்கிய தங்கத் தாய் நாடே! நீ துரோகிகளை, துன்மார்க்கர்களை, துஷ்டர்களைத் தாங்குவது ஏன்? இந்தக் கேள்விகளுக்கெல்லாம் எனக்குக் கிடைக்கும் ஒரே பதில், பலிபீடம்! பலிபீடம்!! இந்தப் பயங்கரமான வார்த்தைதானா? ஏ! கொடுமை தாண்டவமாடும் குறிஞ்சிநாடே! நீ என்னைக் கொல்வதோடு என் ரத்தத்தை உறிஞ்சி கொழுப்பதோடு இருக்கக்கூடாதா? என் ராணியின் வாழ்வையுமா வாட்டவேண்டும்? என் ஆசைக் காதலியை என்னிடம் இருந்து பிரித்து, என்னைப் பெற்ற தாயாரைப் பாதாள சிறையில் பூட்டிவிட்டாயே! என் நெஞ்சைச் சிதள் சிதளாகப் பிரிக்கிறாயே! பச்சாத்தாபப் படுகிறாயே! பரிதாபம், ஈவு, இரக்கம் எள்ளளவும் இல்லையா உனக்கு? என்னைக் காதலித்தாள், எனக்கு வாழ்வு அளித்தாள், மாநிலம் சாய்ந்தாலும் உம்மை மறவேன் என்றாள், பூங்காட்டில் பூங்காற்றும் பூங்குழலாள் எங்கோ போய்விட்டாள்! சாக்காட்டின் அடிவாரத்திலும் அவளைச்சந்திக்கமுடியாத பாவியாகிவிட்டேனே! என் அறிவு வந்த பருவ முதல் என்னைப் பெற்ற அப்பா அம்மா யார் யார் என்று ஏங்கித் தவித்தேன்! மகனே என்று ஒளி வீசும் கண்களோடு அன்பு மொழி பேசிய என் அன்னையின் முகத்தைச் சரியாகக்கூடப் பார்க்கவில்லை! அவ்வளவு சீக்கிரத்தில் சாவதா? அந்த ஆனந்தத்தை அக்கிரமக்காரர்கள் ரசிப்பதா? இந்த மண்ணிலேதான் பிறந்தேன்! இந்த மண்ணிலேதான் மழலைமொழி பேசி தவழ்ந்து விளையாடினேன்! இந்த மண்ணிலேதான் சவமாகச் சாயப்போகிறேன். வந்தாரை வாழ வைக்கும் இந்த மண்ணில் சொந்த நாட்டுக்காரன் அநியாயமாகச் சாவதா? குற்றமற்றவன் சாவதா? கொடுமையை நினைக்கவும் தெரியாதவன் சாவதா? என் சாவு உங்களுக்கு ஒரு பாடமாக இருக்கட்டும். இனிமேல் இந்தப் பலிபீடத்தில் நிரபராதிகள் எலும்பு நொறுங்காமல் பார்த்துக்கொள் ளுங்கள். உழைக்க என்னவேண்டுமானாலும் செய்துவிடலாம் என்ற அகங்காரத்தை, ஆணவத்தை அரசாங்கச்சட்டத்தை, அதற்குத் தூபம்போடும் துரோகக்கும்பலை, துர்ஜயன் கூட்டத்தைப் பலிபீடத்தில் நிறுத்துங்கள். சூழ்ச்சியின் முதுகெலும்பைச் சுக்கு சுக்காக நொறுக்குங்கள். துரோகத்தை தூள் தூளாக நொறுக்குங்கள். அக்கிரமத்தை அணுஅணுவாக வீழ்த்.......... (ஆவேசத்தில் கால் இடறி கீழே விழுகிறான் காண்டிபன்) வீழ்ந்தது போதுமினி நாமே வாழ்வோம்! அழிந்தது போதுமினி நாமே ஆழ்வோம்! துர்ஜயன்:- போதும் உன் ஒப்பாரி! ....நடக்கட்டும். [தூக்குமேடை மணி ஓசை கேட்கிறது. இரண்டுமுறை கேட்டான், மூன்றுமுறை கேட்கவில்லை. காரணம்? மூன்றுமுறை மணி ஒலித்தால் காண்டிபன் தலை கீழே உருளும் என்று நினைத்த ராணி தன் தலையை மூன்றாம் அடிக்கு நேரே பலி கொடுத்தாள். மூன்றுமுறை ஒலிக்காத காரணத்தால் எல்லோரும் திகைக்க, நிமிர்ந்து பார்க்கிறான் காண்டிபன்.] காண்டி:- ராணி! [தன் அரச குமாரி கீழே விழுந்ததை அறிந்த ரம்பா, ராணியை மடியில் தூக்கிவைக்கிறாள்.) துர்ஜய:- ....உம் நிறுத்தாதே, நடக்கட்டும். (காண்டிபன் கழுத்தை நறுக்க கொலையாளிதயாராகிறான் மறுக்க யாதொரு வழியும் தெரியாமல் திகைக்கிறான் அழகு. அப்போது ரம்பா தும்முகிறாள். தும்மலைக் கேட்டவுடன் தன் வழக்கமான “குதி”யை ஆரம்பித்து வெட்டை நிறுத்துகிறான்.) துர்ஜய:- டேய்! பிடியுங்கள். (அது சமயம், அரசன் தன் மகனைப் பார்க்க அங்கு வருகிறான். தன் மகன் உயிரோடு இருப்பதைப் பார்த்து......) கோபதி:- ஆ! காண்டிபா! அழகு:- விடு! காண்டிபன் இளவரசனா? காண்டிபா! (துர்ஜயன், காளிங்கன், முத்தம்மாள் இருவரையும் கண்டு கதிகலங்கி அங்கிருந்து தப்ப முயல்கிறான்.) துர்ஜயன்:- காளிங்கன், முத்தம்மாள்! (துர்ஜயன் கூட்டத்தில் புகுந்து ஓடுகிறான். தன்னை மானபங்கம் செய்ததற்காக பிரதி உபகாரமாக, தன் கையிலுள்ள பிச்சுவாவினால் வஞ்சம் தீர்த்துக்கொள்கிறாள் முத்தம்மாள்!) காளிங்:- இருதய சுத்தமில்லாத அத்தனைபேர்களுக்கும் இதுதான் முடிவு! அழகு:- ரம்பா! காண்டி:- ராணி...! ராணி:- சுவாமி...! காண்டி:- இவள்தான், ராணி! மருதநாட்டு இளவரசி! கோபதி:- இளவரசர்! பொதுமக்கள்:- வாழ்க! காண்டி:- வளம், வழியும் குறிஞ்சிநாட்டுப் பெருமக்களே, வணக்கம், நான் இந்த மாநிலத்து மன்னனில்லை. மக்களின் தலைவன், மக்களின் தொண்டன். குறிஞ்சி நாட்டு முடியாட்சி முடிவுற்றது. இனி குடியாட்சி பூத்துக்குலுங்கும், புதுவாழ்வு மலரும், புதுக் கருத்து வளரும், எல்லோரும் ஓர் குலம்! எல்லோரும் ஓர் இனம்!! எல்லோரும் இந்நாட்டு மன்னர்!!! நலம்! ★