களஞ்சியப் பகுதி 59
சிறைச்சாலை
63 பகுதிகளில்·மூல எண்ணிடல் அல்ல
[கதவு திறக்கப்படுகிறது! முத்தாயி ஓடி வருகிறாள்] முத் : அத்தான்!... முத்தன் : இன்பமே! கலங்காதே! இன்று நமக்குக் கடைசி நாள்! கடைசி சந்திப்பு!...காதல் பாடும் உன் கண்கள் இனிநான் பார்க்க முடியாது! தேன் பொழியும் உன் அதரங்களின் தித்திப்பை இனி நான் சுவைக்க முடியாது! இன்னும் இரண்டொரு விநாடிகள்; அதற்குமேல் உன்னைப் பற்றிய இனிய நினைவுகளை இந்த ஏழை முத்தனுள் சுமக்க முடியாது!... முத் : அத்தான்! நம்மை யாரும் பிரிக்கவே முடியாது—நானும் உங்கள் பின்னாலேயே வருவேன்...... முத்தன் : உம்...பைத்தியம்! ஏதோ காதலர்களுக்காக ஒரு உலகம் கட்டிவைத்திருப்பதாகவும், அந்த உலகத்தில் செத்துப்போன காதலர்கள் குடிபேறலாம் என்றும் யாரோ ஒரு ஆசைக்காரன், கிறுக்கி வைத்துவிட்டுப் போனான்! அதை நம்பி நீயும் பின்னாடிவிடாதே! உயிர் விட்டுப்போகும் நான் உன்னிடம் கேட்கிற ஒரே ஒரு அன்பு உத்தரவு... முத் : எதுவானாலும் கேட்கிறேன்... முத்தன் : நீ சாகாமல் வாழ வேண்டுமென்பது தான்... முத் : ஆ!...நான் வாழ முடியாதவள் அத்தான்—இனி நான் வாழக்கூடாது... முத்தன் : உம்...நீயா வாழக்கூடாது? இந்த நீள் வையத்தில் யார் யாரோ வாழ்கிறார்கள்—நீதானா வாழக்கூடாது? நீசத்தனம் படைத்தோன்—மோசக்குணம் உடையோன்—நேர்மையை முறிப்போன்—பாசத்தை உடைப்போன்—ஆணவனும் வாழ்கிறான், என் அழகுமே! நீதானா வாழக்கூடாது? யுத்தம் யுத்தமெனப் பித்தம் பிடித்தலையும் ரத்த வெறியனும் வாழ்கிறான், என் சித்திரப் பாவையே! நீதானா வாழக்கூடாது? என் செல்வமே! இந்த வையகத்தில் வாழ வரைக் கண்டு வயிற்றெரியும் வஞ்சகனும் வாழ்கிறான்—நெஞ்சமில்லாக் கொடியோனும் வாழ்கிறான்—என் வைர முழு நிலவே! நீதானா வாழக்கூடாது? உழைக்க ஒருவன்—தழைக்க ஒருவன் என்று கூறி, உழைப்பில்லாமல் வந்தவனும் ஆனந்தமாகத்தான் வாழ்கிறான், அஞ்சுகமே! யார் சொன்னது நீ வாழக்கூடாது என்று?...என் ஆருயிரே! தாண்டவம் புரிந்திடும் ஆண்டவன் நான்—ஆகவே இந்த உண்டியில் நிரப்புங்கள் என்று கூறி ஊரை ஏய்த்து வாழும் பட்டுப் பீதாம்பர பரதேசியாம் மாய்கைநாத சாமியார் வாழ்கிறார்—கொட்டு முழக்கோடும், கொடி பிடிப்போர் ஆயிரவரோடும்! அந்த பாம்புகள் வாழலாம், பைங்கொடியே! நீ வாழக் கூடாதா?... அழுதாரும் அழகுத் திருநகரை பழுதாராக்கி பொன்னையும், பொருளையும் சுரண்டியது போதாதென்று, மண்ணையும் அடிமை கொண்ட மகோன்மத்தனும் வேங்கை நாட்டான் வாழ்கிறான், எடுபிடிகளோடு, ஏராளமானச் செல்வாக்கோடும்! கப்பம் கட்டுவோர்—காவடி தூக்குவோர்—கட்டியம் கூறுவோர்—கால் கழுவிப் பிழைப்போர்—களிப்போடுதான் வாழ்கிறார்கள் கண்ணழகி, இந்தக் காசினியில்!... நிலாப் பதுமையே! நீ மட்டும் வாழக் கூடாது என்று யார் சொன்னது? முத் : புலிக் காட்டில் மான் வாழ முடியுமா அத்தான்?... முத்தன் : மானம் புலி நகத்ததைவிட கூர்மையானது மலர்க்கொடியே! கானம் பாடும் வானம்பாடிகள், கழுகுக்கும் வல்லூறுக்கும் மத்தியிலே வாழத்தான் வேண்டி இருக்கிறது, என் அன்பே! நான் போனபிறகு நீயும் இந்தப் பண்பிலா மனிதர் கூட்டத்திடையே வாழத்தான் வேண்டும். வாழ்வது உனக்காக அல்ல; உன் வயிற்றிலே வளரும் நம் காதல் களஞ்சியத்தை—பிள்ளைக் கனியமுதை—பேசும் பொற் சித்திரத்தை—நான் காணமுடியா விட்டாலும் நீ கண்டுகளிப்பவள்; அதைக் காப்பாற்ற வேண்டியவள்!... அதை முத்தனின் வம்சம் அடியோடு அழிந்து விட்டதில்லை என்று இந்த உலகத்தின் காதிலே உரக்கச் சொல்லப் போவது, உயிரே, அந்த இன்பச் செல்வந்தானே! அந்த எதிர் காலத்தை நினைத்து இப்போதே நான் ஒரு சந்தோஷப் பெருமூச்சு விட்டுக் கொள்கிறேன்... முத் : அத்தான்.... முத்தன் : அழாதே கண்ணே! அழாதே! உன்னைச் சிரித்த முகத்தோடு என் சிந்தை குளிர ஒருமுறைப் பார்க்கிறேன். எங்கே என் செந்தமிழே! சிரிப்புக் காட்டு... முத் : அத்தான்... முத்தன் : மதுஊறும் உன் இதழ்களே முத்தமிட்டேன். அது பிடிக்கவில்லை. உலகுக்கு நீதிக்கு—நியாயத்துக்கு—ஆகையால் மானத்தை முத்தமிடப் போகிறேன்! கடைசியாக ஒன்று கேட்கிறேன் முத்தாயி; கடைசியாக ஒன்று கேட்கிறேன்! நாம் இருவரும் சேர்ந்து பாடுவோமே அந்தக் காதல் பாட்டு, அதை இனிமேல் எங்கு கேட்கப்போகிறேன்; எங்கே அதை ஒரு தடவை பாடு!... கண்ணே பாடு! நீ பாடாவிட்டால் உன் காதலன் நிம்மதியாக சாகமாட்டான்...பாடு கண்ணே, பாடு! [அவள் பாடுகிறாள் அழுது கொண்டே. அவன் நடந்து கொண்டே இருக்கிறான் தூக்குமேடை நோக்கி]