களஞ்சியப் பகுதி 62

தூக்குமேடை

63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல

[முகமூடிட்ட உருவம் தூக்கிலிடப்படும்போது கயிறு வெட்டப்படுகிறது. பூங்காவனம் ஓடிவருகிறாள்] பூங் : முத்தா!...முத்தா!... [முகத்தை மூடியுள்ள துணியை விலக்குகிறாள். அங்கே மாப்பிள்ளைதாசர் தெரிகிறார்....அலறுகிறாள்] பூபதி : என்ன இது? முத்தனுக்கு பதில் சாமியார்?...இது எப்படி?... சுக : பெரியவரே!...நான் சொல்கிறேன்! சாமியார் எப்படி மாறினார் என்று எனக்குத் தெரியும்!...முத்தனுடைய தோழர்கள் முத்தனை விடுவித்து அவனது கருப்பு உடைகள் கழற்றி எறிந்து விட்டு ஓடிவிட்டார்கள்...அதைப் பார்த்த சாமியார் உடனே அந்த உடையை தான் போட்டுக்கொண்டு முத்தன் போல் நின்றார்...இந்த வீரர்கள் ஏமாந்து போய் சாமியாரை முத்தன் என்று நினைத்து—இப்படி—இது மாதிரி—நடந்து விட்டது. மாப்பிள்ளை : யாரும் ஆச்சரியப்படவேண்டாம்! நானே தேடிக்கொண்ட முடிவுதான் இது. என் குற்றங்களுக்கு பிராயச்சித்தம் செய்து கொண்டேன். என் மகனுக்காக நான் செய்யும் முதலும், கடைசியுமான தியாகம் இதுதான்! பட்டினத்தாரும், பதினெட்டு சித்தர்களும், பண்புடைய துறவிகளும் வாழ்ந்த பூமியில் நானோர் களங்கமாக வந்தேன், இதோ, ஒழிகிறேன்! பூங்காவனம்! பூங்காவனம்! என்னை மன்னித்து விடு! என்னை மன்னித்து விடு! எல்லோரும் என்னை மன்னித்து விடுங்கள்! மன்னித்து விடுங்கள்!... (பேச்சு முடிகிறது; சாமியாரின் வாழ்க்கை முடிகிறது)