காட்சி 6

Scene 6

10 பகுதிகளில்

## காட்சி 6. காண்டிபன்:- எங்கே ராணி? எங்கே? ராணி! ராணி இளவரசி! என் ராணி இளவரசியா!............. ராணி:- ஆம்! இளவரசிதான். காண்:- வேலைக்காரி என்றாயே வேஷக்காரி! சண்டாளி! உன் கண்களில் பொங்குகிறதே அந்தக் காமம்! உன் உதடுகளின் இடுக்கில் வடிகிறதே அந்த நஞ்சு! இவைகளை வைத்துக்கொண்டு, என் நம்பிக்கையை அணு அணுவாக சிதைத்துவிட்டாயே, அரண்மனை பிசாசே! ராணி:- தங்கள் காதலைப் பெறுவதற்காக. காண்:- காதல்! உன் காம வெறிக்காக போட்ட திரையின் பெயர், காதல்! அழுகல் நாற்றத்திற்குப் பெயர், அந்திமல்லிகையின் வாடை ஆஹா! ஆலகால விஷத்தை அமிர்தம் என்று எண்ணி ஏமாந்தேன்! அஸ்தமனத்தை உதயம் என்று நினைத்து அடியோடு கெட்டேன்! நரகமென்று ஒன்று இருந்தால் உன் நரம்பிற்கு ஒரு நாகத்தை விட்டு கடிக்கவிடுவேன்... அப்போதும் இந்தக் கள்ளியின் நம்பிக்கை நிவர்த்தி கிடையாது. இளவரசி இரக்கமற்ற பேய்! ஏழைகளை வாட்டி அவர்கள் எலும்பைத் தின்று உடலை மெருகேற்றிக்கொண்ட ராஜவம்சத்தில் உதித்த பிரம்ம ராக்ஷசி! உன் வனப்பாலென்னை மயக்கி, வாக்குவசீகரத்தால் என் வாலிப உள்ளத்தை உருக்குலைத்து நடுத்தெருவில் விட்டு விட்டாயே நாசகாரி! உன்மேல் தவறில்லை! மன்னர்களுக்கு புதுப்புது ராஜ்யங்களைப் பிடிக்கும் ஆசை! அவன் மகளுக்கு புதுப்புது கணவனைப் பிடிக்கும் ஆசை! ராணி:- இளவரசி ஆணையிடுகிறேன், தயவுசெய்து வெளியேறுங்கள்! காண்:- வெளியேறுகிறேன், ஆனால் வெறுங்கையுடன் போக உத்தேசமில்லை, காமவெறியேற்றி என்னைக் கலங்கச்செய்த உன் விழிகளைப் பிடுங்கிக்கொண்டுதான் வெளியேறுவேன்! நம்பினவனை நட்டாற்றில் விட்டதுமல்லாமல், வெளியே செல்லுங்கள் என்று ஆணையிட்ட அந்த இரும்பு இதயத்தை பெயர்த்துக்கொண்டுதான் வெளியேறுவேன். (கழுத்தை நெறிக்கிறான்) ரம்பா:- சிப்பாய்கள்! சிப்பாய்கள்! ராணி:- இப்படி ஓடிவிடுங்கள். ரௌத்:- என்ன சதி நடத்துகிறாய்? எங்கு வந்தான் அவன். ராணி:- என்னைக் கேட்டுக்கொண்டு வரவில்லை. ரௌத்:- என் வாளுக்கு வந்த விருந்து தவறிவிட்டது. அந்த ஊதாரி என் கையில் அகப்பட்டிருந்தால் உருத்தெரியாமல் ஆக்கியிருப்பேன்! ராணி:- வீரர்! ரௌத்:- சந்தேகமா? உன் அப்பனை என் அடிமையாக்கிய பிறகும் என் வீரத்தில் சந்தேகமா? ராணி:- சந்தேகமே இல்லை! தூங்குபவன் தலையில் கல்லைப்போடுவதில் சூராதிசூரர். ரௌத்:- நான் வேடிக்கை பேச வரவில்லை! ராணி:- பேசும்படி யாரும் பிரார்த்திக்கவில்லை! ரௌத்:- போதும் உன் துடுக்கு உன்னை இப்படியே விட்டுவைத்தால், நீ எப்படியும் தப்பிவிடுவாய்; ஓய்! பிரயாணத்திற்கு தயார் செய்யுங்கள்!.....