காட்சி 8
Scene 8
10 பகுதிகளில்
## காட்சி 8. (ராஜ தர்பார்) கோபதி:- நீ குற்றவாளி. இதை ஒப்புக்கொள்ளுகிறாயா? காண்டி:- என்னை ஏன் கேட்க வேண்டும். நேர்மையான விசாரணைக்குப் பிறகு நீங்கள் நிர்ணயிக்க வேண்டிய முடிவு அது. துர்ஜயன்:- விசாரணை மகாராஜா வெளிச்சத்தில் விளக்கு தேவை இல்லை. இந்த வழக்கிற்கு விசாரணையே தேவை இல்லை. கோபதி:- இருக்கலாம், சொந்த கண்களையே நம்ப முடியாத இந்தக்காலத்தில் அவசரப்பட்டு நீதியை அழித்து விடக்கூடாது. காண்டிபா மனச் சாட்சிக்கு விரோதமின்றிச் சொல். நீ கொலை செய்தது உண்மைதானே? காண்டி:- உங்கள் மன ஆறுதலுக்காக நான் கொலைக் குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டுமா? மகாராஜா நீதியின் சாயாத பண்பு தங்களிடம் இருந்தால் தயவுசெய்து ஆலோசியுங்கள். மகனின் பிரிவு மனப்பதட்டத்தை அதிகப்படுத்தும். ஆனால் ஒரு கொலை மற்றொரு கொலைக்கு சாந்தி ஆகாது. துர்ஜயன்:- இது குற்றவாளிக் கூண்டு, குருநாதர் பீடமில்லை. இளவரசனைக் கொன்றது நீ, இதற்கு உன் ஆட்சேபம். காண்டி:- நிறைய இருக்கிறது. ஆண்கள் நுழையக் கூடாத காளி கோவிலில் துர்ஜயனுக்கும் ரௌத்திரனுக்கும் அந்த நேரத்தில் அங்கு வேலை. துர்ஜயன்:- பொய், சுத்தப்பொய். அரசே இவனை கைது செய்த அத்தனை சிப்பாய்களையும் கேளுங்கள். என்னை காளிகோயிலில் பார்த்தவர்கள் யாராவது இங்கு இருக்கிறார்களா? உயிர் பிழைப்பதற்காக உழுத்த வாதங்கள் அள்ளி வீசுகிறான் உன்மத்தன்! மன்னரின் நீதிமன்றத்தை அவ்வளவு மட்டமாக நினைத்துவிட்டான் மண்டூகம்! காண்டி:- நீதியை வரவழைக்க நேரம் தெரியாமல் இவன் வாட்டுக் கூச்சலுக்கு ஒதுக்கியிருக்கும் இந்த இடத்திற்கு பெயர் நீதிமன்றமா? இங்கு வழங்குவதற்குப் பெயர் தான் நீதியா? கோபதி:- என்ன? துர்ஜயன்:- தெய்வ நீதி வேண்டுமென்கிறான் தகிடு தத்தக்காரன். காண்டி:- இல்லை. மனித நீதி போதும் என்கிறேன் மன்னர். மன்னர் மகனைக் கொன்றதாக நான் இதற்கு நீதி தேவன் ஸ்தானத்தில் வீற்றிருக்க வேண்டியது மன்னரல்ல இந்த மாநிலத்து மக்கள். சபையோர்:- ஆம் மகாராஜா குற்றவாளியின் வாதமும் பொருத்தமானதுதான், துர்ஜயன்:- பொருத்தமானது. மன்னரையே ஒரு பிரஜை கொன்றுவிட்டு அந்தக்கொலை விசாரணைக்கு பிரஜைகளே தீர்ப்புக் கூறுவது அதைவிட பொருத்தமானது. கோபதி:- சரியாகச் சொன்னீர். சட்டத்தை மீறி நீ காளிகோவிலில் நுழைந்தது ஒரு குற்றம். காண்டி:- இல்லை சட்டத்தை மீறினது நான் அல்ல. தங்கள் மகன். துர்ஜயன்:- இறந்துபோன இளவரசனைப்பற்றி இங்கு பேச்சில்லை. காண்டி:- அப்படியானால் இந்த விசாரணையே தேவை இல்லை. சபையோர்:- கேள்விக்குப் பதில். உன் கேலிக்கு நேரமில்லை. காண்டி:- நேர்மை கேலியாகத் தோன்றுகிறது. நீதி இருட்டிலிருப்பதால் அறிவு குருடாகிவிட்டதா? மகாராஜா கேளுங்கள்! சபையோர்களே கேளுங்கள்! துர்ஜயன்:- கேளுங்கள்! கேளுங்கள்! நன்றாகக் கேளுங்கள்! காண்:- என் காதலியைக் கைப்பற்ற துர்ஜயனும் ரௌத்திரனும் முயன்றார்கள். அதற்காக கள்ளர்கள் நடுங்கும் நள்ளிரவில் காளி கோயிலுக்குள் நுழைந்தார்கள். நானும் தொடர்ந்தேன் அங்கு, என் தோகைமயிலாளை இந்த துரோகிகள் தொட்டு இழுத்தனர். நான் ஏழைதான், ஏழை என்றால் இதயம் இருக்காதா! பாவையர் வேட்டையாடும் இந்த பாபிகள்மேல் பாய்ந்தேன். இந்த பயந்தாங்கொள்ளி எங்கேயோ பதுங்கிவிட்டான். பிறகு போர், வாள்ப்போர், மல்ப்போர், எங்கிருந்தோ ஒரு கட்டாரி எனக்கும் தெரியாமல் ரௌத்திரன் உயிரைக் குடித்துவிட்டது. இந்தக் கொலையைப்பற்றி எனக்குத் தெரிந்தது இதுதான். சபையோர்:- இதற்கு எல்லாம் சாட்சியங்கள்? காண்டி:- கிடையாது. துர்ஜ:- சாட்சியம் இல்லாத வாக்குமூலம், சாரீரமில்லாத சங்கீதம் அம்பலத்திற்கு வர முடியாது அரசே! நானும் ரௌத்திரனும் காளிகோயிலில் நுழைந்தோம். இது காண்டிபனின் வாதம். இவனை கைது செய்த அத்தனை சிப்பாய்களுக்கும் தெரியாமல் நான் எங்கே பதுங்கிவிட்டேன். நான் என்ன கண்கட்டி வித்தைக்காரனா? அல்லது கடவுள் அவதாரமா? உண்மை அதுவல்ல. ராணி காளி கோயிலில் இருந்திருக்கிறாள், காண்டிபன் அவளைச் சந்திக்கச் சென்றிருக்கிறான் கள்ளக் காதலின் காமவேட்கை அது. ரௌத்திரன் அதைக்கவனித்திருக்கலாம். ஆனால் அதற்கும் கொலைக்கும் என்ன சம்பந்தமென்பீர்கள்? ஏன் இவனே ரௌத்திரனை காளி கோயிலுக்கு இழுத்துச்சென்றிருந்தால்! இவன் வலையில் சிக்கி அந்த சுத்தவீரனை இவனே கொன்றிருந்தால்! காண்டி:- நான் கொன்றிருந்தாலும் அது அநியாயமல்ல. இந்த நாட்டுக்குச் செய்த நல்ல காரியத்தைச் செய்து முடித்ததாக எண்ணுவேன். கோபதி:- என்ன? காண்:- இறந்துபோன இளவரசன் இந்நாட்டு மக்கள் காட்டு மிருகம்போல் நடத்தியது உங்களுக்குத் தெரியாதா? சபையோர்:- இது அவன் ராஜ்யம் காண்:- ஆண்டவன் ராஜ்யமாக இருக்கட்டுமே! அநீதியை எதிர்க்க பிரஜைகளுக்கு உரிமை உண்டு. எத்தனை இளம் பெண்களின் கற்பு உங்கள் இளவரசன் லீலாவிநோதங்களுக்கு பலி கொடுக்கப்பட்டிருக்கிறது, ஏன் என்று கேட்ட எத்தனை ஏழை மக்களின் ரத்தத்தைப் பார்த்து கோர சிரிப்புச் சிரித்திருக்கிறான் உங்கள் இளவரசன். அவனை விட்டிருந்தால், அவன் பட்டத்திற்கு வந்திருந்தால் பெண்களின் கரங்களை செங்கோலாக்கிக்கொண்டு அந்தப்புரத்தை சபாமண்டபமாக்கிக்கொண்டு, சரசசல்லாபங்களை சட்டப் புத்தகமாக்கிக்கொண்டு ரதி மதன ஆட்சியல்லவா நடத்தியிருப்பான். நல்லாட்சியா நடைபெறும் இந்த நாட்டில், நாட்டு மக்கள் செய்த பாக்கியம் ரௌத்திரன் படுகொலை செய்யப்பட்டான். துர்ஜயன்:- அப்படிச் சொல்! இளவரசன் செய்தது அநீதி அதைத்தடுக்க அவனைக் கொலை செய்தாய்! காண்:- அந்த புண்ணியம் எனக்குக்கிடைக்கவில்லை! கோபதி:- பின் யாருக்குக்கிடைத்தது? வரட்டு வாதம் புரியும் வக்கிரபுத்திக்காரா வஞ்சகா! நெஞ்சம் பதரும் செயலைப்புரிந்துவிட்டு நீதி, ஞாயம், நேர்மை இவைகளை பேச வந்துவிட்ட கொலைகாரா! பின் யாருக்குக் கிடைத்தது? துர்ஜயன்:- இவன் கட்டாரிக்குக் கிடைத்தது! காண்:- கிடைக்காத எங்கள் குலச்செல்வத்தைக்கொல்லும் பாக்கியம் இவன் கட்டாரிக்கு கிடைத்தது! (மகன் நிரபராதி இந்நாட்டு இளவரசன் என்று நிரூபிக்க மகாராணி சித்ரா கட்டாரியுடன் அங்கு காட்சி அளிக்கிறாள்.) சித்ரா:- இதோ இருக்கிறது அந்தக் கட்டாரி! கோபதி:- எங்கே? துர்ஜயன்:- காணாமல்போன என் கட்டாரியல்லவா இது உனக்கு எப்படிக்கிடைத்தது? மகாராஜா ஏதோ சூழ்ச்சி நடக்கிறது. கோபதி:- நீ யார்? சித்ரா:- என்னைத்தெரியவில்லையா? இந்த அபாக்கியவதியைத் தெரியவில்லையா சுவாமி கோபதி:- ஆ......! (ஆச்சரியத்தால்) சித்ரா! துர்ஜயன்:- சித்ரா! சபையோர்:- மகாராணி! மகாராணி!! மகாராணி!!! சித்ரா:- ஆம். மகாராணிதான்! துர்ஜயன்:- மந்திரி அன்பானந்தரோடு புதுவாழ்வு நடத்தப்போன புனித மகாராணி! கோபதி:- விபசாரி! சித்ரா:- ஆ! சுவாமி, என்னைக் கொன்றுவிடுங்கள். அந்த வார்த்தையை மறுமுறையும் கூறாதீர்கள். குழந் தையைக் காப்பாற்ற ஒரே இடத்திலும், கொடுமை பின் தொடர நான் பெற்ற வைரத்தை ஒரு கிழவியிடம் ஒப்பி விட்டு காளி கோயிலில் கண்ணீர் சிந்திக்கிடந்தவள் நான். இதோ குற்றவாளி கூண்டிலிருப்பவன் இந்நாட்டு இளவரசன் நம்முடைய மகன். காண்டி:- நான் இளவரசனா? என் தாயாரா? (தன் கையில் வைத்திருந்த பதக்கத்தைக் காண்டிபனிடம் காட்டுகிறாள். அவன் கழுத்தை தடவிப் பார்த்துவிட்டு உண்மையிலேயே, தன் தாயார் இருப்பதைக்கண்டு) காண்டி:- அம்மா! சித்ரா:- கலங்காதே, கண்ணே! இனி நமக்கு நல்ல காலம் தான். துர்ஜய:- மகனுக்கு ஒரு நீதி, மற்றவருக்கு ஒரு நீதி என்ற மரபில் மன்னர் பிறக்கவில்லை. மந்திரி அன்பானந்தரோடு மகாராணி ஓடியதையும் அவர் மறக்கவில்லை. கோபதி:- மகனும்! மகன்! காமத்தால் கருத்திழந்து, கள்ள நாய்களோடு ஓடிப்போனவள் காளி கோவிலில் இருந்தாளாம். கதை அளக்கிறாள் கதை! இந்த விபசாரியைப்பாதாள சிறையில் தள்ளுங்கள். இந்த வேசிக்கு உடந்தையாக இருந்த காளி கோவிலின் சட்டம் இன்றோடு ஒழியட்டும்! இவனையும் கொண்டுபோங்கள். இன்றோடு இவன் தலை பலிபீடத்தில் உருளட்டும். பட்டத்தின் இளவரசனைக் கொன்ற இந்தப் பாவியின் பச்சை ரத்தம் பலிபீடத்தை நனைக்கட்டும்.